ராணிப்பேட்டை அருகேயுள்ள புராணப்பெருமை மிக்க காஞ்சனகிரி மலையில் 1,008 சுயம்பு லிங்கங்கள், காஞ்சனகிரீஸ்வரர் சந்நிதி, விநாயகர் மற்றும் ஐயப்பன் சந்நிதிகள் அமைந்துள்ளன. அதனருகில், மணிப் பாறை, சாம்பிராணி குகையும் இருக்கிறது. சிறிய கல்லை எடுத்து அந்த மணிப் பாறையில் தட்டினால் அற்புதமான கோயில் மணி ஓசை கேட்கும். இந்த ஓசையைக் கேட்டு பக்தர்கள் பரவசமடைகிறார்கள். சித்ரா பௌர்ணமியின்போது, பல்வேறு பகுதிகளிலிருந்தும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காஞ்சனகிரி கோயிலுக்கு வந்து தரிசனம் செய்கிறார்கள். மற்ற பௌர்ணமி நாள்களில் கோயிலில் யாகங்கள் நடத்தப்படுகின்றன.

மன்னிப்புக் கடிதம்

இந்த நிலையில், நேற்று மாதாந்திர வழக்கமாக கோயில் உண்டியல் திறக்கப்பட்டது. அதில், ஒரு கடிதத்துடன் பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் தாள்கள் இருந்தன. அந்தக் கடிதத்தில், ``என்னை மன்னித்து விடுங்கள். நான், சித்ரா பௌர்ணமி கழிந்த மறுதினம் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி விட்டேன். அப்போதிலிருந்து எனக்கு மனசு சரியில்லை. நிம்மதியில்லை. அப்புறம் வீட்டில் நிறையப் பிரச்னை வந்தது. எனவே, மனம் திருந்தி எடுத்தப் பத்தாயிரம் ரூபாய் பணத்தை அதே உண்டியலில் போட்டுவிட்டேன். எல்லோரும் என்னை மன்னித்துவிடுங்கள். கடவுள் என்னை மன்னிப்பாரா தெரியாது’’ என்று எழுதப்பட்டிருந்தது. இது குறித்து, கோயில் நிர்வாகிகள் சிப்காட் போலீஸாரிடம் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.from மாவட்ட செய்திகள் https://ift.tt/9SBnimz