`உச்சி முதல் வேர் வரை' அனைத்து பாகங்களும் பலன் தரக்கூடியது என்பதால்தான், பனை மரத்தை `கற்பகத்தரு' என்கிறார்கள். ஒரு பனையில் இருந்து 70 வகையான பொருள்களும், 700 வகையான பயனும் கிடைக்கிறது என்கிறது ஆய்வு. 2018-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 5.10 கோடி பனைமரங்கள் மட்டுமே இருப்பதாகக் கூறப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், ஏரல், விளாத்திகுளம் ஆகிய தாலுகா பகுதிகளில் பனைமரங்கள் பரவலாகக் காணப்படுகின்றன.

பனை விதைகள் நடவு

பூமியின் எவ்வளவு ஆழத்தில் நீர் இருந்தாலும் அதை உறிஞ்சி எடுத்துக்கொண்டு நெடுநாள்களுக்கு தேக்கி வைக்கும் தன்மை கொண்டவைதான் பனைமரங்கள். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஆறு, ஏரி, குளம் கண்மாய் இருந்த இடமெல்லாம் பனைமரங்கள் வளர்ந்து இருப்பதை நம்மால் பார்த்திருக்க முடியும். ஆனால், இன்று அவை அழிக்கப்பட்டதுடன், நீர்நிலை ஆக்கிரமிப்புகளும் அதிகமாகியிருக்கின்றன. இதன் காரணமாகவே பருவமழைக் காலங்களில் மழை வெள்ள நீர், குடியிருப்புகளை சூழ்ந்து மக்களை அவதிக்குள்ளாகும் நிலையும் ஏற்படுகிறது.

ஆக்கிரமிப்பின் பேரில் நீர் வழித்தடங்களையும் அழித்துவிட்ட காரணத்தால்தான் ஆறு, குளங்களை நிறைத்துவிட்டு வரும் உபரிநீர்கூட செல்ல வழியின்றி ஊருக்குள் தஞ்சம் புகுகிறது. மனிதன் செய்த தவற்றை முழுவதும் திருத்திவிட முடியாது எனினும், சிறிதளவேனும் சரி செய்யத்தான் அரசுச் சக்கரங்கள் இன்று வேகமாகச் சுழன்று வருகின்றன. இந்த அழிவு நிலப்பரப்பைத் தாண்டி கடலுக்குள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இவற்றைப் பாதுகாத்தால் மட்டுமே சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் நம்மை நெருங்காமல் தற்காத்துக்கொள்ள முடியும்.

முளைத்துள்ள பனை விதைகள்

பனை மரங்கள் நீர் வளத்தை மட்டும் பாதுகாக்க வல்லது அல்ல. இயற்கை சீற்றங்களின் தாக்கத்தைத் தணிக்கவும், கடலரிப்பைத் தடுக்கவும் துணைபுரிகிறது. டெல்டா மாவட்டங்களில் `கஜா’ புயலின் தாக்கத்தால் அத்தனை மரங்களும் வீழ்ந்து கிடக்க, பனைமரங்கள் மட்டுமே கம்பீரமாக நின்றன. பனைமரங்களின் சிறப்பு அறியப்பட்டதாலும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதாலும் இளம் தலைமுறையினரே கடந்த சில ஆண்டுகளாகக் கண்மாய், குளக்கரைகளில் பனைவிதையை ஊன்றி வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி தமிழக அரசு வெளியிட்ட வேளாண் பட்ஜெட்டில், ``தமிழர்களின் வாழ்வோடும் மொழியோடும், வளத்தோடும் ஒன்றுபட்ட பனைமரத்தை வேரோடு வெட்டி விற்கவும், செங்கல் சூளைகளுக்குப் பயன்படுத்துவது தடுக்கப்படும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பனைமரங்களை வெட்ட மாவட்ட ஆட்சித்தலைவரின் அனுமதி பெறுவது கட்டாயம்” என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பனைத்தொழிலாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும், சில பகுதிகளில் மாவட்ட ஆட்சியரின் அனுமதியின்றி பனைமரங்களை வெட்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன் கைது நடவடிக்கையும் பாய்ந்தது.

