குழந்தையின்மை பெரும்பிரச்னையாக மாறியிருக்கிற இன்றைய காலகட்டத்தில் செயற்கை கருத்தரித்தல் மூலமாகவும், வாடகைத் தாய் மூலமாகவும் குழந்தை பெற்றுக்கொள்ளும் போக்கு அதிகரித்திருக்கிறது. குழந்தை பெற்றுக்கொள்ள இயலாத தம்பதியர் இந்தச் சமூகம் தரும் அழுத்தத்திலிருந்தும் குழந்தை இல்லை என்ற தீராத கவலையிலிருந்தும் விடுபடுவதற்கு இந்த முறைகள் பெரிதும் உதவியாக இருந்தாலும் இதுகுறித்து அவ்வப்போது எழும் குற்றச்சாட்டுகள்தான் பலரையும் கலங்கடிக்கின்றன. அப்படி சமீபத்தில் ஒரு புகார். வாடகைத் தாயாகச் சென்ற தான் ஏமாற்றப்பட்டதாகச் சென்னை வேப்பேரி கமிஷனர் அலுவலகத்தில் கண்ணீருடன் புகார் கொடுத்துள்ளார் ஓர் இளம்பெண். என்ன பிரச்னை?

Baby (Representational Image)

Also Read: `அதிக பணம் கிடைக்கும்; புது வாழ்வைத் தொடங்கலாம்’ - காதலியை ஏமாற்றி வாடகைத் தாயாக மாற்ற முயன்ற காதலன்

அந்தப் பெண் கொடுத்த புகாரில், ``எனக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். எனக்கும் என் கணவருக்கும் உறவினர்கள் என்று யாரும் இல்லாத நிலையில், நாங்கள் பொருளாதார ரீதியாக மிகவும் கடினமான சூழலில் எங்கள் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தோம். இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காலம் எங்கள் நிலைமையை மேலும் மோசமாக்கியது. வறுமையை எதிர்கொள்ள முடியாமல் நாங்கள் தவித்தபோதுதான் வாடகைத் தாய் முறையைப் பற்றி எனக்குத் தெரிய வந்தது. இதுதொடர்பாக முரளி என்ற நபரை நான் அணுகியபோது, சென்னை ஃபெர்ட்டிலிட்டி சென்டர் மருத்துவமனைக்கு வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுத் தந்தால் 5 லட்சம் ரூபாய் மருத்துவமனை நிர்வாகம் கொடுக்கும் என்றார். இரண்டு குழந்தைகளின் கல்விச் செலவு மற்றும் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு என் கணவரின் அனுமதியுடன் நான் வாடகைத் தாயாக மாற முடிவு செய்தேன்.

இதனையடுத்து, 2021 மே மாதம் சென்னை ஃபெர்ட்டிலிட்டி சென்டர் மருத்துவமனைக்குச் சென்றேன். டாக்டர் சித்ரா ராமநாதன் சில மருந்து மாத்திரைகளைக் கொடுத்து, ஒரு மாத காலம் அவற்றை எடுத்துக்கொள்ளுமாறு சொன்னார். அதனை அவர்கள் சொன்னபடி எடுத்துக்கொண்ட பிறகு, ஜூலை 31-ம் தேதி, அந்த மருத்துவமனையின் உரிமையாளரான டாக்டர் வி.எம். தாமஸ் IVF மூலமாக எனது கர்ப்பப் பையில் வேறொருவரின் கருவைச் செலுத்தினார். இதனையடுத்து, நான் கருவுற்றேன். 15 நாள்கள் என்னை அங்கேயே தங்க வைத்து பிறகு வீட்டுக்கு அனுப்பினார்கள். பின்பு, வாரம் ஒருமுறை மருத்துவமனைக்கு வரவழைத்து ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டனர். 12-வது வாரத்தில்தான் எனது கர்ப்பப் பையில் மூன்று கருக்கள் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, மயிலாப்பூரில் உள்ள மெடி ஸ்கேனுக்கு அனுப்பி மூன்றில் ஒரு கருவை மட்டும் ஊசி மூலமாகக் கலைக்கச் செய்தார் டாக்டர் சித்ரா ராமநாதன்.

