நெல்லை புறநகர் ப்குதியான ரெட்டியார்பட்டி அருகே பைக் மீது கார் மோதியதில் இரு மருத்துவக் கல்லூரி மாணவிகள் சம்பவ இடத்தில் உயிரிழந்ததாக தகவல் கிடைத்தது. இது தொடர்பாக விபத்து நடந்த இடத்துக்குச் சென்று விசாரித்தபோது மருத்துவக் கல்லூரி மாணவிகள் சிக்கிய சோகம் குறித்த விபரம் தெரியவந்தது.

கல்லூரி அடையாள அட்டை

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த பொன்.திவ்ய காயத்ரி, மதுரையைச் சேர்ந்த பிரிடா ஏஞ்சலின் ராணி ஆகியோர் இன்று காலை கல்லூரியில் வகுப்புக்குச் சென்றுள்ளனர். பின்னர் கடையநல்லூரைச் சேர்ந்த திவ்ய பாலா என்ற மற்றொரு மாணவியுடன் சேர்ந்து பைக்கில் வெளியே சென்றிருக்கிறார்கள்.

மூவரும் ஒரே பைக்கில் நான்கு வழிச்சாலையில் சென்றுள்ளனர். ரெட்டியார்பட்டி மலைப் பகுதியின் அருகே சென்றபோது எதிர் திசையில் ஒரு காரில் சிலர் தூத்துக்குடி செல்வதற்காக வந்திருக்கிறார்கள். அவர்கள் வந்த காரின் டயர் வெடித்ததில் கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவில் இருக்கும் தடுப்புச் சுவரைத் தாண்டி மறு பக்கத்தில் உள்ள சாலையில் விழுந்து உருண்டுள்ளது.

உடைந்து கிடக்கும் இரு சக்கர வாகனம்

அப்போது சாலையில் வந்த மருத்துவ மாணவிகளின் பைக் மீது விழுந்ததில் பொன்.திவ்யகாயத்ரி,பிரிடா ஏஞ்சலின் ராணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரை சந்தோஷ் என்பவர் ஓட்டி வந்துள்ளார். கார் உருண்டதில்; முன் இருக்கையில் பயணம் செய்த சண்முக சுந்தரம் என்பவர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார்.

காரில் பயணம் செய்த நால்வரில் மூவருக்கு காயம் ஏற்பட்டது. அத்துடன், பைக்கில் வந்த மற்றொரு மருத்துவக் கல்லூரி மாணவியான திவ்ய பாலா என்பவரும் பலத்த காயமடைந்தார். காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளனர். இந்த விபத்து பற்றி அறிந்ததும் நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் செந்தாமரை கண்ணன் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டார்.

விபத்து

மாணவிகள் மூவரும் கல்லூரி சீருடையில் ரெட்டியார்பட்டி மலைப்பகுதிக்கு எதற்காகச் சென்றார்கள் என்பது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது. சம்பவம் நடந்த இடத்தின் அருகே ஒரு கார் கம்பெனியின் ஷோரூம் உள்ளது. அங்கிருந்தவர்களிடம் பேசியபோது, “திடீரென பெரிய சத்தம் கேட்டது. அப்போது ஒரு கார் உருண்டபடியே பறந்து சென்று எதிர் பக்கத்துச் சாலையில் விழுந்தது. அதில் பைக்கில் வந்தவர்கள் சிக்கிக் கொண்டார்கள்.

நான்குவழிச் சாலையில் குறிப்பிட்ட அந்த இடத்தில் அடிக்கடி விபத்து நடக்கிறது. தற்போதைய மழைக் காலத்தில் மட்டும் சின்னதும் பெரியதுமாக நான்கு விபத்துகள் நடந்துவிட்டன. மழையின்போது அந்த இடத்தில், சாலையில் தண்ணீர் தேங்குகிறது. வேகமாக வரும் கார் தண்ணீரில் செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்து விபத்து நடக்கிறது. அதைச் சரிசெய்தால் மட்டுமே உயிரிழப்புகளை தவிர்க்க முடியும்” என்றார்கள்.

விபத்து நடந்த இடம்

டோல்கேட்டில் வாகனங்களுக்கு சுங்கவரி வசூலிப்பதில் ஆர்வம் காட்டும் நிறுவனங்கள், சாலையைப் பராமரித்து விபத்து இல்லா பயணத்துக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும், அதை அரசு கண்காணிக்க வேண்டும் என்கிறார்கள்.from மாவட்ட செய்திகள் https://ift.tt/3EneOAU