கடந்த ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் மார்கழி மாதம் பெய்த பருவம் தவறிய கனமழையால், நெற்பயிர்கள் கீழே சாய்ந்து இப்பகுதி விவசாயிகள் கடுமையான நஷ்டத்தை சந்தித்தார்கள். இந்த ஆண்டும் இம்மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் பருவம் தவறிய கன மழையால், பல்லாயிரக் கணக்கான ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் கீழே சாய்ந்து இப்பகுதி விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. பொங்கல் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாட வேண்டிய தருணத்தில் இந்த ஆண்டும் இப்படி ஓர் அவலம் ஏற்பட்டுவிட்டதே என மிகுந்த மனஉளைச்சலில் தவிக்கிறார்கள்.

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வழக்கம் போல இந்த ஆண்டு பத்து லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டது. நவம்பர் முதல் வாரம் பெய்த தொடர் கனமழையால், நெல் வயல்களில் தண்ணீரில் தேங்கி, பயிர்களை மூழ்கடித்தது. பதை பதைத்துப்போன விவசாயிகள், தங்களது நெற்பயிர்களை மீட்டெடுக்க, படாத பாடு பட்டார்கள்.

மழையில் மூழ்கிய பயிருடன் விவசாயி (File Pic)

Also Read: தொடர் மழையால் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்; தீர்வுக்காக கண்ணீருடன் காத்திருக்கும் விவசாயிகள்!

தண்ணீரை வடிய வைக்க முடியாத அளவுக்கு தொடர்ச்சியாக மழை பெய்துகொண்டே இருந்தது. வேர்கள் அழுகத் தொடங்கின. மீண்டும் வெயில் அடிக்கத் தொடங்கியதும், சற்று நிம்மதி அடைந்தார்கள். தங்களது நெற்பயிர்களைக் கண்டிப்பாகக் காப்பாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் வயலில் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றி, உரமிட்டு, பயிரை மீட்டெடுத்தார்கள். கதிர்கள் உருவாகி, பொங்கல் தருணத்தில் அறுவடைக்குத் தயாராகிக் கொண்டிருந்த நிலையில்தான் டிசம்பர் 31, ஜனவரி 1,2 ஆகிய நாள்களில் கொட்டித்தீர்த்த கனமழையால், டெல்டா மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் நெற்பயிர்கள் கீழே சாய்ந்து, இப்பகுதி விவசாயிகளைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலும் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, கொரடாச்சேரி, அரித்துவாரா மங்கலம், வலங்கைமான், நன்னிலம் மற்றும் இதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் கீழே சாய்ந்து, சேற்றில் மூழ்கியதால் சேதமடைந்தன. இதேபோல் நாக்கப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் திடீர் கனமழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு இப்பகுதி விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயி சந்திரன்

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள கோவூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சந்திரன், ``நான் மூணு ஏக்கர்ல சம்பா பட்டத்துல சி.ஆர் 1009 ரக நெல்லு சாகுபடி செஞ்சிருந்தேன். பயிர்கள் அடியோடு கீழ சாஞ்சதுனால, கதிர்கள் சேத்துல மூழ்கி முளைக்க ஆரம்பிச்சிடுச்சு, அவசரப்பட்டு உடனே அறுவடையும் செஞ்சிட முடியாது. நெல்மணிகள் முழுமையா முத்தி அறுவடைக்கு வர இன்னும் பத்து நாள்களுக்கு மேல காத்திருந்தாகணும். கிடைச்ச வரைக்கும் போதும்னு நினைச்சி அறுவடை செய்யலாம்னா, இப்ப அறுவடை மெஷினை உள்ளார இறக்க முடியாது.

சேத்துல சிக்கி மெஷின் உக்காந்துக்கும். சேத்துல கிடக்குற கதிர்களை ஆள் வச்சு அறுக்குறதும் சாதாரண காரியமில்லை. கஷ்டப்பட்டு அறுத்தாலும்கூட, அதைக் கரை சேர்க்குறது ரொம்ப கஷ்டம். மழை இல்லாமல், இயல்பா அறுவடை நடந்தால், கதிர்களை அறுத்தறுத்து, வயல்லயே போட்டு வச்சு, மொத்தமா கட்டு கட்டி, களத்து மேட்டுக்குக் கொண்டு போயி கதிர் அடிப்போம். இப்ப வயல் முழுக்கவே சேறும் சகதியுமா கிடக்கு. நெல்மணிகளும் சேத்துக்குள்ளார உதிர்ந்துடும்’’ எனக் கவலையோடு தெரிவித்தார்.

தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள் (File Pic)

Also Read: மழைநீரில் மூழ்கும் நெற்பயிர்கள்; இனி விவசாயிகள் செய்யவேண்டியவை என்ன? வழிகாட்டும் நிபுணர்கள்

``ஒரு சில பகுதிகளில் மட்டும் இந்தப் பாதிப்பு ஏற்பட்டதால், தமிழக அரசு இதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அதிகாரிகளோ, மக்கள் பிரநிதிகளோ நேரில் சென்று பார்வையிடவும் இல்லை என்ற ஆதங்கம் நிலவுகிறது. நிவாரணம் மற்றும் பயிர் இன்ஷூரன்ஸ் இழப்பீட்டுத் தொகை கிடைப்பதற்கும் கூட வாய்ப்பு குறைவுதான்’’ என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள்.

ஒட்டுமொத்தமாகப் பாதித்தாலும், ஒரு சில பகுதிகளில் மட்டும் பாதிப்பு ஏற்பட்டாலும், விவசாயிகளுக்கு ஏற்பட்ட நஷ்டம் நஷ்டம்தான். இவர்களைத் தமிழக அரசு கைவிடக் கூடாது, பயிர் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் இவர்களை ஏமாற்ற நினைக்கக் கூடாது. தங்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை ஈடுகட்ட தமிழக அரசு தங்களுக்கு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 30,000 ரூபாய் நிவாரணம் தர வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். தங்களிடம் நிதி இல்லையென தமிழக அரசு எக்காரணம் கொண்டும் கைவிட்டுவிடக் கூடாது என்றும் மத்திய அரசிடமிருந்தாவது இதற்கான நிதியைப் பெற்று நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறார்கள்.from மாவட்ட செய்திகள் https://ift.tt/3JPcKEP