மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை கண்டித்து புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் கவர்னர் மாளிகையை நோக்கி பேரணியாகச் சென்று முற்றுகையிடும் போராட்டம் இன்று நடந்தது. அதில் கலந்துகொண்டு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “நாட்டில் விலைவாசி விஷம்போல் உயர்ந்துவிட்டது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை. இப்படியான பிரச்னைகளை முன்வைத்து காங்கிரஸ் கட்சியின் தலைவர்களும், தொண்டர்களும் அறப்போராட்டம் நடத்த வேண்டும் என்று சோனியா காந்தி கட்டளையிட்டார். அதன்படி இன்று அனைத்து மாநிலங்களிலும் போராட்டம் நடக்கிறது. நாட்டில் 25 கோடி பேருக்கு வேலையில்லை. அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

தியாகச் சுவரில் சாவர்க்கர் பெயர் பதிக்கும் தமிழிசை

அதை கண்டித்து நாங்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளோம். அதைப்பற்றி மோடி அரசு கவலைப்படவில்லை. 400 ரூபாயாக இருந்த சமையல் எரிவாயு சமையல் எரிவாயு தற்போது 1,050 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி வரி என்ற போர்வையில் அரிசி, கோதுமை, மைதா, தயிர், மோர், பால், பென்சில் ரப்பர், மருத்துவ உபகரணங்கள் என எல்லாவற்றுக்கும் வரி போட்டு விலையை உயர்த்திவிட்டார்கள். இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபற்றி கேட்டால் அமலாக்கத்துறை மூலம் அரசியல் கட்சித் தலைவர்களை திட்டமிட்டு பழிவாங்குகிறது மோடி அரசு. விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினால் காங்கிரஸ் கட்சியினர் தங்களுடைய தலைவர்களை பாதுகாப்பதற்காக போராட்டம் நடத்துகின்றனர் என்று பொய்யான குற்றச்சாட்டை வைக்கிறார்கள்.

நாட்டில் ஜனநாயகம் கொஞ்சம் கொஞ்சமாக செத்து கொண்டிருக்கிறது. ஜனநாயகத்தில் மோடிக்கு நம்பிக்கை கிடையாது. அவர் ஒரு அராஜக ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறார். மக்களை கிள்ளுக்கீரையாக நினைக்கிறார். மோடி அரசுக்கு முடிவு கட்டும் காலம் வெகு துரமில்லை. அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லாம் ஒருங்கிணைந்து மோடியை விரைவில் வீழ்த்துவார்கள். அதற்கு முக்கிய காரணம், மோடி அரசு மக்களை முற்றிலுமாக வஞ்சிக்கிறது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. இதனால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து கொண்டிருக்கிறது. கண்டிப்பாக இதற்கு விடிவு காலம் வரும். வீர் சாவர்க்கார் ஒரு நாள் சிறையில் இருந்ததால் அவரை தியாகி என்று கவர்னர் கூறுவது விந்தையாக இருக்கிறது. அவர் சிறையில் இருக்கவில்லை என்று நான் கூறவில்லை.

ஆனால், சுதந்திர போராட்ட சமயத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு விஸ்வாசியாக இருப்பேன், பிரிட்டிஷ் சட்டதிட்டங்களுக்கு கட்டப்பட்டு நடப்பேன், 5 ஆண்டுகள் அரசியல் செய்ய மாட்டேன், பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போராட மாட்டேன் என்று மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்த வீர் சாவர்க்கர் ஒரு தியாகியா? ஆங்கிலேயர்களிடம் அடிமையாக இருந்தவரை தியாகியாக நான் ஏற்க மாட்டேன். கவர்னரை வர சொல்லுங்கள். மேடை போட்டு வீர் சாவர்க்கரை பற்றி விவாதம் நடத்துவோம். அந்த விவாதத்தில், உண்மையிலேயே வீர் சாவர்க்கர் தியாகி என்று மக்கள் ஏற்றுக் கொண்டால் நானும் ஏற்றுக் கொள்கிறேன். நாட்டுக்காக போராடிய தலைவர்கள் நிறைய பேர் உள்ளார்கள். என்னை பொறுத்தவரை வீர் சாவர்க்கர் ஒரு கோழை சாவர்க்கர்தான்” என்றார்.from மாவட்ட செய்திகள் https://ift.tt/9jQ5zeN