பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, கொரோனா வைரஸ் நெருக்கடிகளை தொடர்ந்து மீண்டும் கோவை, திருப்பூர் மாவட்ட ஜவுளித்துறையில் மீண்டும் ஓர் அசாதாரண சூழ்நிலை உருவாகி வருகிறது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2.50 லட்சம் விசைத்தறிகள், 20,000 நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இவர்கள் கூலி உயர்வு தொடர்பாக கோரிக்கை வைத்து வந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள், அதிகாரிகள் பல்லடம் ரகத்துக்கு 20 சதவிகிதம், சோமனூர் ரகத்துக்கு 23 சதவிகிதம் கூலி உயர்வு அறிவிக்கப்பட்டது.

விசைத்தறி

Also Read: கடன் நெருக்கடியால் விசைத்தறி உரிமையாளருக்கு நேர்ந்த விபரீதம்!

ஆனால் அதை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வரும் ஜவுளி உற்பத்தியாளர்களின் மெத்தன போக்கைக் கண்டித்து 2 மாவட்ட விசைத்தறியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 2 லட்சத்துக்கும் அதிகமான தறிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விசைத்தறி தொழிலை சார்ந்த சைசிங், நூற்பாலைகள், ஓ.இ., மில்கள், பீஸ் செக்கிங், மடிப்பு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. 5 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

இதுகுறித்து சோமனூர் ரக விசைத்தறியாளர் செல்வகுமார் கூறுகையில், "1976-ல இருந்து இந்தத் தொழில்ல இருக்கேன். என்கிட்ட 32 விசைத்தறி இருக்கு. 1991-ல விசைத்தறி கூட்டமைப்பு சங்கம் உருவாச்சு. மூணு வருஷத்துக்கு ஒருமுறை கூலி உயர்வு பத்தி பேச்சுவார்த்தை நடக்கும். ஜாப் ஆர்டர் அடிப்படைலதான் வேலை செய்யறோம். ஜவுளி உற்பத்தியாளருங்க, மீட்டருக்கு சுமார் ரூ.4.70 கொடுக்கறாங்க. என்கிட்ட 6 பேர் வேலை செய்யறாங்க. இவங்களுக்கு நாங்க வாரவாரம் சம்பளம் கொடுக்கனும். உற்பத்தியாளருங்க மாசத்துக்கு ஒருமுறை தான் எங்களுக்கு பேமென்ட் கொடுப்பாங்க. 1994, 1996, 2000, 2003, 2005, 2008, 2011, 2014னு தொடர்ந்து கூலி உயர்வு பத்தி பேசிட்டேதான் இருக்காங்க.

செல்வகுமார்

கடைசியா 2014-ல தான் சம்பிராயத்துக்காக கூலிய கொஞ்சம் உயர்த்தினாங்க. அதையும் 6 மாசத்துல குறைச்சுட்டாங்க. அந்த கூலிய தான் இப்பவரை வாங்கிட்டு இருக்கோம். 2014-ல பேசிருந்த கூலில இருந்து சோமனூர் ரகத்துக்கு 23% , பல்லடம், இதர ரகங்களுக்கு 20% கூலி உயர்வு பேசி, அமைச்சர் முன்னிலையில பேசி ஒப்பந்தம் போட்டோம். டிசம்பர்ல இருந்தே கூலி உயர்வை அமல்படுத்தணும்னு அமைச்சர் சொன்னார். இப்பவரை அதைக் கொடுக்கல. அதுக்காக தான் போராட்டத்துல இறங்கிருக்கோம்.

ஜவுளிக்கு ஜி.எஸ்.டி வரி உயருதுன்னு காரணம் சொன்னாங்க. இப்ப அந்த உத்தரவையே ஜி.எஸ்.டி கவுன்சில் தள்ளி வைச்சுட்டாங்க. 2014-ல டீசல் விலை ரூ.56 இருந்துச்சு. இப்ப டீசல் விலை ரூ.102 ஆகிருக்கு. அவங்களோட வண்டிக ஓடறதை எல்லாம் நிறுத்திட்டாங்களா என்ன. ஜவுளி சம்மந்தப்பட்ட எல்லா மூலப் பொருள்களோட விலை எல்லாம் ஏறிடுச்சு. அதை எல்லாம் வாங்கிட்டு தான் இருக்காங்க. 2014-ல 500 தறிக்கு கொடுத்துட்டு இருந்த ஜவுளி உற்பத்தியாளருங்க, இன்னிக்கு 1,500 தறிக்கு கொடுத்துட்டு இருக்காங்க. இவங்க சொல்ற மாதிரி பார்த்தா, ஜாப் ஆர்டர் கொடுக்கற தறிங்களோட எண்ணிக்கை குறைஞ்சுருக்கனும்.

