தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வந்தது. இப்பள்ளிக் கட்டடம் மிக மோசமாக இருந்ததால், புதிய பள்ளிக் கட்டடம் கட்டுவதற்காக பழைய கட்டடம் இடிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து, இப்பள்ளி மாணவிகள், ஏரலில் இருந்து பேருந்து மூலம் சிறுத்தொண்டநல்லூரில் உள்ள முத்துமாலை அம்மன் மேல்நிலைப்பள்ளிக்குச் சென்று, இவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வகுப்பறையில் பாடம் படித்து வருகிறார்கள்.

இந்நிலையில், வழக்கம் போல் ஏரலில் இருந்து சிறுத்தொண்டநல்லூருக்கு மாணவிகள் பேருந்தில் சென்றனர். பேருந்திற்குள் ஒரு பை கிடந்துள்ளது. இதைப் பார்த்த 9-ம் வகுப்பு மாணவிகள் மைக்கேல் சாதனா, பவித்ரா தேவி ஆகியோர் அந்த பையை எடுத்து திறந்து பார்த்துள்ளனர்.

மாணவி பவித்ரா தேவி

அதில் ஒரு தங்க செயின் இருந்துள்ளது. அந்தப் பையை பள்ளியின் தலைமை ஆசிரியை விஜிலா மேரியிடம் ஒப்படைத்து நடந்ததைக் கூறியுள்ளனர். இதனையடுத்து தலைமை ஆசிரியை, ஏரல் காவல் நிலையத்தில் அந்தப் பையை ஒப்படைத்தார். போலீஸார் விசாரணை நடத்தியதில் ஏரல், சேர்மன்கோயில் தெருவைச் சேர்ந்த லெட்சுமி தவறவிட்ட இரண்டரை சவரன் தங்கநகை என்பது தெரிய வந்தது.

அந்தப் பையை கண்டெடுத்த இரண்டு மாணவிகளை ஏரல் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் அழைத்து சால்வை அணிவித்துப் பாராட்டியதுடன், அந்த மாணவிகளே லெட்சுமியிடம் தவறவிட்ட பையை ஒப்படைத்தனர்.

இதுகுறித்து அந்த மாணவிகளிடம் பேசினோம்... ``பஸ்சில் ஒரு மஞ்சப்பை கிடந்துச்சு. அதை நாங்க ரெண்டு பேரும்தான் எடுத்துப் பிரிச்சுப் பார்த்தோம். அதுல நாலு பத்து ரூவா, ஒரு ஐம்பது ரூவா, ஒரு நூறு ரூவா நோட்டுகளும், கொஞ்சம் சில்லறைக் காசுகளும் இருந்துச்சு. அதோட ஒரு செயின் இருந்துச்சு. அந்தப் பை யாருடையதுன்னு பஸ்ஸுக்குள்ள இருந்த ஒவ்வொருத்தர்கிட்டயும் கேட்டோம். யாரும் எதுவும் பதில் சொல்லல. ஸ்கூலுக்கு வேற நேரமாயிடுச்சு. அதனால, அந்தப் பையை ஸ்கூல் பைக்குள்ள வச்சுக் கொண்டு போயிட்டோம். ஹெச்.எம் மேடம்கிட்ட நடந்ததைச் சொல்லி, அந்தப் பையைக் கொடுத்தோம். எங்களுக்கு கை கொடுத்து தோளைத்தட்டி பாராட்டினாங்க.

மாணவி மைக்கேல் சாதனா

மேடம்தான் போலீஸ் ஸ்டேஷன்ல சொன்னாங்க. ஏரலைச் சேர்ந்த லெட்சுமிங்கிற ஒரு பாட்டியோட பையின்னு தெரிய வந்துச்சு. பைக்குள்ள என்னெல்லாம் இருந்துச்சுன்னு நாங்களே அந்தப் பாட்டிகிட்ட கேட்டேன். ரூவா நோட்டுல இருந்து செயின் மாடல் வரை சரியாச் சொன்னாங்க. ஸ்டேஷன்ல போலீஸ் அங்கிளும் எங்களைப் பாராட்டி சால்வை போத்தினாங்க. பையயையும் அந்தப் பாட்டிகிட்ட எங்களையே கொடுக்க சொன்னாங்க. அந்தைப் பையை வாங்கின பாட்டி எங்களைப் பார்த்து கண்ணீரோட கையெடுத்துக் கும்பிட்டு, `நீங்க நல்லா இருக்கணும் கண்ணுகளா..’னு சொன்னாங்க. அதைப் பார்த்து எங்களுக்கும் கண் கலங்கிடுச்சு” என்றனர்.from மாவட்ட செய்திகள் https://ift.tt/35l4dto