வேலூர் காட்பாடியைச் சேர்ந்த ரௌடி வி.ஜே.தேவாமீது கொலை மிரட்டல், கைத்துப்பாக்கிகளை விற்பனை செய்தல், பண மோசடி போன்ற குற்ற வழக்குகள் இருப்பதால், வேலூர் மாவட்ட ரௌடிகளில் பட்டியலிலும் அவரின் பெயர் சேர்க்கப்பட்டிருக்கிறது. நீண்ட தாடி, கூந்தல் பின்னும் அளவுக்கு தலைமுடியுடன் தோற்றமளிக்கும் தேவா, கூலிங் கிளாஸ் அணிந்துக்கொண்டு சொகுசு காரில்தான் வலம் வருவாராம். தென் மாவட்டங்களில் ஓரளவு வாக்குவங்கியுடைய ஒரு கட்சியில் வேலூர் மாவட்டச் செயலாளர் பொறுப்பு தேவாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

தேவா

2018-ம் ஆண்டு ஜூலை மாதம், வேலூரிலுள்ள சி.எஸ்.ஐ தேவாலயத்துக்குள் தேவா தலைமையிலான ரௌடி கும்பல் புகுந்து தாக்குதல் நடத்தியது. அப்போது, தேவாவை கைது செய்த போலீஸார் அவரின் காரிலிருந்து கைத்துப்பாக்கி, கத்தி, வீச்சரிவாள் போன்ற ஆயுதங்களையும் கைப்பற்றினர். சிறையிலிருந்து ஜாமீனில் வந்த தேவா 2020 மே மாதம், சட்ட விரோதமாக கைத்துப்பாக்கியை விற்ற வழக்கிலும் கைது செய்யப்பட்டார். சில நாள்கள் சிறையில் இருந்துவிட்டு மறுபடியும் ஜாமீனில் வந்த தேவாவின் ஆட்டம் அடங்கவில்லை என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில்.

வேலூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மெடிக்கல் சீட் வாங்கித் தருவதாகவும், வேலையில் சேர்த்துவிடுவதாகவும் பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கிலும் 2020 ஆண்டு நவம்பரில் கைது செய்யப்பட்ட தேவா வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், சிறையிலிருந்து வெளியில் வந்த தேவா கட்டப் பஞ்சாயத்து, வழிப்பறி போன்ற குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறாரா என்றும் காவல்துறை கண்காணித்துவருகிறது.

பிறந்த நாள் போஸ்டர்

இந்த நிலையில், டிசம்பர் 7-ம் தேதி தேவாவின் பிறந்த நாளையொட்டி வேலூர் மாநகரம் முழுவதும் அவரின் ஆதரவாளர்கள் பிரமாண்ட போஸ்டர்களை ஒட்டியிருப்பது, பார்ப்போரை பீதியடையச் செய்திருக்கிறது. தேவாவின் படத்துடன் ‘எங்கள் போர்படை தளபதியே!’ என்ற வாசகமும் இடம் பெற்றிருக்கிறது.

இது தொடர்பாக, வேலூர் காவல் துறை அதிகாரிகளிடம் பேசினோம். ``தற்போதைக்கு தேவா மீது ஆயுத வழக்கு உட்பட ஐந்து வழக்குகள் இருக்கின்றன. ‘ஏ’ பட்டியல் ரௌடிகள் கண்காணிப்பில்தான் அவரும் இருக்கிறார். பிரமாண்டமாக போஸ்டர் ஒட்டி பிறந்த நாள் கொண்டாடியது தொடர்பாகவும் விசாரணை நடத்திவருகிறோம்’’ என்றனர்.from மாவட்ட செய்திகள் https://ift.tt/32UH7t0