‘பங்குச் சந்தை முதலீட்டில் ஆண்டுக்கு 24% வருமானம் தருவதாகக் கூறி, ஏஜென்ட்டுகள் மூலமாகப் பொதுமக்களிடம் பணம் வசூலிக்கிறது வேலூர், காட்பாடியில் இயங்கிவரும் ஐ.எஃப்.எஸ் நிறுவனம் ( IFS )’ என்று கிளம்பிய புகார்களின் அடிப்படையில், ‘கோடி கோடியாகச் சுருட்டுகிறார்கள், நிதி நிறுவனத்தை நோக்கி நீளும் புகார்கள், என்ற தலைப்பில் 06/07/2022 தேதியிட்ட ஜூ.வி இதழில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது. 30.07.2022 தேதியிட்ட ஜூ.வி இதழில், ‘பொருளாதாரக் குற்றப்பிரிவின் விசாரணை வலையில்... ஐ.எஃப்.எஸ்!’ என்ற தலைப்பில் ‘ஃபாலோ-அப்’ கட்டுரையும் வெளியானது.

ஜனார்த்தனன், லட்சுமி நாராயணன் சுந்தரம்

அதைத்தொடர்ந்து, பலரும் எதிர்பார்த்தபடியே ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் கேள்விக்குறியாகியிருக்கின்றன. அந்த நிறுவனத்தை நடத்திவந்தவர்களான லட்சுமி நாராயணன் சுந்தரம், ஜனார்த்தனன், மோகன் பாபு உள்ளிட்ட பெருந்தலைகள் பலரும் தலைமறைவாகியிருக்கிறார்கள். அவர்களின் செல்போன்களும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கின்றன. பினாமி ஏஜென்ட்டுகளாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த பலரும்கூட பதுங்கியதால், அவர்களுடைய பெரும்பாலான அலுவலகங்கள் மூடிக்கிடக்கின்றன. நம்பி ‘முதலீடு’ செய்த மக்கள் பதற்றத்துடன் படையெடுக்கிறார்கள். ஆனால், பூட்டுகள் மட்டுமே தொங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியுடன் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்.

இது குறித்தும், நேற்று முந்தினம் வெளிவந்த ஜூ.வி இதழில், ‘ரூ.10,000 கோடி அபேஸ்..? தலைமறைவான ‘ஐ.எஃப்.எஸ் பிரதர்ஸ்,’ காப்பாற்றுகிறதா காவல்துறை?’ என்ற தலைப்பில் மற்றுமொரு ‘ஃபாலோஅப்’ கட்டுரை வெளியிடப்பட்டது. இதையடுத்து, ‘ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனம் மீது வரும் திங்கள்கிழமைக்குள் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும்’ என தமிழ்நாடு காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்றைய தினம் உத்தரவிட்டது. சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தொடர்ந்த வழக்கில், இந்த உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டிருக்கிறது.

அதைத்தொடர்ந்து, ஐ.எஃப்.எஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டுவந்த அரசியல் கட்சி புள்ளிகள், காவல்துறையினரின் பெயர்களும் அடுத்தடுத்து வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திவருகின்றன.

லட்சுமி நாராயணன் சுந்தரத்தின் வீடு

இதே புகாருக்குள்ளான காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தன் நேற்று இரவு காத்திருப்போர் பட்டியலுக்கு தூக்கியடிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து, ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனம் தொடர்புடைய 21 இடங்களில் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் இன்று காலை முதல் ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள். டெல்லியிலிருக்கும் ஐ.எஃப்.எஸ் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல, வேலூர் காட்பாடியிலிருக்கும் தலைமை அலுவலகம், அரக்கோணம், நெமிலி, காஞ்சிபுரம் உள்ளிட்ட அலுவலகங்களிலும் தீவிர சோதனை நடக்கிறது. காட்பாடி வி.ஜி.ராவ் நகரிலிருக்கும் லட்சுமி நாராயணன் சுந்தரத்தின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. அந்த வீட்டில் 2 காவலாளிகள் இருக்கிறார்கள். ஐந்துக்கும் மேற்பட்ட போலீஸார் வீட்டுக்கு உள்ளே சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதேசமயம், தலைமறைவாக உள்ள ஐ.எஃப்.எஸ் இயக்குநர்களைப் பிடிக்கவும் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.from மாவட்ட செய்திகள் https://ift.tt/gUZzbYS