முளைத்துள்ள பனை விதைகள்

ராமநாதபுரம் முதல் கன்னியாகுமரி வரையிலான 350 கி.மீ தொலைவில் அமைந்துள்ள 10,500 சதுர கி.மீ. கடல் பரப்பளவை `மன்னார் வளைகுடா கடல்வாழ் உயர்கோள காப்பகமாக’, கடந்த 1989-ம் ஆண்டு அறிவித்தது மத்திய அரசு. இதற்கு `யுனெஸ்கோ’ அமைப்பும் அங்கீகாரம் அளித்துள்ளது. இந்தக் கடல் பகுதி உலக முக்கியத்துவம் வாய்ந்த கடல்சார் உயிர்ப் பல்வகைமைகளுக்குப் புகலிடமாக விளங்குகிறது.

இங்கு 4,223 கடல்வாழ் தாவரம் மற்றும் விலங்கினங்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டு உள்ளது. இதில் கடல் பசு, 117 வகை பவளப்பாறைகள், 14 வகை கடல் புற்கள் ஆகியவை அழிந்து வருகின்றன. பவளப் பாறைகளைப் பொறுத்தவரை ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் இருந்து தூத்துக்குடி வரையிலான 140 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள 560 சதுர கி.மீ. பரப்பளவில்தான் அதிகம் காணப்படுகின்றன.எனவே, இந்த பகுதியைப் பாதுகாக்கப்பட்ட மன்னார் வளைகுடா `கடல்வாழ் தேசிய பூங்கா’வாகத் தமிழக அரசு அறிவித்தது. 21 தீவுகளை உள்ளடக்கியதாக இந்தத் தேசிய பூங்கா உருவாக்கப்பட்டது.

ஊன்றப்படும் பனை விதைகள்

இங்குள்ள வான்தீவு, காசுவார் தீவு, காரைச்சல்லி தீவு, விலங்குசல்லி தீவு, உப்புத்தண்ணி தீவு, புலுவினிசல்லி தீவு, நல்ல தண்ணி தீவு, ஆனையப்பர் தீவு, வாலிமுனை தீவு, அப்பா தீவு, பூவரசன்பட்டி தீவு, தலையாரி தீவு, வாழை தீவு, முள்ளி தீவு, முயல் தீவு, மனோலி தீவு, மனோலிபுட்டி தீவு, பூமரிச்சான் தீவு, புள்ளிவாசல் தீவு, குருசடை தீவு, சிங்கில் தீவு ஆகிய இந்த 21 தீவுகளும் இந்த பூங்காவின் முக்கிய அங்கமாக விளங்குபவை. இதில், தூத்துக்குடி குழுவில் 4 தீவுகள், வேம்பார் குழுவில் 3 தீவுகள், கீழக்கரை குழுவில் 7 தீவுகள், மண்டபம் குழுவில் 7 தீவுகள் அமைந்துள்ளன.

இந்தத் தீவுகள் கடல் சூழலில் முக்கியமான அங்கமாக இருப்பதோடு, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளுக்கு பெரும் பாதுகாப்பு அரணாக அமைந்துள்ளன. இயற்கை சீற்றங்கள் பெரிய அளவில் கடற்கரையைத் தாக்காத வண்ணம் தடுப்பு அரண்களாக இவைகள் செயல்படுகின்றன. இந்தத் தீவுகளைச் சுற்றிய பகுதிகளில்தான் மீன் வளம் அதிகம் இருக்கும் என்பதால் இந்தத் தீவுகள்தான் மீனவர்களின் வாழ்வாதாரமாகவும் அமைந்துள்ளன. கடல் சூழலிலும், கடற்கரை பாதுகாப்பிலும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீவுகள், அண்மைக் காலமாகப் பெரும் ஆபத்தை சந்தித்து வருகின்றன. பருவநிலை உள்ளிட்ட காரணங்களால் தீவுகளின் நிலையும் மாறி வருகிறது.

