பள்ளி மாணவர்கள் பலரும் லைன் கட்டிங், ஒன் சைடு, வி கட், ஸ்பைக் எனத் தலைமுடியை டிஸைன் டிஸைனாக வெட்டிக்கொண்டு வித்தியாசமான ஹேர்ஸ்டைல்களில் பள்ளிக்கு வருவதைப் பார்க்க முடிகிறது. இப்படியான சிகை அலங்காரத்தினால் மாணவர்களிடம் நல்லொழுக்கம் குறைந்து வருவதாக பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே அறிவுறுத்தியிருக்கிறது. கடந்த ஆண்டு, வேலூர் அண்ணாசாலையிலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் இப்படியான ஹேர்கட்டுடன் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சொந்தச் செலவில், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரே சிகை அலங்காரம் செய்துவிட்டார். சிகையைச் சீர்படுத்திய தலைமை ஆசிரியரின் நோக்கம் சரியானதாக இருந்தாலும், அந்த நேரத்தில் அந்தச் செயல் விமர்சனத்துள்ளாகி சர்ச்சையைக் கிளப்பியது.

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்

இந்த நிலையில், இப்படியான ஹேர்ஸ்டைல்களில் மாணவர்கள் பள்ளிக்குவந்தால், சிகை அலங்காரம் செய்துவிட்ட சலூன் கடைக்காரர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டிருப்பதும் கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. நேற்றைய தினம், வேலூர் அருகேயுள்ள கணியம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வுசெய்த அவர், இந்த நடவடிக்கை குறித்து ஊடகங்களிடம் பேட்டி கொடுத்திருந்தார்.

"கல்வியில் கவனம் செலுத்தும் வகையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஊக்குவிக்க வேண்டும். சீருடை மற்றும் சிகை அலங்காரம் ஒழுக்கமாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு சீரான முறையில் முடி வெட்டிவிட சலூன் கடைக்காரர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதை மீறி டிசைன் டிசைனாக முடிவெட்டிவிடும் சலூன் கடைக்காரர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, தையல்காரர்களும் கலாசாரத்துக்கு எதிராக துணிகளைத் தைக்கக்கூடாது" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கூறியிருந்தார்.

மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கைக்குத் தமிழ்நாடு மருத்துவச் சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தினர் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். இதுகுறித்து, அச்சங்கத்தின் வேலூர் மாவட்டப் பொருளாளர் செல்வராஜ் கூறுகையில், "சிகை சீர்திருத்தம் என்பது நல்ல விஷயம்தான். மாவட்ட ஆட்சியரின் வார்த்தைக்குக் கட்டுப்படுகிறோம். கண்டிப்பாக ஒத்துழைப்பு தருகிறோம். ஆனால், முதலில் பள்ளிகளில் கண்டிப்போடு அந்த நடவடிக்கையைக் கொண்டு வர வேண்டும். அதை விடுத்து, அடித்தட்டிலிருக்கின்ற எங்களைப் போன்ற ஏழைத் தொழிலாளர்களை ஒடுக்கும் நோக்கத்தில் நடவடிக்கை எடுக்கக் கூடாது. எங்களிடம் வரும் பிள்ளைகளிடம், ‘இப்படி முடி வெட்டக்கூடாது’ என்று அறிவுறுத்துகிறோம். பெரும்பாலும் கேட்பதில்லை.

வித்தியாசமான ஹேர் ஸ்டைல்

பெற்றோரின் பேச்சையே கேட்க மறுக்கும் பிள்ளைகள், எங்கள் பேச்சை எப்படிக் கேட்பார்கள்? நாங்கள் வெட்டவில்லை என்றால் இன்னொரு கடைக்குச் சென்று வெட்டிக் கொள்கிறார்கள். முதலில் பள்ளிக்கும், பெற்றோருக்கும் கட்டளையிட வேண்டும். முடி சீர்திருத்தம் இல்லாத பிள்ளைகளைப் பள்ளிக்குள் அனுமதிக்கக் கூடாது. அப்படிச் செய்தால்தான், அடுத்த முறை ஒழுக்கமாகப் பிள்ளைகள் வருவார்கள். கடந்த மாதம் காட்பாடியில் இப்படியான ஸ்டைலில் முடி வெட்டிச்சென்ற மாணவன் ஒருவனைப் பெற்றோர் கண்டித்ததால், அவன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகச் செய்திகளில் பார்த்தோம். மாணவர் சமுதாயத்தை நல்வழிப்படுத்த பள்ளிகளில் ஒழுக்க நடைமுறைகளை அமல்படுத்துங்கள். பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்களுடன் எங்களையும் அழைத்து மீட்டிங் போட்டு அறிவுறுத்துங்கள். இதையெல்லாம் விடுத்து, எடுத்த உடனேயே எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது அதிகாரப் போக்கைக் காட்டுகிறது. எங்களின் மாநில நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியிருக்கிறோம். விரைவில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, அவரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்போம்’’ என்றார்.from மாவட்ட செய்திகள் https://ift.tt/KRt21Jw