கோடை வெப்பத்துக்குப் பேர்போன வேலூர் மாவட்டத்தைத் தன் கரங்களால் கலைத்துப்போட்டிருக்கிறது வடகிழக்குப் பருவமழை. வெள்ளக்காட்டுக்குள் கேட்கும் துயரக் குரலே தணியாத நிலையில், விதவிதமான பாதிப்புகள் வேலூரைப் பற்றிக்கொண்டிருக்கிறது. ஏரி மீன்களை சாப்பிட்டதில், இருவர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படும் விவகாரம், வேலூர் மக்களை அச்சமடையச் செய்திருக்கிறது. அதன் விவரம்:

வேலூர் மாவட்டம், பென்னாத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அல்லிவரம் கிராமத்தில், பத்துக்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்குப் பாதிப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. உடல்நலம் பாதிக்கப்பட்ட அனைவரும் அடுக்கம்பாறையிலிருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்றுவருகிறார்கள்.

ஆய்வு செய்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எம்.எல்.ஏ நந்தகுமார்

இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்று முன்தினம் 70 வயதான அப்பாசாமி உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து, மார்கபந்து என்பவரின் நான்கு வயது மகன் நேற்று அதிகாலை மரணமடைந்தார். இருவர் அடுத்தடுத்து உயிரிழந்ததால், அல்லிவரம் கிராமத்தில் நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மக்களிடையே அச்சம் நிலவுகிறது. தகவலறிந்ததும், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், அணைக்கட்டு தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், அல்லிவரம் கிராமத்துக்குச் சென்று ஆய்வுசெய்தனர்.

உடனடியாக, ஐந்து மருத்துவர்களை உள்ளடக்கிய 30 பேர் கொண்ட மூன்று மருத்துவக் குழுக்களை நியமித்து, சிறப்பு மருத்துவ முகாம்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுவருகிறார்கள். ‘ஒரு கிராமமே பாதிப்படைய காரணம், அங்குள்ள ஏரிகளிலிருந்து பிடித்து சாப்பிட்ட மீன்கள்தான்’ என்று முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாகச் சொல்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள்.

குடிநீர் மாதிரியை சேகரிக்கும் சுகாதாரத்துறையினர்...

இது தொடர்பாக, அணைக்கட்டுத் தொகுதி எம்.எல்.ஏ நந்தகுமாரிடம் கேட்டபோது, ‘‘தொடர் மழையால், அல்லிவரம் அருகிலிருக்கும் பென்னாத்தூர், சப்தலிபுரம் ஏரிகள் நிரம்பியிருக்கின்றன. இங்கிருந்து மீன் பிடித்து சாப்பிட்டதால்தான் உடல்நிலைப் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அதே சமயம், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து நேரடியாக மருத்துவக் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் அல்லிவரம் கிராமத்திலுள்ள நீர்நிலைகளுக்கு வருகின்றன. குடிநீர் ஆதாரமாக உள்ள ஏரித் தண்ணீரில் மருத்துவக் கழிவுகள் கலந்துள்ளதாலும் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கலாம். மருத்துவக் கழிவுகள் தொடர்பான பிரச்னைக் குறித்து கடந்த முறை எம்.எல்.ஏ-வாக இருந்தபோதே, சட்டமன்றத்தில் நான்கைந்து முறை பேசியிருக்கிறேன். அப்போது நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தோம். இப்போது ஆளும் கட்சியாக இருக்கிறோம். மருத்துவமனையில் சுத்திகரிப்புப் பிளான்ட் அமைத்து, கழிவுநீர் வெளியேறாமல் தடுக்க விரைந்து நடவடிக்கை எடுப்போம்’’ என்றார்.

Also Read: `பாலாற்றில் குறுங்காடு திட்டத்துக்குத் தடை ஏன்?’ - இளைஞரின் புகாருக்கு வேலூர் ஆட்சியர் விளக்கம்

வேலூர் மாவட்ட சுகாதாரத்துறைத் துணை இயக்குநர் பானுமதியிடம் பேசினோம். ‘‘ஏரிகளிலிருந்து மீன்களைப் பிடித்து, மிளகாய்த் தூள், மசாலாவைப் போட்டு சரியாக வேக வைக்காமலேயே சாப்பிட்டுள்ளனர். இதனாலும் பாதிப்புகள் இருந்திருக்கலாம். உணவுத் தண்ணீரைச் சேகரித்து வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்கு அனுப்பியிருக்கிறோம். ஆய்வு முடிவுகள் வந்தப் பின்னரே பாதிப்புகளுக்கான காரணம் குறித்து உறுதியாகச் சொல்ல முடியும்’’ என்றார்.

இதனிடையே, வீடுகளில் குடத்தில் வைக்கப்பட்டிருந்த குடிநீரைக்கூட அல்லிவரம் மக்கள் வெளியே எடுத்து ஊற்றிவிட்டனர். தொடர்ந்து, அந்த கிராமத்தில் காய்ச்சல் போன்ற பாதிப்புகள் இருக்கிறதா? என்றும் மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்துவருகிறார்கள். ‘ஏரி மீன்களைப் பிடித்து உண்ண வேண்டாம்’ என்றும் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தியிருக்கிறார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/31tSuXN