புதுச்சேரியில் கொரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதேசமயத்தில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரம் காட்டிவருகிறது அரசு. கொரோனா பரவல் தொடர்பாக புதுச்சேரி அ.தி.மு.க கிழக்கு மாநிலச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ``புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறி, அகில இந்திய அளவில் கொரோனா தொற்று அதிகம் பரவக்கூடிய மாநிலமாக புதுச்சேரி மாறியுள்ளது. இதற்கு மாநில அரசின் தவறான வழிகாட்டுதல் ஒரு காரணமாகும்.

கொரோனா வைரஸ் பாதிப்பு

புதுச்சேரி மாநிலத்தைப் பொறுத்தமட்டில் கடந்த டிசம்பர் மாதம் வெறும் 30 அல்லது 40 நபர்களுக்கு இருந்த கொரோனா பாதிப்பு இன்று தினசரி சுமார் 2,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரவியுள்ளது. டெஸ்ட் எடுக்கும் நபர்களில் 40 சதவிகிதத்துக்கு மேலானவர்களுக்கு இந்தத் தொற்று கண்டறியப்பட்டுவருகிறது. பரிசோதனை எடுக்கும் நபர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் இன்னும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும்.

இதனால் கூடுதலாக நம் மாநில மக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும். இதற்கெல்லாம் மத்திய அரசு, மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய சுகாதாரத்துறை ஆகியவற்றின் அறிவிப்புகளை மாநில அரசு சீர்தூக்கிப் பார்க்காமல் செயல்பட்டதும் முதல் காரணமாகும். கொரோனா தொற்று அதிவேகமாகப் பரவிவரும் இந்த நேரத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அவசியம் இல்லை என்றாலும், வெளிமாநில மக்கள் அதிகம் கூடுவதையும், நம் மாநிலத்தில் சண்டே மார்க்கெட், மார்க்கெட் பகுதி, காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் உள்ளிட்ட பல இடங்களில் அதிகப்படியான மக்கள் கூடுவதைத் தடுக்கவேண்டியது மாநில அரசின் கடமையாகும்.

தமிழிசை சௌந்தரராஜன்

நம்முடைய மாநிலத்தினுடைய துணைநிலை ஆளுநர் அவர்கள் நல்ல மருத்துவர், தாயுள்ளம்கொண்டவர், ஒரு மாநிலத்தின் சிறந்த நிர்வாகி, பல்வேறு சட்ட திட்டங்களை நன்கு உணர்ந்த திறமைகொண்டவர். இருப்பினும் கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு விஷயத்தில் அவரின் செயல்பாடு முழுமையாக வேறுபட்டுள்ளது. அப்பாவிப் பொதுமக்களைக் கேடயமாகப் பயன்படுத்தி கொரோனா தொற்றுக் கிருமிகளுக்கு சவால்விட்டுவருவது தவறான ஒன்றாகும்.

உலக சுகாதார நிறுவனம் மத்திய அரசு, மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய சுகாதாரத்துறையின் உத்தரவுகள் இவற்றை சீர்தூக்கிப் பார்த்து மாநிலத்தில் அரசுக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும். ஆனால் அதை விட்டுவிட்டு கொரோனாவுடன் நாம் வாழ்ந்துதான் ஆக வேண்டும். அதற்காக மக்கள் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும் என மக்களுக்கு அறிவுரைகளை வழங்குவது ஏற்புடையது அல்ல. ஒருபுறம் சுற்றுலா, புத்தாண்டுக் கொண்டாட்டம் என அனுமதி வழங்குவதும், மாநிலம் முழுவதும் மக்களைத் தங்குதடையின்றி கும்பல் கும்பலாகக்கூட அனுமதிப்பதும் தவறான ஒன்றாகும்.

அ.தி.மு.க கிழக்கு மாநிலச் செயலாளர் அன்பழகன்

நம் மாநிலத்தைச் சுற்றியுள்ள அண்டை மாநிலங்களும் குறிப்பிட்ட சில நாள்களில் ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளைக் கடைப்பிடித்துவரும் நிலையில், நாம் குறைந்தபட்சம் நம் மாநிலத்தில் அண்டை மாநிலத்திலிருந்து வருபவர்களையும் தேவையில்லாமல் பஸ் நிலையம், ரயில் நிலையம், மார்க்கெட் பகுதி, சண்டே மார்க்கெட் உள்ளிட்ட பல இடங்களில் கும்பல் கூடுவதையும் தடுத்திருக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் 50 சதவிகித ஊழியர்கள் பணிக்கு வந்தால் போதும் என அரசு முடிவெடுத்துள்ளது. அதேவேளையில் பஸ் நிலையம், உழவர் சந்தை, சண்டே மார்க்கெட், சுற்றுலாத்தலங்கள், காய்கறி, மீன் அங்காடிகள் ஆகிய பல்வேறு இடங்களில் மக்கள் அதிகமாகத் கூடுவதை தடுக்க உரிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.

மாவட்ட பேரிடர் முகமை, மாநிலப் பேரிடர் மேலாண்மை முகமை, மாநில நிர்வாகக்குழு... இந்த மூன்று அமைப்புகளும் மக்களுக்கு உயிர்ப் பாதுகாப்பு அளிக்கக்கூடிய ஓர் உயர்மட்ட அமைப்பாகும். இந்த மூன்று குழுக்களும் இன்றுவரை ஒரு ஆலோசனைக் கூட்டத்தைக்கூட இணைந்து நடத்த துணைநிலை ஆளுநர் அவர்கள் நடவடிக்கை எடுக்காதது தவறான ஒன்றாகும். ஒரு மாநிலத்துக்கு வருவாய் என்பது அவசியமான ஒன்றாக இருந்தாலும், மக்களுடைய உயிரைப் பற்றிக் கருத்தில்கொள்வதும் அவசியமான ஒன்றாகும். எனவே நம்முடைய மாநிலத்தினுடைய துணைநிலை ஆளுநர் அவர்கள், இந்த நோய்த் தொற்று அதிகம் பரவுவதைத் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

Also Read: `கட்சியைக் கைப்பற்றுவதற்காக அன்றாடம் நாடகம் நடத்துகிறார்!’ - சசிகலாவைச் சாடும் புதுச்சேரி அதிமுக

கூடுதல் வருவாயை மட்டும் கருத்தில்கொண்டு அரசு நிர்வாகம் செயல்பட்டதால் புதுச்சேரி மாநிலம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்று சமூகப் பரவலாக மாறியுள்ளது. மேலும், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் துணைநிலை ஆளுநர், முதல்வர் ஆகியோர் திருவிழாக்கள், அரசு விழாக்கள் போன்றவற்றில் பங்கேற்பதைத் தடுக்க வேண்டும். இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சி நிர்வாகம், சுகாதாரத்துறை, காவல்துறை ஆகியவற்றின் உயர்மட்ட கூட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உடனடியாகக் கூட்டி, அரசு இந்த விஷயத்தில் ஒரு நேர்வழியில் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.from மாவட்ட செய்திகள் https://ift.tt/33CWlTz