விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கான்சாபுரம் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் தென்னை விவசாயம் பரவலாக நடந்து வருகிறது. இதனால், விவசாயப் பணிகளுக்காக தினமும் வ.புதுப்பட்டி டு கான்சாபுரம் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் கடந்து செல்கின்றனர். இந்த நிலையில், கான்சாபுரம் அருகில் உள்ள அர்ச்சுனாபுரம் பெரிய ஓடைப் பகுதியில் இருந்து மூலக்காடு கிராமம் செல்லும் பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 9 நாட்டு வெடிகுண்டுகள்

அப்போது பெரிய ஓடைக்கு அருகில் நின்றிருந்த 3 பேர், வனத்துறையினரைக் கண்டதும் அவர்கள் கையில் வைத்திருந்த 2 சாகுப்பைகளை வீசிவிட்டு தப்பியோடினர். இதனையடுத்து, அந்த சாகுப்பைகளை சோதனையிட்ட போது இரண்டு பைகளிலும் சேர்த்து 9 நாட்டுவெடிகுண்டுகள் இருந்தன. இதனையடுத்து வத்திராயிருப்பு காவல்நிலைய போலீஸார், பெரிய ஓடைப் பகுதிக்குள் விவசாயிகள், பொதுமக்கள் யாரும் நுழையாதபடி கயிறுகளால் கட்டப்பட்டு பாதுகாப்பிற்காக போலீஸார் நிறுத்தப்பட்டனர்.

Also Read: புதுச்சேரி: `பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக நாட்டு வெடிகுண்டு!’ - வீடியோ வெளியிட்டவரைத் தேடும் போலீஸ்

தொடர்ந்து விருதுநகர் வெடிகுண்டு நிபுணர்கள், நக்சல் சிறப்பு அலுவல் பிரிவு போலீஸார் சோதனையிட்டனர். வெப்பத்தின் காரணமாக வெடிகுண்டுகள் எப்பொழுது வேண்டுமானாலும் வெடித்து விடும் என்ற காரணத்தினால் அப்பகுதியில் உடனடியாக பள்ளம் தோண்டப்பட்டு வெடிகுண்டுகள் அதனுள் வைக்கபட்டது. அந்த பகுதியில் போலீஸார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் புதுப்பட்டி கிறிஸ்டியான்பேட்டையைச் சேர்ந்த புஷ்பராஜ், சின்னச்சாமி, சரத்குமார் ஆகிய மூன்று பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆய்வு செய்த நக்சல் சிறப்பு பிரிவு போலீஸார்

ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதிகளில் காட்டுப்பன்றி அதிகளவில் காணப்படுகிறது. இவை, உணவு தேடி இதுபோன்ற தென்னை தோப்புகள், காய்கறி மற்றும் பழத் தோட்டங்களுக்கு வருவது வழக்கம். காட்டுப்பன்றி போன்ற விலங்குகளை வேட்டையாடுவதற்காக வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டதா அல்லது நாசவேலைகளுக்காக தயாரிக்கப்பட்டதா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாயிகள், பொதுமக்கள் தினமும் கடந்து செல்லும் சாலையில் வெடிகுண்டுகள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.from மாவட்ட செய்திகள் https://ift.tt/3FAEJEU