வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த 19 வயதாகும் மயில் என்ற இளம் பெண் ஆம்பூரிலிருக்கும் ஷூ கம்பெனி ஒன்றில் வேலைசெய்து வருகிறார். இவரின் தந்தை இறந்து ஓராண்டு ஆகப் போகிறது. இந்த நிலையில், அதே பகுதியில் மேல்தெருவில் வசிக்கும் கோபி என்பவரின் 24 வயதாகும் மகன் அபிஷேக்குடன் மயிலுக்கு ஃபேஸ்புக்கில் நட்பு ஏற்பட்டது. பின்னர், நெருக்கம் ஏற்படவே காதலித்து, கடந்த மாதம் 8-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்துக்கு அபிஷேக் வீட்டுத் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மயில் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த பெண் என்பதால், சாதியைச் சொல்லி அவரை வீட்டுக்குள் சேர்க்காமல் அபிஷேக்கின் பெற்றோர் அவமானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

வேலூர்

இதையடுத்து, தன் காதல் கணவரை அழைத்துகொண்டு, தான் பணிபுரியும் ஆம்பூருக்குச் சென்ற மயில், அங்கு சிறிய வாடகை வீட்டை எடுத்து, இல்லற வாழ்க்கையைத் தொடங்கினார். இதையறிந்த அபிஷேக்கின் பெற்றோர் அவர்களை சேரவிடாமல் தடுக்க முயன்றிருக்கிறார்கள். ஆம்பூருக்குச் சென்று, மகனைக் கட்டாயப்படுத்தி தங்கள் பக்கம் இழுத்த பெற்றோர், மயிலை தாக்கியதுடன், ``நீ கீழ்த்தெரு பொண்ணு; நாங்க மேல்தெரு. எங்க பையனை கொன்னுக்கூட போடுவோமே தவிர, உன்கூட சேர்ந்து வாழ விடமாட்டோம்’’ என்றுகூறி மிரட்டிவிட்டும் சென்றதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து, தன் காதல் கணவருடன் சேர்ந்து வாழ விருப்பப்பட்டு மேல் தெருவுக்கு சென்ற மயிலை ஊர்க்காரர்களே சேர்ந்து வெளியில் விரட்டியிருக்கிறார்கள். இந்தச் சூழலில், கணவரை மீட்டுத் தரக்கோரி நேற்றைய தினம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், எஸ்.பி அலுவலகத்திலும் மயில் புகார் மனு கொடுத்தார். இதையடுத்து, போலீஸார் அபிஷேக்கையும், அவரின் பெற்றோரையும் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக அபிஷேக் கூறினார்.

காதல் கணவனுடன் மயில்

இருத்தரப்பிடமும் எழுதி வாங்கிக்கொண்ட போலீஸார், மயிலுடன் அவரின் காதல் கணவனை அனுப்பி வைத்தனர். இருவரும் மீண்டும் ஆம்பூரில் வாடகைக்கு இருந்த வீட்டிலேயே வாழ்க்கையைத் தொடங்கியிருக்கிறார்கள். இது தொடர்பாக, மயிலிடம் கேட்டபோது, ``கீழ்த்தெரு பொண்ணுனு சொல்லி கணவன் வீட்டுப் பக்கம் என்னை ஒதுக்குறாங்க. எனக்கு இவர் மட்டும்போதும். நான் வேலைக்குப் போய் அவரை காப்பாத்துவேன்’’ என்று தைரியமிகுந்த வார்த்தைகளால் நம்பிக்கைக் கொள்கிறார். தனி ஒருப் பெண்ணாக மயில் நடத்தியப் போராட்டம், போலீஸாரின் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.from மாவட்ட செய்திகள் https://ift.tt/1EzLwM0