தருமபுரி மாவட்டம், அரூரைச் சேர்ந்த இளைஞர் வெற்றிவேல், சொந்தமாக மழலையர் பள்ளி நடத்தி வருகிறார். இவர், ரூ.6 லட்சத்திற்கு மொத்தமாக 10 ரூபாய் நாணயங்களைக் கொடுத்து புதிய கார் ஒன்றை வாங்கியிருக்கிறார்.

சிறார்களிடம் சிறு சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காகவும், பலரும் 10 ரூபாய் நாணயத்தை வாங்கிட தயக்கம் காட்டுவதாலும், இச்செயலை விழிப்புணர்வு நோக்கத்துடன் செய்ததாக அவர் கூறுகிறார்.

வெற்றிவேலின் முயற்சி பாராட்டத்தக்கது என்றாலும், அவரிடம் இருந்து 10 ரூபாய் நாணயங்களைப் பெற்று கொண்ட சேலத்தைச் சேர்ந்த கார் ஷோ ரூம் ஊழியர்கள், அதனை வங்கியில் டெபாசிட் செய்ய முடியாமல் திண்டாடி வருகிறார்கள்.

புதிய காருடன் வெற்றிவேல்

கடந்த சனிக்கிழமையன்று, ரூ.6 லட்சத்துக்கான பத்து ரூபாய் நாணயங்களை மூட்டைக் கட்டி, சேலம் சூரமங்கலம் பகுதியில் இருக்கும் கார் விற்பனை நிலையத்துக்கு வெற்றிவேல் எடுத்துச் சென்றார். வெற்றிவேல் தேர்வு செய்த காரின் ஆன் ரோடு விலை ரூ.6 லட்சம்.

முழுத்தொகையை செலுத்துவதற்காக, அவர் கொண்டு வந்த மூட்டையைப் பிரித்து கொட்டியபோது, வெறும் 10 ரூபாய் நாணயங்களாக இருப்பதைப் பார்த்து ஷோ ரூம் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். உஷாராக, இந்த சில்லறைகளை வங்கியில் தாள்களாக மாற்றித் தர வேண்டும் அல்லது டெபாசிட் செய்து கணக்கில் வரவு வைத்துத் தர வேண்டும் என்ற பொறுப்பை, ஷோ ரூம் ஊழியர்கள், வெற்றிவேலிடம் உத்தரவாதமாக முன்கூட்டியே எழுதி வாங்கிக்கொண்டனர்.

வெற்றிவேலும் காரை டெலிவரி எடுத்து கொண்டு ஊடகங்களுக்கு ஜாலியாகப் பேட்டியுடன் போஸ் கொடுத்துவிட்டு, அரூரில் உள்ள தனது வீட்டுக்கு காரை ஓட்டி சென்றுவிட்டார். அதன் பிறகுதான், ஷோ ரூம் ஊழியர்களுக்குத் தலைவலி ஆரம்பித்தது.

10 ரூபாய் நாணயங்கள் இருந்த மூட்டையை நேற்று சேலத்தில் உள்ள தனியார் வங்கியின் கிளைக்குக் கொண்டு சென்றனர். வங்கி ஊழியர்கள் நாணயங்களை வாங்க மறுத்து விட்டனர். மற்ற வங்கிகளிலும், நாணயங்களை வாங்கிக் கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர். ‘‘ஏதோ, கொஞ்சம் நாணயங்களைக் கொண்டு வந்தால் வாங்கிக்கொள்ளலாம். யார் உட்கார்ந்து ஒவ்வொன்றாக எண்ணுவார்கள்? விளம்பர நோக்கத்துடன் ரூ.6 லட்சத்துக்கான நாணயங்களைக் கொடுத்தால் எப்படி பெற்றுக்கொள்ள முடியும்?’’ என்ற கேள்வியையும் வங்கி அதிகாரிகள் பதிலாக கொடுத்திருக்கிறார்கள்.

வெற்றிவேல் கொண்டு வந்த 10 ரூபாய் நாணயங்கள்

அதோடு மட்டமின்றி, இந்த தகவல் அறிந்த சேலத்தில் உள்ள மற்ற வங்கிகளில் ‘10 ரூபாய் நாணயங்களை வாங்க மாட்டோம்’ என்று எழுதி நோட்டீஸையே ஒட்டிவிட்டனராம். இதனால், ‘முடியலைடா சாமி’ என்று முடிவெடுத்த கார் ஷோ ரூம் ஊழியர்கள், மீண்டும் அந்த நாணயங்களை வெற்றிவேலிடமே ஒப்படைத்து விடலாம் என்று கணக்குப் போட்டு கொண்டிருக்கின்றனர்.

இது தொடர்பாக, வெற்றிவேலிடம் பேசினோம். ‘‘10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்திய நிலையில், பெரும்பாலான வியாபாரிகள் வாங்க மறுக்கிறார்கள். இப்போது வங்கிகளிலும் வாங்க மறுத்து நோட்டீஸ் ஒட்டியிருக்கிறார்கள். நான் ரூ. 6 லட்சத்துக்கான நாணயங்களை திரட்டுவதில் சிரமப்படவில்லை.

கடந்த ஒரு மாதத்துக்குள், சில வங்கிகளுக்குச் சென்று ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து நாணயங்களை வாங்கிக் கொண்டேன். வங்கிகளில் ஐந்தாயிரம் ரூபாய், இருபதாயிரம் ரூபாய், ரூ.1 லட்சத்துக்கான நாணயங்களை பொட்டலங்களாக பேக்கிங் செய்து வைத்திருக்கிறார்கள். கேட்டதும் கிடைத்துவிட்டது. கார் வாங்கிவிட்ட நிலையில், அந்த நாணயங்களை வங்கிக்கு கொண்டு சென்றால் வாங்க மறுக்கிறார்கள். நாங்களும் ஒவ்வொரு வங்கியாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறோம்’’ என்றார்.from மாவட்ட செய்திகள் https://ift.tt/klAQuVF