தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தேர்தல் நடந்து வருகிறது. இதற்காக பிரத்யேகமாக ஓர் செயலி தொடங்கப்பட்டுள்ளது. இதில் 19 வயது முதல் 35 வயது வரையான காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும்.

சத்திய மூர்த்தி பவன்

தேர்தல் நிறைவடைய சில மாதங்களே இருப்பதால், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பரபரப்பாக இயங்கி வருகின்றனர். இந்நிலையில், கோவை இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்களிக்க நூதன முறையை பின்பற்றியுள்ளனர்.

சுந்தராபுரம் பகுதி அருகே உள்ள தியேட்டர்தான் அவர்களின் ஸ்பாட். அங்கு நடிகர் சிம்புவின் மாநாடு படம் திரையிடப்பட்டுள்ளது. படம் பார்க்க வரும் இளைஞர்களிடம் இலவசமாக டிக்கெட் கொடுக்கிறோம் என்று ஆசையை தூண்டுகின்றனர். தியேட்டருக்கு வருபவர்களிடம் ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் போன்றவற்றை வாங்கிக் கொள்கின்றனர்.

மாநாடு | இளைஞர் காங்கிரஸ்

அந்த செயலி மூலம் அவர்களை காங்கிரஸ் உறுப்பினராக்குகின்றனர். இதற்கான கட்டணத்தை (ரூ.50)அவர்களே ஏற்கின்றனர். பிறகு அந்த செல்போனுக்கு வரும் ஓ.டி.பி மூலம் தங்கள் அணியினருக்கு வாக்குகளை செலுத்தி கொள்கின்றனர்.

எல்லாம் வெற்றிகரமாக முடிந்தப் பிறகு, ‘இந்தாங்க மாநாடு டிக்கெட். என்ஜாய்.. ’ என்று இலவச டிக்கெட் கொடுத்து அனுப்பி வைக்கின்றனர். மேலும், “எல்லா டிக்கெட்டும் ஃப்ரீதான். பிரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் சொல்லுங்க.” என்றும் மார்க்கெட்டிங் செய்கின்றனர். இந்த காட்சிகளை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.

தியேட்டர்

அது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகளை தொடர்பு கொண்ட போது அவர்கள் இது குறித்து நம்மிடம் பேசவில்லை. இது தொடர்பாக விளக்கம் அளித்தால் அதனை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.

அதே நேரத்தில் இந்த விவகாரம் தொடர்பாக தலைமைக்கு தகவல் சொல்லப்பட்டிருக்கிறதாம். இதையடுத்து, தலைமையில் இருந்து கேள்விகள் எழுப்பியுள்ளதால், ``ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே” என்று காங்கிரஸார் அப்செட்டில் உள்ளனராம்!from மாவட்ட செய்திகள் https://ift.tt/3Do9lIz