நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது கொல்லிமலை. இந்த மலையில், மிளகு, காபி, பலா, அன்னாசிப்பழம், சிறுதானியங்கள்.. உள்ளிட்டப் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இதோடு ஏராளமான அருவிகளும், சுற்றுலா தலங்களும், மூலிகைகளும் உள்ளன. இந்த மலையில் உள்ள 3 டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுப் பாட்டில்களை வாங்கி மது அருந்துவோர், அந்த காலி பாட்டில்களை மலையில் அங்கங்கே வீசி எறிவது தொடர்கதையாகியிருக்கிறது.

மதுப் பழக்கம்

இதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டும் பயனில்லை. அதனால், மதுப்பாட்டில் ஒன்றுக்கு ரூ.10 கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யும் உத்தரவை, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் அறிவித்துள்ளார். இது, ஏற்கெனவே நீலகிரி மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள விஷயம்தான்.

இந்த நிலையில், இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

"நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை பகுதிகளில் மதுபான பாட்டில்களை பயன்படுத்திவிட்டு அதைச் சாலையோரங்களிலோ, விளை நிலங்களிலோ, வனப்பகுதியிலோ மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களிலோ போடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதைத் தவிர்க்கும் வகையில் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

கொல்லிமலை

இதன்படி, கொல்லிமலையில், இயங்கி வரும் மதுபானக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபான பாட்டில்களுக்கு, வாடிக்கையாளர்கள் அரசு நிர்ணயம் செய்த விலையை விட ரூ.10 கூடுதலாக செலுத்தி மதுபானங்களை வாங்க வேண்டும். பின்னர், காலி மதுபான பாட்டில்களை தாங்கள் வாங்கிய மதுபானக் கடைகளில் திரும்ப ஒப்படைத்து, 10 ரூபாயை பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை கொல்லிமலை வட்டத்தில் உள்ள செம்மேடு, செங்கரை, சோளக்காடு ஆகிய மூன்று மதுபானக் கடைகளில் விற்பனை செய்யப்படும் டாஸ்மாக் மதுபான பாட்டில்களுக்கு மட்டுமே பொருந்தும் " என்று குறிப்பிடப்பட்டுள்ளது.from மாவட்ட செய்திகள் https://ift.tt/guNwjzm