நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே இருக்கிறது அத்திப்பழகானூர். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் மகள் ஜனனி (14) பத்தாம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் மகள் ரட்சணாஸ்ரீ 8-ம் வகுப்பு படித்து வந்தார். இருவரும் ராசிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்தனர். இந்த நிலையில், நேற்று பள்ளி விடுமுறை என்பதால், அத்திப்பழகானூர் அருகே உள்ள நத்தமா குட்டையில் இரண்டு மாணவிகளும் குளிக்கச் சென்றுள்ளனர்.

சிறுமி உடல் அருகே நாய்

அப்போது, அந்தக் குட்டையில் தண்ணீர் நிரம்பி இருந்ததால், எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குச் சென்ற இரண்டு மாணவிகளும் குட்டையில் மூழ்கி பலியாகினர். பின்னர், குட்டையில் மூழ்கிய மாணவிகளின் சடலங்களை ஊர் பொதுமக்கள் மீட்டெடுத்து பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமணைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ராசிபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ரட்சணாஸ்ரீ வீட்டில் வளர்ப்பு நாய் ஒன்றை வளர்த்து வந்தனர். அந்த நாய் ரட்சணாஸ்ரீ மீது பாசமாக இருக்குமாம். அதனால், ரட்சணாஸ்ரீ உடல் கிடத்தப்பட்ட பகுதியில் அவர் உடலை சுற்றிச் சுற்றி வந்தது. பின்னர், சடலத்தைவிட்டு நகராமல் சோகத்துடன் அமர்ந்திருந்தது.

சிறுமி உடல் அருகே நாய்

பின்னர், மாணவி உடலை உடற்கூராய்வுசெய்ய அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றபோது, அந்த நாயும் ஓடிச்சென்று வாகனம் அருகில் நின்றது. அதேபோல், அந்த வாகனத்தை இயக்கிச் சென்றபோது, அந்த நாயும் கூடவே அந்த வாகனத்தின் பின்னே கொஞ்சதூரம் ஓடியது, அங்கிருந்தவர்கள் கலங்க வைத்தது. சிறுமிகளை இழந்த உறவினர்கள், 'அய்யோ, பிஞ்சிலேயே இப்படி போகணுமா?' என்று கதறியழுதது, அங்கிருந்தவர்களை கதிகலங்க செய்தது.

இந்த நிலையில், இது குறித்து தகவலறிந்த தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் முத்துக்காளிப்பட்டி மின் மயானத்தில் வைக்கப்பட்டிருந்த குட்டையில் மூழ்கி உயிரிழந்த இரு சிறுமிகளின் உடல்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், சிறுமிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். இதற்கிடையில், இந்த சோக சம்பவத்தை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குட்டையில் மூழ்கி உயிரிழந்த மாணவிகளின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

வாகனத்தின் பின்னே நாய்

அதோடு, இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், ``நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள அத்திப்பழகானூர் குட்டையில் மூழ்கி, ரட்சணா ஸ்ரீ மற்றும் ஜனனி ஆகிய இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவத்தை கேட்டு, மிகுந்த துயரம் அடைந்தேன். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்தாருக்கு எனது வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். குட்டையில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.from மாவட்ட செய்திகள் https://ift.tt/mMoA2IW