அரசு பொங்கல் சிறப்புத் தொகுப்பில் வழங்கப்படும் கரும்பு வெளிமாவட்டங்களில் கொள்முதல் செய்யப்பட்டு ரேஷன் கடைகளுக்குக் கொண்டு வரப்படுகிறது. உள்ளூரில் வாங்காததால் கரும்பு அறுவடை செய்யப் பாடமல் வயலிலேயே தேங்கி இருக்குற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வியாபாரிகள் சொற்ப விலைக்குக் கரும்பைக் கேட்பதால் பொருளாதார இழப்பை சந்திக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அரசு இதில் உடனடி கவனம் செலுத்தி எங்களைக் காக்க வேண்டும் எனவும் பட்டுக்கோட்டை விவசாயிகள் கண்ணீர் மல்கக் கூறி வருகின்றனர்.

கரும்பு விவசாயிகள்

Also Read: `பொங்கல் கரும்பு நேரடியாக கொள்முதல் செய்யப்படும்!' - தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்காக ரேஷன் கடைகள் மூலம் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் கொண்டாடுவதற்குத் தேவையான பொருள்களை வழங்கி வருகிறது. அரசு வழங்கும் பொங்கல் சிறப்புத் தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, கரும்பு உள்ளிட்ட 21 பொருள்கள் கொடுக்கப்படுகின்றன. இதில் பல இடங்களில் பொருள்கள் தரமாக இல்லை என்ற குற்றச்சாட்டு சமூக வலைதளங்கள் மூலம் எழுப்பபட்டு வருகிறது.

குறிப்பாக, கரும்பு தரமாக இல்லை, மூன்று அடி உயரம்தான் இருக்கிறது இது போன்ற கரும்பை வழங்கி வருவதால் அரசு மீது இருந்த நல்லெண்ணமே போய்விட்டதாக சமூக ஆர்வலர்கள் பேசி வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க, பட்டுக்கோட்டை பகுதி கரும்பு விவசாயிகள், ``எங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் கொடுப்பதற்கான கரும்புகளை எங்களிடம் வாங்காமல் வெளி மாவட்டம் மற்றும் வெளி பகுதியிலிருந்து வாங்கி வந்து கொடுத்து வருவதால் நாங்கள் பயிரிட்ட கரும்புகள் தேங்கியுள்ளன. வியாபாரிகளும் வராததால் கரும்புகள் தேங்கியுள்ளது கண்ணீரை வரவழைக்கிறது" என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

கரும்பு

துரையரசன் என்பவரிடம் பேசினோம். ``பட்டுக்கோட்டை அருகே உள்ள மஹாராஜா சமுத்திரம் கிராமம் எங்களோடது. எங்க ஊரை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளோம். மழை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் வந்த நிலையிலும் பத்து மாசம் போராடி கரும்பைப் பயிரிட்டு வளர்த்திருக்கிறோம். ஒவ்வொரு கரும்பும் 10 அடி வரை வளர்ந்துள்ளதுடன் நல்ல தடிமனாகவும் தரமானதாகவும் இருக்கிறது.

இந்நிலையில், `அரசு, பொங்கல் பரிசுத் தொகுப்பில் கொடுப்பதற்காக விவசாயிகளிடமிருந்து ஒரு கரும்பு ரூ.33-க்கு வாங்கப்படும் என அறிவித்திருந்தது. இதனால் பாடுபட்ட நமக்கு பலன் கிடைக்கப்போகுது, செலவு போக கையக் கடிக்காம கணிசமான லாபத்தையும் பார்க்கலாம்' எனக் கரும்பு விவசாயிகளான நாங்க நெனச்சோம். அந்தந்த தாலுகா அளவில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மூலம் கரும்பு கொள்முதல் செய்யப்பட வேண்டும்.

துரையரசன்

எங்க பகுதி எம்.எல்.ஏ-க்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் வந்து எங்களிடம் கரும்பு வாங்குவார்கள் எனக் காத்திருந்தோம். ஆனால், யாருமே வரவில்லை. பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி சட்டமன்றப் பகுதிகளுக்கு வெளி மாவட்டங்களிலிருந்து கரும்பு கொள்முதல் செய்யப்பட்டு அதை ரேஷன் கடைகளுக்கு அனுப்பிக் கொடுத்து வருகின்றனர். அந்தக் கரும்பு மூன்று அடி உயரமே இருக்கிறது; தரமில்லாமலும் இருக்கிறது.

