திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு, `கலைஞர் கருணாநிதி சாலை’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, திருவாரூர் நகர்மன்றக் கூட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆசிய அளவில் புகழ்பெற்ற திருவாரூர் தேரோடும் வீதிக்குக் கருணாநிதி பெயரைச் சூட்டுவதா எனப் பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ், இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில்தான், தெற்கு வீதிக்குக் கருணாநிதி பெயர் சூட்டும் முடிவைக் கைவிடக்கோரி, பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆழித்தேர் ஓடும் வீதியில், `அரசியலைப் புகுத்தாதே... இந்த நாடு, இந்து நாடு' என முழக்கங்களை எழுப்பினர்.

பாஜக

இதில் கண்டன உரையாற்றிய, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ``தமிழகத்தின் நீண்டகால பண்பாட்டையும், கலாசாரத்தையும் மாற்றுவதற்கான முயற்சியில் தி.மு.க ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இரு பெரும் சாதனைகளைச் செய்து வருகிறது. அதில் ஒன்று மத்திய அரசின் திட்டங்களில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டுவது. மற்றொன்று ஊரின் பெயரை மாற்றுவது. திருவாரூர் தெற்கு வீதிக்குக் கருணாநிதி பெயரை வைக்க நினைப்பது ஒரு மன வியாதி. குடும்ப அரசியலில் ஈடுபடுபவர்களுக்குத்தான் இந்த வியாதி வரும். காங்கிரஸ் கட்சி இந்த மனவியாதியில் 70 ஆண்டுக் காலமாக இருந்து வருகிறது. இதற்கு முற்றிலும் விதிவிலக்கான கட்சியாக பா.ஜனதா செயல்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி ஒரு ஆண்டுக்கு ரூ.44 லட்சம் கோடி பட்ஜெட் போடுகிறார். ஆனால் ஒரு திட்டத்துக்குக் கூட அவர் தனது பெயரை வைத்தது இல்லை. நாட்டையும், மக்களையும் முன்னிலைப்படுத்தித்தான் பா.ஜ.க எப்போதும் செயல்படும்.

பாஜக

தி.மு.க-வின் மன வியாதியைத் திருவாரூர் தியாகராஜ சுவாமிகள் நிச்சயம் குணப்படுத்துவார். தமிழகத்தில் சாலை வசதி இல்லாமல் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இதனால் அங்குள்ள மக்கள் கடும் சிரமங்களைச் சந்தித்து வருகிறார்கள். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு மலைப் பகுதியில் சாலை இல்லாமல் மக்கள் அல்லல்பட்டு வருகிறார்கள். இதேபோன்று பல ஊர்கள் உள்ளதால், அங்கெல்லாம் சாலை வசதியைச் செய்து கொடுத்து அவற்றுக்கு கருணாநிதி பெயரை வைக்கலாம்.

திருவாரூர் தெற்கு வீதியின் பெயரை மாற்றமாட்டோம் என அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லாததால்தான் இந்த பிரம்மாண்டான கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறோம். இதனை மீறி திருவாரூர் தெற்கு வீதிக்குப் பெயர் மாற்றம் செய்ய நினைத்தால் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்படாத அளவுக்கு பா.ஜனதா முற்றுகை போராட்டம் நடத்தும்.

இந்தியா முழுவதும் குடும்ப அரசியலுக்கும், குடும்ப ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைத்து 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று பா.ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும். இலங்கையில் குடும்ப ஆட்சியின் காரணமாக அங்குள்ள அரசு சொத்துகள் கொள்ளையடிக்கப்பட்டு வந்ததால், அங்கு மிகப்பெரிய அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அதேபோல், தற்போது குடும்ப ஆட்சி நடந்து வரும் தமிழகத்திலும் இதே நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

அண்ணாமலை

ஆனால் பிரதமர் நரேந்திர மோடி, 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று, அறிவாலயம் குடும்பம், சரத் பவார் குடும்பம், தாக்கரே குடும்பம் உள்ளிட்ட அனைத்து குடும்ப அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைப்பார்.

பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் விண்ணப்பித்து வீடு கட்ட நினைத்த திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் லஞ்சம் கேட்கப்பட்டதால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். பிரதமர், மக்கள் ஏழையாக இருக்கக் கூடாது, அவர்கள் வாழ்வில் உயர வேண்டும் என்பதற்காக வீடு வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார். மத்திய அரசுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினாலும், அதிலும் ‘ஸ்டிக்கர்’ ஒட்டுகின்ற தமிழக அரசுக்கும், எந்த திட்டத்தில் எவ்வளவு பணம் கையாடல் செய்யலாம் என நினைப்பவர்களுக்கும் மத்தியில் ஒரு இளைஞரின் உயிர் பறிபோனது என்பது வேதனைக்குரியது. இந்த பிரச்னை குறித்து பிரதமரின் கவனத்துக்கு நிச்சயம் கொண்டு செல்வோம்’’ எனத் தெரிவித்தார்.from மாவட்ட செய்திகள் https://ift.tt/TmqAQU5