விசைத்தறி

லாபம் வரதுனாலதான தறிங்களோட எண்ணிக்கை அதிகமாகிருக்கு. சொல்லப்போனா அவங்க இன்னும் அப்டேட் ஆகிட்டாங்க. எங்கக் கிட்ட வர மாதிரியே, நவீன தறிக்கு (Auto Loom) போயிட்டாங்க. 3 விசைத்தறில பண்ற உற்பத்திய, இதுல ஒரே தறில எடுக்க முடியும். கிட்டத்தட்ட எல்லா உற்பத்தியாளருங்களுமே நவீன தறி வெச்சு ஓட்டிட்டு இருக்காங்க. அதனால, தான் எங்களை உதாசீனபடுத்தறாங்க.” என்றார் வேதனையுடன்.

பல்லடம் விசைத்தறி சங்க தலைவர் வேலுசாமி, ``ஒவ்வொரு தடவையும் போராட்டம் நடத்திதான் கூலி உயர்வு வாங்கிட்டு வரோம். போன மார்ச் மாசமே கூலி உயர்வு சம்மந்தமா அவங்களுக்கு நோட்டீஸ் கொடுத்துட்டோம். 2021 நவம்பர் 24-ம் தேதி, கோவை ஆட்சியர் அலுவலகத்துல அமைச்சர்கள் வெள்ளகோவில் சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் முன்னிலையில, கூலி உயர்வு அறிவிச்சாங்க. இப்ப ஒப்பந்தம் போட்ட கூலிய கொடுக்க மாட்டோம்னு சொல்றதை எப்படி ஏத்துக்க முடியும்.

வேலுசாமி

பல்லடம், அவிநாசி, சோமனூர், திருப்பூர் பகுதிகள்ல ஜவுளி உற்பத்தியாளர்கள் இருக்காங்க. கூலி உயர்வு சம்மந்தமான பேச்சுவார்த்தைக்கு, ஜவுளி உற்பத்தியாளருங்க முழுசா வரது கூட இல்ல. இதனால, தீர்வே கிடைக்கறது இல்ல. ஒரு மீட்டர் துணி உற்பத்தி பண்றதுக்கு, 10 வகையான செலவுகள் இருக்கு. சைசிங் கூலி ரெண்டு தடவை உயர்த்திருக்காங்க. காஸ், பஞ்சு, நூல்னு எல்லா மூலப்பொருள்களோட விலையும் அதிகமாகிருக்கு.

ஒவ்வொரு ரகத்துக்கும் ஒருவிதமான ரேட். சராசரியா ஒரு மீட்டருக்கு ரூ.4 கொடுக்கறாங்கனா, அதுல ரூ.1.25 எங்க ஊழியர்களுக்கு கொடுக்கனும். அதாவது 3-ல 1 பங்கு ஊழியர்களுக்கு கொடுக்கனும். இது இல்லாம மின்சாரம், ஆயில் கிரீஸிங், உதிரி பாகங்கள், வைண்டிங் கூலி, பாவு முடிச்சு போடறதுனு நிறைய செலவு இருக்கு. அந்த வகைல பார்த்தா 12 மணிநேரம் வேலை பார்த்தா, நல்ல உற்பத்தி கிடைக்கற இடத்துல ஒருத்தருக்கு தினமும் ரூ.500 தான் கூலி கிடைக்கும். அவங்கக் கிட்ட வேலை பார்க்கற, கணக்குப் பிள்ளைல இருந்து டிரைவர் வரை எல்லாரோட சம்பளத்தையும் ஏத்திருக்காங்க. நிலைமை இப்படி இருக்கறப்ப, முழு பூசணிக்காய சோத்துல மறைக்க பாக்கறாங்க.

காலவரையற்ற வேலை நிறுத்தம்

தறி ஓட்டறவங்களோட இயலாமையை பயன்படுத்தி, காலத்தை கடத்திட்டு இருக்காங்க. 2014-ல இருந்த அதே சம்பளம் தான் இப்பவும் கொடுக்கறோம். விலைவாசி எல்லாம் அப்படியேதான் இருக்குதா. உழைக்கற தொழிலாளிகளுக்கு கூலி கொடுக்கறதால எந்த தொழிலும் அழியாது. ஒப்பந்தம் போட்ட கூலிய அமல்படுத்தற வரை எங்க போராட்டம் தொடரும்.” என்றார் உறுதியான குரலில்.

