மதுரை, நாகமலைப் புதுக்கோட்டை பில்லர் மையத்தில் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கான நிர்வாகத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், ``பள்ளிக் கல்வித்துறையில் அனைவரும் கூட்டாகச் செயல்பட்டால்தான் இந்த துறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லமுடியும். அமைச்சராக ஆண்டுகளைக் கடத்தவேண்டும் என்பது ஆசையில்லை. இந்த துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்குப் பள்ளிக் கல்வித்துறையைச் சார்ந்த அனைவரின் ஒத்துழைப்பு வேண்டும். கல்வி, சுகாதாரம் இரு கண்களாக நினைத்து தமிழ்நாடு முதல்வர் செயல்பட்டு வருகிறார். பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். அதற்கு ஏற்றார்போல் அதிகாரிகள் துறையின் முக்கியத்துவம் கருதிச் செயல்படவேண்டும்.

அன்பில் மகேஸ்

தற்போதைய டிஜிட்டல் உலகில் மாணவர்களைக் கையாள்வது சிரமமான ஒன்றுதான். ஒவ்வொரு மாணவரையும் ஒரே மாதிரியாகக் கையாள்வதை விட மாணவர்களின் மனநிலைக்கு ஏற்றார்போல் செயல்படவேண்டும். ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வழிகாட்டிகளாக, நண்பர்களாக, தாயாக இப்படி பல்வேறு பரிமாற்றங்களுடன் வழிநடத்த வேண்டும். அப்போதுதான் நம்மைத் தேடிவரும் தகரங்களைக்கூடத் தங்கமாக மாற்ற முடியும். அதிகாரிகள், ஆசிரியர்கள் அதிக மாணவர்கள் அரசுப் பள்ளிகளைத் தேடிவரச் சாத்தியப்படுத்த வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளைத் தொடர்ந்து செய்யவேண்டும்" எனப் பேசினார்.

அன்பில் மகேஸ்

பின்பு செய்தியாளர்களிடம் பேசியவர், ``பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளின் திறனை மேம்படுத்தப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆளுமைத்திறன் உட்பட பல்வேறு திறமைகளை மேம்படுத்த இது உதவும்.

மதுரை மாவட்டத்தில் இரண்டாவது பயிற்சி வகுப்புகளைத் தொடங்கி வைத்திருக்கிறேன். ஆரம்பப் பள்ளிகளை வலுப்படுத்தும்போது அடுத்தடுத்த கட்டங்களையும் வலுப்படுத்த முடியும்.

தமிழ்நாடு கல்வித்துறை தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கியிருக்கிறோம். 2025-ல் பெருமையாகச் சொல்லக்கூடிய வகையில் தமிழ்நாடு இருக்கும் வகையில் செயல்படுவோம்.

தொடக்கக் கல்விக்கென தனி நிர்வாகம் செயல்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை. தொடர்ந்து ஒருங்கிணைத்துச் செயல்படுத்துவோம்.

அன்பில் மகேஷ்

தேசிய கல்விக் கொள்கை வேண்டாம் என்பதால் மாநில கல்விக்கொள்கையில் பாடத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இது குறித்து தற்போது பல்வேறு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு மாணவர்களுக்கு எது சரியாக இருக்கும் என்பதை ஆய்வுசெய்து அதனை முதல்வர் தேர்வுசெய்து செயல்படுத்துவார்" என்றார்.

அவரிடம், ``10, 12-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிவுக்குப் பிறகு அதிக அளவில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்களே?" எனச் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்துப் பேசிய அணைப்பில் மகேஸ், ``தமிழ்நாடு முதல்வர் அறிவுறுத்தலின்படி தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு முன்பே பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன. தேர்வு முடிவுகள் மாறுதலாக இருந்தாலும் ஜூன் மாதமே மீண்டும் தேர்வெழுதி தேர்ச்சி பெறமுடியும் எனவும் தெரிவித்திருந்தோம். இதனைத் தேர்வில் தோல்வி எனக் கருதக்கூடாது. அடுத்தகட்ட முயற்சி மேற்கொள்ள வேண்டும் என மாணவர்கள் எண்ணவேண்டும்.

மாணவர்கள் தொடர்பு கொள்வதற்கு, இலவச எண்களையும் வழங்கியிருந்தோம். ஆனாலும் இதுபோன்ற வருத்தமான சம்பவங்கள் நடைபெற்று விடுகின்றன. எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மற்ற மாணவர்களோடு ஒப்பிடக்கூடாது. ஒவ்வொரு குழந்தைக்கும் தனித் திறமை இருக்கும், அதனை வெளிக்கொண்டு வரும் விதமாகச் செயல்படவேண்டும். ஒவ்வொரு குழந்தையையும் முன்னேற்ற வேண்டிய கட்டாயம் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இருக்கிறது. அதனால் மாணவர்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும்" என்றார்.

``அரசுப் பாடப் புத்தகங்களைத் தனியாக விற்பனை செய்வதாகக் குற்றச்சாட்டு எழுகிறது" என்ற கேள்விக்கு, ``அவ்வாறு புத்தகங்களை விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு தவற்றுகள் நடந்தால் எங்கள் கவனத்துக்குக் கொண்டுவரலாம். கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகளுக்கு 10 விதமான பொருள்கள் இலவசமாகக் கொடுக்கப்படுகின்றன" என்றார்.

அன்பில் மகேஸ் பொய்யாமொழி

``கிராம பள்ளி கட்டடங்கள் இடிந்து விழுகிறதே?" என்ற கேள்விக்கு, ``அவ்வாறு நடைபெற்ற இடங்களில் நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கிறோம். இடியும் நிலையிலிருக்கும் கட்டடங்களுக்குள் வைத்து மாணவர்களைப் படிக்க வைக்கக் கூடாது என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. கடந்த முறையே 1,031 பள்ளிக் கட்டடங்கள் இடிக்கப்பட்டிருக்கின்றன. மீண்டும் அந்தக் கட்டடங்கள் புதிதாகக் கட்டப்படவிருக்கின்றன. அடுத்த கல்வியாண்டில் இது போன்ற பிரச்னைகள் தவிர்க்கப்படும். தமிழ்நாட்டுப் பள்ளிகளில் அதிக அளவு ஹைடெக் கம்ப்யூட்டர் லேப்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

இல்லம் தேடிக் கல்வித்திட்டம் தமிழ்நாட்டில் மிகப்பெரும் திட்டமாக இருக்கிறது. இதன் மூலம் பல்வேறு திட்டங்களை அதிகப்படுத்த முடியும். இதனை மாணவர்கள் அதிக அளவு விரும்பி பயில்கின்றனர். தங்களை மேம்படுத்துகின்றனர்" என்றார்.from மாவட்ட செய்திகள் https://ift.tt/I9xRhUl