கேரள மாநிலம், மாவேலிக்கரை அறுநூற்றிமங்கலத்தைச் சேர்ந்தவர் எஸ்.கண்மணி. தந்தை சசிகுமார், தாய் ரேகா. கண்மணிக்கு, பிறவியிலேயே இரண்டு கைகளும் இல்லை. கால் சராசரியான வளர்ச்சி இல்லாதது என உடலில் பல பிரச்னைகள் இருந்தன; ஆனால், மனம் நிறைய தன்னம்பிக்கையை கொண்டவர் கண்மணி.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பிளஸ் டூ தேர்வின் போது, தேர்வு எழுத உதவியாளர் நியமிக்காமலும், கூடுதல் கால அவகாசம் கேட்காமலும், தேர்வு எழுதி கவனம் ஈர்த்தார். எல்.கே.ஜி படிக்கும் காலத்திலேயே, கால்களால் எழுத பயிற்சி எடுத்துவிட்டார். பள்ளியில் படிக்கும் சமயங்களில் காலால் ஓவியம் வரைந்து, பரிசுகளை குவிக்கும் அளவுக்கு திறமையை வளர்த்துக் கொண்டார்.

கண்மணி

இவர், ஜனாதிபதியின் ஓவியத்தை கால்களால் வரைந்து அதை ஜனாதிபதிக்கே பரிசாக அளித்து அசத்தினார். பள்ளி படிக்கும்போது நடனம், சங்கீதம் என கலை நிகழ்ச்சிகளிலும் கண்மணி பங்கெடுத்திருக்கிறார். 2019-ம் ஆண்டில், சிறப்பான படைப்பாற்றலுக்கான மத்திய சமூக நீதி அமைச்சகத்தின் விருதை பெற்றுள்ளார் கண்மணி. 2019-ல் பிளஸ் டூ முடித்த கண்மணி, திருவனந்தபுரம் சுவாதி திருநாள் அரசு சங்கீத கல்லூரியில் கடந்த மூன்று ஆண்டுகளாக பி.பி.ஏ படித்தார்.

இப்போது, கேரள பல்கலை கழகத்தில், முதல் ரேங்கில் வெற்றி பெற்ற கண்மணி, பிற மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை விதைத்திருக்கிறார். சங்கீதத்தில் முதுகலை படிக்க வேண்டும் என்ற லட்சியத்தை நோக்கி நகர்கிறார்.

பிறவியிலேயே ஏற்பட்ட குறைபாடுகளை தாண்டி, இந்த சமூகத்துக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் விதமாக தனது அன்றாட செயல்பாடுகளை, வீடியோவாக எடுத்து யூ டியூப்பில் பதிவேற்றம் செய்து வருகிறார் கண்மணி.

தன்னம்பிக்கை

கேரள பல்கலைக் கழகத்தில் முதல் ரேங்க் பெற்றுள்ள கண்மணி கூறுகையில், "கல்லூரியில் ஒவ்வொரு தேர்விலும் நல்ல மதிப்பெண் கிடைத்தது. ஆனால் இவ்வளவு மதிப்பெண் கிடைத்து நான் முதலிடம் பிடிப்பேன் என எதிர்பார்க்கவில்லை. ஒன்றரை வருடம் கொரோனா லாக்டவுன் காரணமாக, ஆன்லைன் வகுப்பில் தான் படித்தேன். ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே ஆஃப் லைன் வகுப்புகள் கிடைத்தன. அந்த ஒன்றரை வருடமும் ஜாலியாக படித்தேன். எல்லா தேர்வுகளையும் நன்றாக எழுதினேன். சங்கீதத்தில் முதுகலை படிக்க விரும்புகிறேன்" என்றார் உற்சாகமுடன்.from மாவட்ட செய்திகள் https://ift.tt/Pta7IEG