புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே எஸ்.களபம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 39 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 40 வருடங்கள் பழமையான இந்தக் கட்டடம் கடந்த சில ஆண்டுகளாகவே பழுதடைந்து இருந்திருக்கிறது. பழுதடைந்த கட்டடம் எப்போது வேண்டுமானாலும், இடிந்து விழுந்து ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் இருந்ததால், இதனை அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் தரப்பில் அரசுக்குக் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். ஆசிரியர்கள் தரப்பில், சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் இந்தத் தகவலை கொண்டு சென்றிருக்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் மனுவும் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும், நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

மேற்கூரைப் பூச்சு

கடந்த சில தினங்களாகவே பள்ளிக்குள் வைத்து பாடம் நடத்தாமல், மர நிழலில் வைத்து மாணவர்களுக்குப் பாடம் எடுத்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில், தான் வழக்கம் போல் பள்ளி மரத்தடி நிழலில் ஆசிரியர்க்ள் பாடம் எடுத்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, 4-ம் வகுப்பு படிக்கும் மாணவன் பரத், பழுதடைந்த அந்தக் கட்டடத்திற்கு உள்ளே பேனா எடுப்பதற்காகச் சென்றிருக்கிறார். அப்போது, எதிர்பாராத விதமாக பள்ளி மேற்கூரையின் கான்கிரீட் பூச்சு இடிந்து விழுந்ததில் மாணவனுக்கு உடம்பில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த மாணவனை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மீட்டு சிகிச்சைக்காக, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்த கறம்பக்குடி பி.டி.ஓ நளினி பழுதடைந்த அந்தக் கட்டடத்தைப் பார்வையிட்டார். தொடர்ந்து, ஆலங்குடி போலீஸார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே தான் இந்த விவகாரம் தொடர்பாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், பள்ளி தலைமையாசிரியர் மகாலெட்சுமியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

பள்ளி மேற்கூரைப் பெயர்ந்து விழுந்து மாணவனுக்கு காயம் ஏற்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பள்ளியின் நிலை குறித்து ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தகவலை தெரிவித்தும், நடவடிக்கை எடுக்காத, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதற்கு சக ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பல்வேறு கண்டனங்கள் எழும்பியிருக்கிறது.

இதுகுறித்து சம்மந்தப்பட்ட பள்ளி ஆசிரியையிடம் பேசினோம், ``எப்போது வேண்டுமானாலும், இடிந்து விழுந்துவிடும் என்ற நிலையில் தான் இந்தக் கட்டடம் இருந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பும் இதேபோல், வராண்டாவில் மேற்கூரையுன் சிமெண்ட் பூச்சு உடைந்து கொட்டியது. ஆனால், அப்போது யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை.

அதன்பிறகே, இதுகுறித்த தகவலுடன் கட்டடம் பழுதடைந்து விட்டது. மாற்றிக்கொடுக்கக்கோரி, உள்ளூர் பிரமுகர்கள் தொடங்கி, மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட நிர்வாகம் வரையிலும் மனுவும் கொடுத்தோம். ஆனால், நடவடிக்கை இல்லை. அதே நேரத்தில், மாற்றுக் கட்டடமும் இல்லை. ஒரு வித அச்சத்தில் தான், மாணவர்களை மரத்தடியில் வைத்து பாடம் நடத்தி வந்தோம். உடனே அதிகாரிகள் மாற்றுக் கட்டடம் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கணும்" என்றார்.

மாணவர்கள் பாதுகாப்பில் அலட்சியம் காட்டிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாயுமா?!



from மாவட்ட செய்திகள் https://ift.tt/19a3lDk