தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சித்தவநாயக்கன்பட்டி கிராமத்தில் குறிப்பிட்ட சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயில் உள்ளது. 35 ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்ட இந்தக் கோயிலில் மாதந்தோறும் பெளர்ணமி சிறப்பு பூஜைகளும், ஆண்டுக்கு ஒருமுறை மாசி மாதத்தில் கொடை உற்சவத் திருவிழாவும் நடந்து வருகிறது. இந்த பூஜைகளில் கலந்து கொள்வதற்கென குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பல மாவட்டங்களில் இருந்து சுவாமி தரிசனம் செய்வதற்காக இங்கு வந்து செல்கின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் இந்தக் கோயிலில் தங்குவதற்கு என கோயில் நிர்வாகம் சார்பில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

குளியலறையில் கண்டெடுக்கப்பட்ட ரகசிய கேமராக்கள்

இந்த நிலையில், கடந்த 17-ம் தேதி பெளர்ணமி தினத்தன்று கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொள்வதற்காக பக்தர்கள் பலர் இந்தக் கோயிலுக்கு வந்திருந்தனர். அப்போது, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் குளிப்பதற்காக கோயில் வளாகத்திலுள்ள பெண்களுக்கான குளியலறைக்குச் சென்றிருக்கிறார். அப்போது குளியலறையில் சம்பந்தமில்லாத கருப்புநிற வயர் இருப்பதைக்கண்டு, அது என்னவென்று எடுத்து பார்த்திருக்கிறார். பின்னர், அது கேமரா எனத் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, ரகசியக் கேமிரா இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், கோயில் நிர்வாகத்தினரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். ``இது வெளியில தெரிஞ்சா கோயிலின் பெயர் கெட்டுடும்...என்னன்னு விசாரிக்கிறோம்” எனச் சொல்லி அந்தப் பெண்ணை கோயில் நிர்வாகத்தினர் சமாதானம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் வெளியில் கசியவே, இதுகுறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் காவல் நிலைய போலீஸார், கோவிலுக்குச் சென்று அங்குள்ள குளியலறையில் சோதனை செய்ததில், மறைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 2 ரகசிய கேமராக்களை கண்டெடுத்தனர்.

கோயிலில் உள்ள பெண் பக்தர்களுக்கான குளியலறைகள்

இது குறித்து கோயில் நிர்வாகத்திடம் விசாரணை செய்ததில், ``இதைப் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது” எனக் கூறியிருக்கின்றனர். போலீஸார் தரப்பில் பேசினோம், ``இந்தக் கோயிலின் குளியலறையில் ரகசியமாக பொருத்தப்பட்டிருந்த கேமராக்களை பார்க்கும்போது இதன் மூலம் பெண்கள் குளிப்பதை பல மாதங்களாகத் தொடர்ந்து படம் எடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.

ஒரே சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மட்டும் வழிபடும் கோயிலில் இது போன்றதொரு செயல் அரங்கேறியிருப்பது, அந்தக் கோயிலுக்கு வரும் பெண் பக்தர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read: தூத்துக்குடி: லாரி ஷெட்டில் பதுக்கப்பட்ட 20 டன் செம்மரக்கட்டை! - ரகசியத் தகவலால் சிக்கியதுfrom மாவட்ட செய்திகள் https://ift.tt/3o7jRiT