நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை அடுத்துள்ள வீரணம்பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கன்னிமார் கோவில் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் சப்ளை செய்வதற்காக அப்பகுதியில் சுமார் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று உள்ளது. இந்த தொட்டியில் இருந்து நான்கு பகுதிகளாகப் பிரித்து, வெவ்வேறு குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

வழக்கம்போல் நேற்று காலை வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்பட்ட போது, ஒரு சில வீடுகளில் மட்டும் விவசாய பயிர்களுக்கு தெளிக்கும் பூச்சி மருந்து வாடையுடன் தண்ணீர் வருவதை உணர்ந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து, ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சிமன்றத் தலைவர், உடனடியாக வீடுகளுக்கு தண்ணீர் செல்லும் பைப்பை முழுமையாக அடைத்தார். இதுகுறித்து, பரமத்தி காவல் நிலைய போலீஸாருக்கும், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வருவாய்த் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

அந்த மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உள்ளிட்ட அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, மேல்நிலை தண்ணீர் தொட்டியில் மருந்து கலக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டும் பூச்சி மருந்து கலந்து இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. இது, திட்டமிட்டு செய்யப்பட்டதா, முன்பகை காரணமாக பழிதீர்க்க இப்படி யாரேனும் இந்த காரியத்தை செய்தார்கள் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தண்ணீர் தொட்டியில் இருந்த தண்ணீரை முழுமையாக அகற்றி,, தண்ணீர் தொட்டி மற்றும் குடிநீர் குழாய்களை முழுமையாகச் சுத்தம் செய்து பின்னர் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம், அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.from மாவட்ட செய்திகள் https://ift.tt/it3sahW