கடந்த ஆட்சியில் கடந்த பொங்கலுக்கு இதே போன்று ஒரு கரும்பு ரூ.17 வீதம் எங்களிடம் நேரடியாகக் கொள்முதல் செய்தனர். விவசாயிகளான நாங்களும் பயனடைந்தோம். தற்போது கூடுதல் விலை கொடுத்து கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும், எங்க பகுதியில் கொடுப்பதற்கான கரும்பை வெளி மாவட்டங்களில் வாங்காமல் எங்களிடம் வாங்கியிருக்க வேண்டும். இதைச் செய்ய அரசு தவறிவிட்டது.

கரும்பு

கரும்பு வியாபாரிகளும் விலையைக் குறைத்து கேட்டதுக்கு பாதியாகக் கேட்கின்றனர். இதனால் பயிரிட்ட கரும்புகளை விற்க முடியாமல் பெரும் இழப்பை சந்திக்கக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இனிப்பான கரும்பை பயிரிட்ட நாங்கள் கசப்பான மன நிலையில் என்ன செய்வதென புரியாமல் தவித்து நிக்குறோம்" என்றார்.

அண்ணாதுரை என்பவர், ``பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு பயிரிட்டுள்ளனர். அரசு கொள்முதல் செய்யும் என்ற எண்ணத்தில் கரும்பு வாங்க வந்த வியாபாரிகளையும் திருப்பி அனுப்பி காத்திருந்த சூழலில் எங்கள் பகுதியில் கரும்பை வாங்காமல் வெளிப் பகுதியில் வாங்கிக் கொண்டு வந்து கரும்பைக் கொடுத்து வருகின்றனர்.

அண்ணாதுரை

கரும்பு விவசாயிகள் ஒரு கரும்பை ரூ.17-க்குத் தர தயாராக இருந்தும், ஆளும்கட்சி புள்ளிகள் சுய ஆதாயம் அடைவதற்காக ரூ.33-க்கு கூடுதல் விலை கொடுத்து வாங்கியுள்ளனர். அத்துடன் வெளி மாவட்டங்களிலிருந்து கரும்பு கொண்டு வரப்படும்போது லாரி வாடகை உள்ளிட்டவைக்கும் கூடுதல் செலவாகிறது. இதனால் அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதே அந்தந்தப் பகுதிகளில் உள்ள கரும்பு விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்யப்பட்டிருந்தால் செலவுகள் பெரிய அளவில் குறைந்திருக்கும்.

அரசுக்கு இழப்பு ஏற்படுவது ஒரு புறம் இருந்தாலும் வெளியூரிலிருந்து கரும்பு வாங்கிவிடுவதால் உள்ளூர் விவசாயிகள் கரும்பை விற்க முடியாமல் தவித்து நிற்கின்றனர். வியாபாரிகளும் போதிய அளவு கரும்பு வாங்குவதற்கு வரவில்லை. அப்படியே வந்தாலும் குறைந்த விலைக்குக் கேட்கின்றனர். இதனால் கரும்பு அறுவடை செய்யப்படாமல் வயலிலேயே தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் பயிரிட்டிருக்கும் கரும்பு

Also Read: பொங்கல் கரும்பு கொள்முதலில் முறைகேடு; இடைத்தரகர்களால் பாதிக்கப்படும் விவசாயிகள்; கவனிக்குமா அரசு?

ஆளும்கட்சி பிரமுகர்கள் தங்களுக்குக் கிடைக்கும் கமிஷன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தரமில்லாத, நன்கு வளராத கரும்புகளை சொற்ப விலை கொடுத்து அவர்களுக்கு துணை போகும் விவசாயிகளிடம் மட்டுமே வாங்கியுள்ளனர். அதனாலேயே உள்ளூர் விவசாயிகளிடம் கரும்பு வாங்கவில்லை. இதை முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். வரும் நாள்களிலாவது இது போன்று நடக்காமல் அந்தந்தப் பகுதியில் உள்ள கரும்பு விவசாயிகளிடம் கரும்பைக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு, கரும்பு விவசாயிகளைக் கண்ணீரிலிருந்து காப்பாற்ற வேண்டும்" என்றார்.from மாவட்ட செய்திகள் https://ift.tt/3tdp0Jx