திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வர்த்தக மையத்தில் நேற்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாள்கள் பிரியாணி திருவிழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வந்த நிலையில், விழாவில் மாட்டிறைச்சி பிரியாணி இடம் பெறாது என்ற தகவல் வெளியானது. இதற்கு, வி.சி.க மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ``திருவிழா நடத்தப்படும் வளாகம் முன்பு இலவசமாக மாட்டிறைச்சி பிரியாணியை வழங்குவோம்’’ என்று அறிவித்தது.

பிரியாணி திருவிழா அறிவிப்பு

‘‘மாட்டிறைச்சி பிரியாணி வழங்கக்கூடாது. அதுமட்டுமின்றி, பிரியாணி திருவிழாவையே நடத்தக்கூடாது’’ என்று மற்றொரு பக்கம் இந்து அமைப்புகளும் போராட்டத்தை கையிலெடுத்தன. இதையடுத்து, மழையைக் காரணம் காட்டி, பிரியாணி திருவிழாவைத் தற்காலிகமாக ஒத்தி வைத்தார் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா. இந்த நிலையில், பிரியாணி திருவிழா சர்ச்சை தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம்கேட்டு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

மாட்டிறைச்சி பிரியாணி புறக்கணிப்பு தீண்டாமைச் செயலாக தெரிவதாகவும் ஆணையம் அதிரடியாக கேள்வித் தொடுத்திருக்கிறது. நோட்டீஸில், ‘‘சுமார் 2 லட்சம் இஸ்லாமிய மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில், மாட்டிறைச்சி பிரியாணிக்கு அனுமதி வழங்கப்படாததை வகுப்புவாத அடிப்படையில், நாங்கள் ஏன் பாகுபாடாக எடுத்துகொள்ளக் கூடாது... தீண்டாமையை கடைபிடிக்கவில்லை என்றால், அதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும்’’ என ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

நோட்டீஸ்

‘‘ஆம்பூர் மாதிரியான பதற்றம் நிறைந்த பகுதியில், மனித ஒருமைப்பாடு அவசியம். மாட்டிறைச்சி பிரியாணிக்கு அனுமதி கொடுத்தாலும் பிரச்னை ஏற்படும். அனுமதி கொடுக்காவிட்டாலும் பிரச்னை வெடிக்கும் என்பதை மாவட்ட ஆட்சியர் முன்கூட்டியேஆராய்ந்திருக்க வேண்டும். மாட்டிறைச்சி பிரியாணியை புறக்கணிக்க வேண்டுமென்பதில், அவருக்கு உள்நோக்கம் இருந்திருக்காது என்று நம்புகிறோம். ஒருவேளை உள்நோக்கத்துடன் அவர் செயல்பட்டிருந்தால் அது தவறு. சாதி, மதம் வேறுபாடின்றி பொதுமக்கள் அனைவரும் இணைந்து வாழ்வதற்கான சூழலை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும். அதை விடுத்து, விழா எடுக்கிறோம் என்ற பெயரில் மக்களை பிளவுப்படுத்தும் செயலில் ஈடுபடக் கூடாது’’ என்கிறார்கள் சமூக செயற்பாட்டாளர்கள்.from மாவட்ட செய்திகள் https://ift.tt/CY9rsRb