Baby

மீதமுள்ள இரண்டு கருக்கள் எனக்குள் வளர்ந்தன. பிறகு, இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மருத்துவமனைக்கு வரச் சொல்லி ஸ்கேன் செய்தார்கள். இப்படி 25 வாரங்கள் கடந்த நிலையில், ஜனவரி 3-ம் தேதி, முற்பகல் 1 மணியளவில் எனக்கு இடுப்பு வலி வந்தது. என்னை 108 ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்கள். காலையில் ஸ்கேன் செய்து முடித்து பிரசவ வார்டுக்குள் அழைத்துச் சென்றார்கள். சுகப்பிரசவத்தில் ஒரு ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாக இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகள் உயிரோடிருந்ததை என் கண்களால் பார்த்தேன். பிறகு என்னைத் தனி வார்டுக்கு அழைத்துச் சென்றனர். 6-ம் தேதி நான் வீடு திரும்பும்போது, அடுத்த வாரம் ஒரு ஸ்கேன் செய்ய வேண்டியிருக்கிறது. அப்போது பணம் தருகிறேன் என்றார்கள். ஆனால், அதற்கடுத்த வாரம் சென்றபோது, `குழந்தைகள் குறை மாதத்தில் பிறந்ததால் இறந்துவிட்டனர், பணமெல்லாம் கொடுக்க முடியாது’ என்று முரளி தகாத வார்த்தைகளால் திட்டினார்.

மேலும், `உனக்கு ரூ.10,000 தான் தர முடியும் உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்துகொள்' என்று மிரட்டினார். இதனால் நான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனது வாழ்க்கையும் என் குழந்தைகளின் வாழ்க்கையும் கேள்விக்குறியான நிலையில் நான் தவறான முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். இதனால் என் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நான் பலவீனமாக இருக்கிறேன். எனக்குத் தருவதாகச் சொல்லி ஏமாற்றிய பணத்தை எனக்குப் பெற்றுத்தருவதுடன் எனக்கான சிகிச்சை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பண பலம் மற்றும் அதிகார பலத்தை வைத்துக்கொண்டு என்னைப் போன்ற ஏழைப் பெண்கள், கணவனை இழந்த பெண்களை இதே பாணியில் ஏமாற்றுகின்றனர். இன்னொரு பெண் இப்படி ஏமாற்றப்படாமலிருக்கத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Baby (Representational Image)

Also Read: `வெறும் தொட்டில்தான் இருந்தது... என்ன குழந்தைனுகூட தெரியாது!’ - ஒரு வாடகைத் தாயின் ஏக்கம்

இந்தப் புகார் தொடர்பாக விசாரித்துவரும் அமைந்தகரை இன்ஸ்பெக்டர் கிருபாநிதியிடம் பேசினோம். ``இன்னும் ஒரிஜினல் புகார் எங்களிடம் வரவில்லை. கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்திருந்த பெட்டிஷனை அடிப்படையாக வைத்து சி.எஸ்.ஆர் போட்டுள்ளோம். இன்று மாலை மருத்துவமனை நிர்வாகத்தினரை விசாரணைக்கு அழைத்துள்ளோம். அவர்களிடம் விசாரணை நடத்திய பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்துக் கூற முடியும்” என்றார்

இதுதொடர்பாக சென்னை ஃபெர்ட்டிலிட்டி சென்டர் உரிமையாளர் டாக்டர் வி.எம்.தாமஸைத் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டோம். ``நாங்கள் அந்தப் பெண்ணை மருத்துவமனையிலேயே தங்கியிருக்கச் சொன்னோம். ஆனால் அவர் கேட்கவில்லை. வீட்டுக்குப் போய் வந்துகொண்டிருந்தார். அதனால்தான் சிக்கல். குறை மாதத்தில் குழந்தைகள் பிறந்ததால் இறந்துவிட்டனர். அதற்கான ஆதாரம் எங்களிடம் இருக்கிறது. நான் வெளியூருக்குப் போய்விட்டு இப்போதுதான் வந்தேன். அந்தப் பெண்ணுக்குப் பணம் கொடுக்கப்படவில்லை என்பதும் அதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்திருப்பதும் எனக்கு நேற்றுதான் தெரியவந்தது. அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டுமோ அதனை உடனடியாக செட்டில் செய்யச் சொல்லிவிட்டேன்” என்பதுடன் முடித்துக்கொண்டார்.from மாவட்ட செய்திகள் https://ift.tt/3fGiRxs