ஆவின் மற்றும் அரசுத்துறைகளில் வேலை வாங்கித்தருவதாக ரூ.3 கோடி வரை பண மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவர் உதவியாளர்கள் உட்பட நான்கு பேர்மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் பெறுவதற்காக ராஜேந்திர பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு கடந்த 17-ம் தேதி தள்ளுபடி செய்யபட்டது. அன்றே காரில் சென்று தப்பித் தலைமறைவானார் ராஜேந்திர பாலாஜி. அவரைக் கைதுசெய்ய எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில், 19 நாள்கள் கழித்து, கர்நாடக மாநிலத்தில் அவர் கைதுசெய்யப்பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி மத்திய சிறையில்அடைக்கப்பட்டார்.

விநாயக மூர்த்தி

ராஜேந்திர பாலாஜியின் கைது நடவடிக்கையை அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர்கள் கண்டித்துள்ளனர். ``ராஜேந்திர பாலாஜிமீது போடப்பட்ட வழக்கு பொய்யானது. எந்தவித ஆதாரமும் இல்லாதது. அதை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம். விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் இதேபோல 21 பண மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதையெல்லாம் விசாரணை செய்யவும், அதில் குற்றம்சாட்டப்பட்டவர்களைக் கைது செய்யவும் ஆர்வம் காட்டாத போலீஸார், தி.மு.க அரசின் உத்தரவிற்கிணங்க ராஜேந்திர பாலாஜியை வேண்டுமென்றே கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த வழக்கில் போலீஸார் அவரை மட்டுமல்ல, வழங்கறிஞர்களையும் சேர்த்தே பழிவாங்கியுள்ளனர்” என மீடியாக்களில் தெரிவித்துள்ளனர் ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர்கள். இந்த நிலையில், ``முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் கைதுசெய்து சிறையில் அடைத்ததுடன், தற்போது ஜாமீன் கிடைக்க விடாமலும் வேண்டுமென்றே பழிவாங்கும் கட்சியில் இனி இருக்க விருப்பமில்லை” எனக் கட்சியிலிருந்து விலகியிருக்கிறார் விருதுநகர் மாவட்டம், அனுப்பங்குளத்தைச் சேர்ந்த தி.மு.க உறுப்பினர் விநாயகமூர்த்தி. தி.மு.க-வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு, தனது உறுப்பினர் அட்டையுடன் ராஜினாமா கடிதத்தையும் அவர் அனுப்பியுள்ளார்.

தி.மு.க உறுப்பினர் அட்டை

இது குறித்து விநாயக மூர்த்தியிடம் பேசினோம். ``எங்க மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிவகாசி தொகுதியின் எம்.எல்.ஏ-வாக 10 ஆண்டுகள் இருந்திருக்கிறார். சிவகாசின்னாலே பட்டாசு உற்பத்திதான். பட்டாசுத் தொழிலாளர்களின் நலனுக்காகவும், பாதுகாப்பான பட்டாசுத் தொழில் உற்பத்திக்கும் உறுதுணையாக இருந்தார். சிவகாசி அரசு மருத்துவமனையில் கூடுதலாக நவீன தீக்காய சிகிச்சைப் பிரிவு அமைத்துக் கொடுத்திருக்கிறார். அவர்மீது சுமத்தப்பட்டது பொய்யான குற்றச்சாட்டு என்பது தற்போதுதான் தெரியவருகிறது.

பண மோசடி செய்திருப்பதாக ராஜேந்திர பாலாஜிமீது சுமத்தப்பட்ட வழக்கில் புகார் அளித்துள்ள சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரனே, ``நான் ராஜேந்திர பாலாஜியை நேரில் சந்திக்கவோ, பணம் கொடுக்கவோ செய்யவில்லை. அ.தி.மு.க நிர்வாகியான விஜய நல்லதம்பியைத்தான் நேரில் சந்தித்து வேலைக்காகப் பணம் கொடுத்தேன்” என உச்ச நீதிமன்றத்தில் தெளிவாக, அறிக்கையாகக் கொடுத்துள்ளார்.

ராஜேந்திர பாலாஜி

இதுவரை விஜயநல்ல தம்பியை ஏன் போலீஸார் கைது செய்யவில்லை? அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், வீரமணி வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது. சில அமைச்சர்கள் வீடுகளில் கணக்கில் வராத பணம், நகை கைப்பற்றப்பட்டும் இதுவரை அவர்கள் கைதுசெய்யப்படவில்லை. ராஜேந்திர பாலாஜிமீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்பது போலீஸாருக்கே தெரியும். ராஜேந்திர பாலாஜி மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசக்கூடியவர்.

Also Read: செக்போஸ்ட்டில் தப்பிக்கவிட்ட போலீஸ் - செக்கிங்கில் தப்பி, சேஸிங்கில் சிக்கிய ராஜேந்திர பாலாஜி!

சில நேரங்களில் கோபத்தில் அருவருக்கத்தக்க வார்த்தைகளையும் பயன்படுத்திப் பேசியிருக்கிறார். அவற்றை மறுப்பதற்கில்லை. கடந்த ஆண்டு தொண்டாமுத்தூரில் தி.மு.க தலைவர் ஸ்டாலினை மேடையில் கடுமையாக விமர்சித்ததால்தான் ராஜேந்திர பாலாஜி மீது கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது. எட்டு தனிப்படைகள் அமைத்து, கொலைக் குற்றவாளியைப்போல, தேச பயங்கரவாதியைப்போலத் தேடி அவசரகதியில் கைதுசெய்து சிறையில் அடைக்கவேண்டிய அவசியமென்ன... ராஜேந்திர பாலாஜி கைது நடவடிக்கையில் அவசரம் காட்டியது ஏன் என உச்ச நீதிமன்ற நீதிபதிகளே தமிழக அரசை நோக்கிக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ராஜேந்திர பாலாஜி

அரசியல் காழிப்புணர்சியால் தி.மு.க அரசின் உந்துதலால் ராஜேந்திர பாலாஜி கைதுசெய்யப்பட்டதாக எனக்குத் தோன்றுகிறது. 15 ஆண்டுகளாக தி.மு.க-வில் உறுப்பினராக இருக்கும் நான் எனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாகத் தீர்மானித்து, எனது ராஜினாமா கடிதத்துடன் உறுப்பினர் அட்டையையும் இணைத்து அறிவாலயத்துக்கு அனுப்பிவைத்துவிட்டேன்” என்றார்.

Also Read: ராஜேந்திர பாலாஜி: `இத்தனை நாள்களாக எங்கு இருந்தீர்கள்?’; 15 நாள் நீதிமன்றக் காவல்' - நீதிபதி உத்தரவுfrom மாவட்ட செய்திகள் https://ift.tt/3FbRGF0