தஞ்சாவூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குள் உள்ள கழிவறையில், தண்ணீர் தொட்டிக்குள் அமுக்கி பிறந்த பெண் சிசு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை கொலை செய்யப்பட்ட தகவல் பரவியதால் மருத்துவமனை வளாகத்தில் இருந்த பலரும் அதிர்ச்சியடைந்தனர். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீஸார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை குறித்து சிசிடிவி கேமராவில் ஆய்வு

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள கழிவறையை தூய்மை பணியாளர் ஒருவர் சுத்தம் செய்வதற்காக இன்று காலை சென்றுள்ளார். அப்போது கழிவறையில் இருந்த தண்ணீர் தொட்டி மேல் மூடி இல்லாமல் இருந்தது. அதற்குள் பெண் சிசு குழந்தை ஒன்று அமுக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக டாக்டர்களிடம் தெரிவித்தார் அவர். இதனை தொடர்ந்து டாக்டர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து டி.எஸ்.பி கபிலன், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிராங்க்ளின் உள்ளிட்ட போலீஸார் குழந்தையின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சியினை ஆய்வு செய்தும் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. பிறந்த பெண் குழந்தை கழிவறை தொட்டிக்குள் அமுக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸார் விசாரணை

இது குறித்து மருத்துவமனை வட்டாரத்தில் பேசினோம், ``நேற்று இரவுக்கு பிறகோ அல்லது இன்று காலையில் தான் இந்த சம்பவம் நடந்திருக்க வாய்ப்புள்ளது. யார் எதற்காக கழிவறையில் பெண் குழந்தையை அமுக்கி கொலை செய்தார்கள் என தெரியவில்லை. சிசிடிவில் பதிவான காட்சியில் இன்று காலை நைட்டி அணிந்த பெண் ஒருவர் தலையில் குல்லா, மாஸ்க் அணிந்தபடி கழிவறைக்கு செல்கிறார். அவருடைய வயிறு வீங்கியிருப்பது போல் தெரிகிறது. பின்னர் அந்த பெண் அரை மணி நேரத்திற்கு பிறகு தான் கழிவறை இருக்கும் பகுதியிலிருந்து வெளியே வருகிறார்.

Also Read: `அக்கா... எந்தப் பாவி உன்னைக் கொலை செஞ்சான்?!’ - இடுகாடுவரை கதறி நடித்த கொலையாளி சிக்கியது எப்படி?

அவர் மீதும் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அல்லது வேறு யாரேனும் செய்திருப்பார்களா என்கிற ரீதியிலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன் முடிவிலேயே பிறந்த குழந்தையை கொலை செய்தவர் யார் குழந்தையின் தாய் யார் என்பது குறித்து தெரிய வரும்” என்றனர். இந்த சம்பவத்தினால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.from மாவட்ட செய்திகள் https://ift.tt/3lBt29Y