தூத்துக்குடியில் இருந்து வெளிநாட்டிற்கு கடத்துவதற்காக லாரியில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தூத்துக்குடி ஊரக உதவி காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை உதவி ஆய்வாளர் நம்பிராஜன், காவலர்கள் அருள்முருகன், கலைவாணன் அடங்கிய குழுவினர், தூத்துக்குடியில் உள்ள சில கனரக லாரி யார்டு பகுதியில் சோதனை நடத்தினர்.

பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள்

இதில், புதூர்பாண்டியாபுரம் பகுதியில் உள்ள ஒரு லாரி செட்டில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு லாரியில் சோதனையிட்டபோது அதில் செம்மரகட்டைகள் இரண்டு அடுக்காக அடுக்கி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான விசாரணையில் கனரக வாகன யார்டு பகுதி உரிமையாளர் ராகேஷூம், செம்மரக்கட்டைகள் கடத்தல் லாரியின் உரிமையாளர் மில்லர்புரத்தைச் சேர்ந்த ராஜேஷும் தொழில்ரீதியாக நீண்டகால நண்பர்களாக இருந்து வந்துள்ளது தெரியவந்தது.

இதன் அடிப்படையில் ஆந்திராவில் இருந்து செம்மரக்கட்டைகளை லாரி மூலம் ராஜேஷ் கடத்தி வந்து, தூத்துக்குடியில் ராகேஷுக்கு சொந்தமான யார்டு பகுதியில் பதுக்கி வைத்திருந்து, பின்னர் கண்டெய்னர் மூலமாக தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு தொடர்ச்சியாக கடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில், தற்போது பிடிபட்டுள்ள செம்மரக்கட்டைகள் கண்டெய்னரில் ஏற்றுவதற்கு தயாராக இருந்த நிலையில், அதற்குரிய கப்பலில் இடமில்லாததால் லாரி செட்டிலேயே பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யபட்ட செம்மரக்கட்டைகள்

பறிமுதல் செய்யப்பட்டுள்ள செம்மரக்கட்டைகளின் மொத்த சந்தைமதிப்பு ரூ.10 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது. செம்மரக்கட்டை கடத்தல் தொடர்பாக புதியம்புத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ராஜேஷ், ராகேஷ், லாரி டிரைவர் ஆகியோரை தேடி வருகின்றனர். ”செம்மரக்கட்டைகளுடன் பறிமுதல் செய்யப்பட்ட அந்த லாரி, கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே ஆந்திராவில் இருந்து தூத்துக்குடி டோல்கேட் வழியாக ஊருக்குள் வந்தது. ஆனால், திரும்பிச் செல்லவில்லை. இதற்கிடையில்தான், செம்மரக்கட்டைகள் லாரியில் பதுக்கி வைத்திருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்துதான் லாரி செட்களில் தீவிரமாகத் தேட ஆரம்பித்தோம். புதூர் பாண்டியாபுரத்திலுள்ள லாரி செட்டில் தார்பாய் மூடப்பட்ட நிலையில் நின்றிருந்த லாரியைச் சோதனையிட்டோம். அதில் 5 அடி நீளமுள்ள இரண்டு அடுக்குகளாக அடுக்கப்பட்ட 100 செம்மரக்கட்டைகள் இருந்தன. முதல்கட்ட விசாரணையில் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து தூத்துக்குடிக்கு லாரியில் கடத்தி வரப்பட்டு, இங்கிருந்து கண்டெய்னர்கள் மூலம் கப்பலில் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக தெரிய வந்துள்ளது. பெரும்பாலும் ரெடிமேட் ஆடைகள் என்ற பெயரில் செம்மரக்கட்டைகள் மீது 8 அடுக்குகள் வரை ரெடிமேட் ஆடைகள் அடுக்கி வைக்கப்பட்டு கடத்தப்படுவதாக தெரிகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள்

இந்த செம்மரத்தில் இருந்து மருந்துகள், மரச்சாமான்கள், இசைக்கருவிகள், ஆகியவை தயார் செய்யப்படுகின்றன. இதனால், இதற்கான விலையும், மவுசும் அதிகம் எனச் சொல்லப்படுகிறது. லாரி செட்டின் உரிமையாளர், லாரி உரிமையாளர், லாரி டிரைவர் ஆகிய மூன்று பேரையும் தேடி வருகிறோம். அவர்களைக் கைது செய்து விசாரணை நடத்திய பிறகே முழு விவரம் தெரிய வரும்” என்றனர் போலீஸார்.from மாவட்ட செய்திகள் https://ift.tt/3FeHv2n