நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள ஈஸ்வரமூர்த்திபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விக்கிரமராஜ். இவர் கூலித் தொழிலாளியாக உள்ளார். இவரின் மனைவி சுமதி. இந்த தம்பதியின் 15 வயது மகள், அருகில் உள்ள திம்மநாயக்கன்பட்டியில் இருக்கும் அரசுப்பள்ளியில் 9 -ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் திம்மநாயக்கன்பட்டி அரசு பள்ளியில் நடக்கும் ஆங்கில தேர்வை எழுதச் செல்வதற்காக பேருந்து ஏறி செல்வதற்கு ஏதுவாக, ஈஸ்வரமூர்த்திபாளையம் பேருந்து நிறுத்ததில் நின்ருந்தார். அப்போது, அவர் வழக்கமாக பயணிக்கும் அரசு பேருந்தை தவறவிட்டதால், அதனை தொடர்ந்து வந்த தனியார் பேருந்து ஒன்றில் ஏறியுள்ளளார். திம்மநாயக்கன்பட்டி அரசு பள்ளிக்கு முன் 100 மீட்டருக்கு முன்பாக பேருந்து நிறுத்தம் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

ஓடும் பேருந்தில் இருந்து இறங்கும் மாணவி

இந்த நிலையில், 'தேர்வு நடக்கிறது. நேரம் ஆகிவிட்டது. அதனால், பள்ளி வாசலில் இறக்கி விடுங்கண்ணா' என்று நடத்துநரிடம் அந்த மாணவி கேட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அந்த நடத்துநரோ, 'திம்மநாயக்கன்பட்டி பள்ளியில் பஸ் நிற்காது. அங்கு மெதுவாக வண்டி செல்லும் போது, வேண்டுமானா நீ இறங்கிக்க' என்று நடத்துநர் சொன்னதாக தெரிகிறது. இந்தநிலையில், திம்மநாயக்கன்பட்டி அரசு பள்ளி முன் பேருந்து வந்தபோது, பேருந்து மெதுவாக இயக்கப்பட்டதால், மாணவி இறங்கியுள்ளார். ஆனால், பேருந்து சென்ற வேகம் அதிகளவில் இருந்ததால், அந்த மாணவி பேருந்தைவிட்டு இறங்கும்போது, கால் தவறி கீழே விழுந்துவிட்டார். அதைப்பார்த்து பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இதில், மாணவிக்கு தலை, உடம்பில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் முன் சக்கரத்தில் விழச் சென்ற மாணவி, அதிர்ஷ்டவசமா நூலிழையில் உயிர்தப்பினார். மாணவியை அவரது உறவினர்கள், ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதோடு, மாணவி விபத்துக்குள்ளான பேருந்தில் இருந்து சி.சி.டி.வி கேமராவில் காட்சிகள் அடிப்படையிலும், சக பயணிகள் கொடுத்த தகவல் அடிப்படையிலும், அந்த மாணவியின் உறவினர்கள் சார்பில், அந்த பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மணி மற்றும் நடத்துநர் முருகன் ஆகியோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

ஓடும் பேருந்தில் இருந்து இறங்கும் மாணவி

அதோடு, அந்த தனியார் பேருந்து உரிமையாளர் தரப்பில், மாணவி உறவினர்களிடம், 'பணம் தருகிறோம். விசயத்தை பெரிதுபடுத்த வேண்டாம்' என்று பேரம் பேசியதாக சொல்லப்படுகிறது. இதனால், கோபமான அந்த மாணவியின் உறவினர்களும், ஈஸ்வரமூர்த்திபாளையம் கிராம மக்களும், இன்று காலை அந்த வழியாக வந்த, மாணவிக்கு விபத்தை ஏற்படுத்திய பேருந்தை சிறைப்பிடித்து, போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அங்கு வந்த காவல்துறையினர், 'பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உத்தரவாதம் கொடுத்தபின்னரே, பொதுமக்கள் போராட்டத்தை விலக்கிகொண்டனர்.from மாவட்ட செய்திகள் https://ift.tt/NxbHKMG