கோவை மாநகராட்சி எல்லைக்குள் போஸ்டர் கலாசாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசியல் கட்சிகள், உள்ளூர் அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு திரும்பிய பக்கமெல்லாம் போஸ்டர்களை ஒட்டி அட்ராசிட்டி செய்து வருகின்றன.

கோவை போஸ்டர் கலாசாரம்

குறிப்பாக அரசியல் கட்சிகள் மெகா சைஸில் போஸ்டர் ஒட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளன. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்தன.

இதையடுத்து, பொது இடங்களில் போஸ்டர் ஒட்டுபவர்கள்மீது அபராதம் விதிப்பதுடன் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. விதிகளை மீறி போஸ்டர் ஒட்டிய சில தனியார் நிறுவனங்கள்மீது வழக்கு பதிவும்செய்யப்பட்டது. ஆனால் அரசியல் கட்சிகள் போஸ்டர் ஒட்டுவதைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

கோவை திமுக போஸ்டர்

முக்கியமாக தி.மு.க மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளரும், மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் லக்குமி இளஞ்செல்வியின் கணவருமான நா.கார்த்திக், அவிநாசி சாலையில் புதிதாகக் கட்டி வரும் மேம்பாலத்தில் ஏராளமான போஸ்டர்களை ஒட்டி வருகிறார்.

ஆனால் ஆளும் கட்சி என்பதால் அதை நீக்கவும் செய்யாமல், அவர்மீது நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்று சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தற்போதுவரை கார்த்திக் ஒட்டியுள்ள போஸ்டர்கள் நீக்கப்படவில்லை.

கோவை அரசியல் கட்சிகள் போஸ்டர்

இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் கூறுகையில், ``அரசியல் கட்சிகளுக்கும் கூட்டம் போட்டு போஸ்டர் ஒட்டக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக அவர்களுக்கு 10 நாள்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி யார் விதிகளை மீறினாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.

இது குறித்து திமுக மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் கூறுகையில், ``அ.தி.மு.க ஆட்சியில் எங்களை கொடி கம்பம்கூட நடவிடாமல் அராஜகம் செய்தனர். முதல்வரின் கோவை வருகையை வரவேற்று போஸ்டர் ஒட்டினோம். அதே போல முக்கியத்துவம் வாய்ந்த நலத்திட்டங்கள் குறித்து போஸ்டர்களாக ஒட்டினோம்.

கோவை திமுக போஸ்டர்

போஸ்டர் ஒட்டுவது என்பது எல்லா இடங்களிலும் நடைமுறையில் இருக்கிறது. இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகளுக்கு 10 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் புதிதாக எந்த போஸ்டரையும் ஒட்டவில்லை.” என்றார்.

சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை அரசு நிர்வாகம் உணர வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.from மாவட்ட செய்திகள் https://ift.tt/QEhb8oK