திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள செம்படவன்காடு பகுதியில் வசித்து வருபவர் சந்திரபோஸ். இவர் அ.தி.மு.க நகர இளைஞரணி துணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இன்று அதிகாலை இவரது வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால், அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. பெட்ரோல் குண்டு தீப்பற்றி எரிந்ததில், வீட்டின் முன்புறம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் லேசாகப் பழுதடைந்தது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால், அசம்பாதிம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த முத்துப்பேட்டை காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராப் பதிவுகளை ஆய்வு செய்து வருகிறார்கள். பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் யார்... இதற்கான பின்னணி என்ன? என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அ.தி.மு.க பிரமுகர் சந்திரபோஸ் மிகவும் அமைதியானவர் என்றும், அவருக்கு யாருடனும் முன்விரோதம் இல்லையென்றும் கூறப்படுகிறது. ஆனால் அதேசமயம், சந்திரபோஸின் மகன் ராம் மீதான கோபத்தின் எதிரொலியாக, யாரேனும் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.

மேலும், நேற்று இரவு நடந்த ஒரு சம்பவமும் இதில் தொடர்புப்படுத்திப் பார்க்கப்படுகிறது.

அதிமுக பிரமுகர் வீடு

முத்துப்பேட்டை கடைத்தெருப் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில், நேற்று இரவு கேரளாவிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் உணவருந்தியிருக்கின்றனர். அப்போது, உணவகத்திலிருந்தவர்களுக்கும் கேரளா சுற்றுலாப் பயணிகளுக்குமிடையே பிரச்னை ஏற்பட்டுக் கைகலப்பாக மாறியிருக்கிறது. கேரளா பயணிகளுக்கு ஆதரவாக அந்தப் பகுதியில் உள்ள முஸ்லிம் தரப்பினரும், உணவக உரிமையாளருக்கு ஆதரவாக அந்தப் பகுதி பா.ஜ.க-வினரும் நூற்றுக்கணக்கில் கூடி வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதையடுத்து, முத்துப்பேட்டை காவல்துறையினர் இரு தரப்பையும் அழைத்துப் பேசி அவர்களிடம் புகாரைப் பெற்றுக்கொண்டு, கேரளா பயணிகளை அனுப்பிவைத்தனர்.

இந்த நிலையில், உணவக உரிமையாளருக்கு ஆதரவாக அ.தி.மு.க பிரமுகர் சந்திரபோஸின் மகன் ராம் செயல்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதன் எதிரொலியாகத்தான், இன்று அதிகாலை, இவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா... அல்லது தொழில் ரீதியான பிரச்னை காரணமா என பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.from மாவட்ட செய்திகள் https://ift.tt/61VXOcz