தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்தவர் ரியாஸ். ரியாஸின் குடும்பத்தினர் முத்தையாபுரத்தில்தான் பல ஆண்டுகளாக வசித்து வந்திருக்கின்றனர். ரியாஸ், கஞ்சா போதைக்கு அடிமையாகி அந்தப் பகுதியில் தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இதனையடுத்து அங்கிருந்து வீட்டைக் காலி செய்துவிட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அண்ணாநகருக்கு இடம் பெயர்ந்தனர். இந்த நிலையில், நண்பர் மாரிச்செல்வத்தின் உறவுக்காரப் பெண்ணை ரியாஸ் காதலித்து வந்தாராம். இது தொடர்பாக ரியாஸ், மாரிச்செல்வம் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில்தான், முள்ளக்காடு பகுதியிலிருக்கும் சீல் வைக்கப்பட்ட தனியாருக்குச் சொந்தமான தாதுமணல் குடோனில் அடித்துக் கொலைசெய்யப்பட்டுக் கிடந்திருக்கிறார்.

கொலைசெய்யப்பட்ட ரியாஸ்

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த முத்தையாபுரம் காவல்துறையினர் ரியாஸின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனர். ரியாஸின் செல்போன் அழைப்புகள் மூலம் ரியாஸின் நண்பர்கள் மாரிச்செல்வம், சபாபபதி ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் பெண் விவகாரத்தில் அடித்துக் கொலைசெய்யப்பட்டது தெரியவந்தது. அதையடுத்து மாரிச்செல்வத்திடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு கொலையின் பின்னணியை விவரித்திருக்கிறார்.

``ரியாஸ், சபாபதி என்னோட நண்பர்கள். நாங்க மூணு பேரும் சேர்ந்துதான் சரக்கடிப்போம். ரியாஸ், முத்தையாபுரத்துல இருந்தப்போ என்னோட உறவுக்கரப் பெண்ணை காதலிச்சான். அது எனக்குப் பிடிக்கல.

அவனைக் கண்டிச்சும் எதையுமே கண்டுக்கல. தொடர்ந்து அந்தப் பொண்ணுகிட்ட பேசிப் பழக ஆரம்பிச்சான். இந்த பிரச்னையினால அடிக்கடி எங்களுக்குள்ள சண்டை வரும். மூணு நாளுக்கு முன்னால இது சம்பந்தமா திரும்பவும் எங்களுக்குள்ள சண்டை வந்துச்சு. அப்போ ரியாஸைக் கொலை செஞ்சிடலான்னு முடிவெடுத்தேன். இதை சபாபதியிடமும் சொன்னேன். சரக்கு அடிக்கலாம்னு சொல்லி முள்ளக்காடு பகுதியில சீல் வச்சு பூட்டிக்கிடந்த குடோனுக்குப் போனோம். போதை ஏறுன பிறகும்கூட அந்தப் பொண்ணுகூட பழகுறத விட்டுடுன்னு சொன்னேன். அப்போகூட, அவன் கேட்கலை. எனக்கு கோவம் வந்துச்சு.

கொலை நடந்த தனியார் குடோன்

அதனால நானும் சபாபதியும் இரும்புக் கம்பியால அடிச்சும், கல்லைத் தூக்கி போட்டும் கொன்றோம். அவன் இறந்த பிறகு அங்கிருந்து ரெண்டு பேரும் கிளம்பிட்டோம்” எனக் கூறியிருக்கிறார் மாரிச்செல்வம்.

இதனையடுத்து போலீஸார் மாரிச்செல்வம், சபாபதி ஆகியோரை கைதுசெய்தனர். மாரிச்செல்வத்தின்மீது முத்தையாரபுரம், தென்பாகம் ஆகிய காவல் நிலையங்களில் 6 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. பெண் விவகாரத்தில் நண்பர்களே நண்பனைக் கொலைசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.from மாவட்ட செய்திகள் https://ift.tt/OJq4Md8