சோமனூர் ஜவுளி உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றி வரும் ராம், ``அவங்களோட கோரிக்கை 100 ஏத்துக் கொள்ள கூடியதுதான். ஆனா ஜவுளி வர்த்தகம் கோவை, திருப்பூரை மட்டுமோ அல்லது கோவையை சார்ந்தததோ இல்ல. கோவை, திருப்பூர் இதுக்கு பிரதானமா இருந்தது ஒரு காலம். கடந்த 5 வருஷத்துல தெலங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்கள்ல 2 லட்சம் தறிங்க பக்கம் வந்து குடிசை தொழில் மாதிரி ஆகிருச்சு. அரசாங்கமும் அதை ஊக்குவிக்குது. ஜவுளி உற்பத்தியாளர்கள்தான் அவங்க வாழ்க்கைய முடக்கறதா சொல்றாங்க. உலக அளவுல பஞ்சு விலை உயந்துருக்குனு மத்திய அமைச்சரே சொல்லிருக்கார். மூலப்பொருள் விலை உயர்வுக்கு தகுந்த மாதிரி, எங்களுக்கும் விலை கிடைச்சா மட்டும்தான் இவங்க கேக்கற கூலிய கொடுக்க முடியும்.

நூல்

Also Read: விசைத்தறி தொழிலாளர் பிரச்னை: வைகோ கோரிக்கை

ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு விலை கிடைக்குதா, ஏன் கூலிய கொடுக்க முடியலனு அரசாங்கம் அதை ஆய்வு பண்ணனும். ஏற்கெனவே 25 விசைத்தறி தொழில் அழிஞ்சுருச்சு. இந்தப் போராட்டம் தொடர்றப்ப இந்தத் தொழிலே இல்லாத நிலை உருவாகும். மூலப்பொருள்களுக்கு நிரந்தர விலை கிடைக்கற மாதிரி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கனும். அப்பதான் இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.” என்றார்.

பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சக்திவேல், ``10% கூலி உயர்வு பண்றதுக்கு தயாரா இருக்கோம். எங்க முடிவை 9 சங்கத்துல 7 சங்கம் ஏத்துக்கிட்டாங்க. 2 சங்கம் தான் ஏத்துக்காம, தவறான தகவல்களை சொல்லி உள்நோக்கத்தோட போராட்டம் பண்றாங்க. இதைவிட நவீன தறிக்கு கூலி குறைவு. வட இந்தியாவுல இதைவிட கூலி குறைவாதான் தராங்க. கொரோனா, ஜி.எஸ்.டி, மூலப்பொருள் விலை உயர்வுனு தலைக்கு மேல நிறைய பிரச்னை போயிட்டு இருக்கு. சந்தை நிலைமை மோசமா இருக்கு. அப்படி இருக்கறப்ப தொழிலை நஷ்டத்துல நடத்த சொல்லி யாரும் எங்களை கட்டாயப்படுத்த முடியாது.

விசைத்தறி

கூலி உயர்வு தர மாட்டோம்னு யாரும் சொல்லலை. எல்லாம் சரியானப்பறம், அவங்க கேக்கற கூலிய தரோம்னு தான் சொல்றோம். 7 வருஷமா கூலி உயர்த்தலைனு பொத்தாம் பொதுவா சொல்றாங்க. படிப்படியாக கூலி உயர்த்திட்டுதான் இருக்கோம். தேவை அதிகரிக்கறப்ப, எல்லாமே நாங்களே பண்ணுவோம். இதே நிலை தொடர்ந்தா, இந்த ரகமே வேண்டாம்னு முழுசா நவீன தறிக்கு போகறதை தவிர்க்க முடியாது. பலர் அப்படிதான் போயிட்டு இருக்காங்க.” என்றார்.

தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் லீலாவதி, ``இதற்கு முன்பு நடந்த பேச்சுவார்த்தைகளின் போது, எல்லா ரகங்களை சேர்ந்தவர்களும் வரவில்லை. அதனால்தான், உடன்பாடு ஏற்படவில்லை. 20- ம் தேதி அனைத்துத் தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

விசைத்தறி நூல்

இது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட விஷயம்தான். அதை அமலப்படுத்துவதில் மட்டும் பின்னடைவு நிலவுகிறது. பேச்சுவார்த்தைக்கு அனைவரும் வரும்பட்சத்தில், உடனடியாக தீர்வை எட்டிவிடலாம்.” என்றார்.

`எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்.’



from மாவட்ட செய்திகள் https://ift.tt/33LhESI