கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்திருக்கும் கணியாமூரில் இயங்கிவருகிறது அந்த தனியார் உயர்நிலைப்பள்ளி. ரவிக்குமார் என்பவருக்கு சொந்தமான அந்த பள்ளியில் சுமார் 3,500 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். வேப்பூரை அடுத்திருக்கும் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் இந்த பள்ளியின் விடுதியில் தங்கி 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் ஜூலை 13-ம் தேதி காலை 5.30 மணிக்கு மயங்கிய நிலையில் மாணவி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பள்ளி நிர்வாகம், விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து அவர் குதித்துவிட்டதாக தெரிவித்திருக்கிறது. அப்போது மாணவியை சோதித்துப் பார்த்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று ஜூலை 17-ம் தேதி நடைப்பெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. பேருந்துகள் எரிக்கப்பட்டு, பள்ளியும் அடித்து நொறுக்கப்பட்டது.

அதையடுத்து மாணவியின் மரண வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றிய டி.ஜி.பி சைலேந்திரபாபு, சம்பவம் குறித்து விசாரிக்க தனிக் குழுவையும் அமைத்து உத்தரவிட்டார். அந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி காவல்துறை விசாரணை செய்துவரும் நிலையில், ஜூலை 12-ம் தேதி இரவு அந்த மாணவி வகுப்பறையில் நடமாடுவதாக சில தினங்களுக்கு முன்பு சிசிடிவி வீடியோ காட்சி ஒன்று வெளியானது. அதையடுத்து மாணவி மாடிப் படிக்கட்டில் ஏறுவதாக இரண்டாவது வீடியோ வெளியானது. தற்போது ஜூலை 13-ம் தேதி காலை பள்ளியின் ஊழியர்கள் மாணவியின் உடலை தூக்கிச் செல்வதாக மற்றொரு வீடியோ வெளியாகியிருக்கிறது. பள்ளியின் சிசிடிவி காட்சிகள் என்று கூறப்படும் அந்த வீடியோவில், நான்கு பேர் ஒருவரை தூக்கிச் செல்வது போன்ற காட்சி பதிவாகியிருக்கிறது. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி தரப்பில் விசாரித்தபோது, தாங்கள் எந்த வீடியோவையும் வெளியிடவில்லை என்று கூறிய அவர்கள், கருத்து கூறவும் மறுத்துவிட்டனர். அதேசமயம் தொடர்ச்சியாக இந்த வீடியோக்களை கசிய விடுவது யார் என்றும் விசாரணை செய்து வருகிறது சி.பி.சி.ஐ.டி.from மாவட்ட செய்திகள் https://ift.tt/a4hBuU2