முளைத்துள்ள பனை விதைகள்

Also Read: `ஒரே இடத்தில் 10,000 பனை மரங்கள்!' - விவசாயியின் முயற்சியால் உருவான பனைமர குறுங்காடு

கடந்த சில ஆண்டுகளில் தூத்துக்குடி குழுவில் உள்ள `விலங்குச்சல்லி தீவு’, கீழக்கரை குழுவில் உள்ள `பூவரசன்பட்டி’ ஆகிய 2 சிறிய தீவுகளும் கடலில் மூழ்கிக் காணாமல் போய்விட்டன. இதில், மன்னார் வளைகுடாவின் தெற்கு எல்லையில் அமைந்திருப்பதுதான் `வான்தீவு’. கடற்கரையில் இருந்து மிக அருகில் அமைந்திருப்பதால் வான்தீவு அனைவரின் கவனத்தையும் அதிகம் ஈர்த்து வருகிறது. கடல் அரிப்பு இந்தத் தீவுக்கு பேராபத்தாய் அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இந்தத் தீவின் பரப்பளவு வெகுவாகக் குறைந்துவிட்டது எனச் சுட்டிக் காட்டுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

வான்தீவு பகுதியில் கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை சார்பில் 2018-ம் ஆண்டு பனைமர விதைகளை நடவு செய்யும் பணி தொடங்கப்பட்டது. தூத்துக்குடி பகுதி வனச்சரக அலுவலர் ரகுவரன் முயற்சியால் வனத்துறை அலுவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், கடலோர கிராம சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுக்கள் மூலம் இந்தத் தீவில் பனைமர விதைகள் நடவு செய்யப்பட்டன. வான் தீவு பகுதியில் மட்டும் சுமார் 2,000 பனைமர விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்த விதைகள் முளைத்து தற்போது ஒரு அடி முதல் 2 அடி வரை வளர்ந்து உள்ளன. இதே போன்று தூத்துக்குடி பகுதியில் உள்ள காசுவாரி தீவு, நல்லத்தண்ணி தீவுகளிலும் பனைமர விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாகத் தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் உள்ள 10 தீவுகளில் பனைமர விதைகளை நடவு செய்யும் பணி விரிவுபடுத்தப்பட்டது.

பனை மரங்கள்

Also Read: சாலைகளுக்காக வெட்டப்பட்டும் நூற்றுக்கணக்கான பனை மரங்கள்; அரசே விதிகளை மீறுகிறதா?

பனை சீஸன் காலங்களில் பனைமர விதைகளைச் சேகரித்து படகுகள் மூலம் தீவுப் பகுதிகளுக்குக் கொண்டு சென்று நடவு செய்து வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளில் 10 தீவுகளிலும் சுமார் 25,000 பனைமர விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளன. மேலும், தீவுகளில் பல்வேறு பாரம்பர்ய மரங்களையும் நட்டு வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர். இதன் மூலம் கடல் அரிப்பைத் தடுத்து தீவுகள் மூழ்குவதைத் தடுக்க முடியும். இந்த நிலையில், தீவுகளில் பனைமரங்கள் வளர்க்கப்படுவது குறித்து பிரதமர் நரேந்திரமோடி, `மன் கி பாத்' நிகழ்ச்சியிலும் குறிப்பிட்டுப் பேசி பாராட்டியுள்ளார்.

Also Read: மன் கி பாத்: ``இயற்கையைப் பாதுகாப்பதில் தூத்துக்குடி மக்களுக்கு பெரும் பங்கிருக்கிறது!" - மோடி

``சாதாரணமாக, செம்மண் பூமியிலும், கரிசல் பூமியிலும் செழித்து வளரும் பனை மரங்கள் சுற்றிலும் உப்பு நீராலும் பாறைகளாலும் சூழப்பட்ட தீவுக்குள் வளருமா என சந்தேகிக்காமல் இயற்கையின் மீது நம்பிக்கை வைத்து அதிகாரிகள் எடுத்த முயற்சிக்கு பனை விதைகள் முளைத்து வளர்ந்திருப்பது திருப்தி அளிக்கிறது" என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.from மாவட்ட செய்திகள் https://ift.tt/3EpJhhC