பேராவூரணி அருகே வீடு கட்டுவதற்காக வாங்கிய கடனுக்கு இரண்டு மாதங்களாக தவணை செலுத்தாததால் நிதி நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் மரியாதை குறைவாக பேசியதால் மணமுடைந்த கணவன் மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாக கூறப்படும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்து கொண்ட சவரியம்மாள்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மேலப்பூவாணம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்சாமி (60). இவரின் மனைவி சவரியம்மாள்(50), இவர்களுக்கு சவரி சுரேஷ்(35) ஆரோக்கிய செபஸட்டின் (32) என இரண்டு மகன்கள் உள்ளனர். சவரி சுரேஷ் வெளிநாட்டில் வேலைபார்த்து வரும் நிலையில் பெற்றோருடன் இளைய மகன் மட்டும் வசித்து வந்துள்ளார். கொரோனா பரவலுக்கு முன்பு வரை அருள்சாமி பொள்ளாச்சியில் சமோசா வியாபாரம் செய்து வந்துள்ளார்.

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு சொந்த ஊருக்கு திரும்பியவர் அங்கேயே தங்கினார். இந்நிலையில் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கிராமத்தில் வீடு கட்டுவதற்காக தனது மனைவி சவரியம்மாள் பெயரில் கடன் வாங்கியிருந்தார். மாத தவணையை சரியாக செலுத்தியும் வந்திருக்கிறார். கொரோனா லாக்டெளன் நேரத்திலும் தவணை கட்ட தவறவில்லை.

தற்கொலை - Representational Image

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக பெய்து வரும் தொடர் மழை உள்ளிட்ட சில காரணங்களால் பணம் கட்ட முடியாமல் தவித்துள்ளார். கடன் தொகைக்கான தவணை கட்டாததால் நிதி நிறுவனத்திலிருந்து போனில் பேசியவர்கள் தரக்குறைவாகவும், ஆபாசமகவும் பேசி பணத்தை கட்டச்சொல்லி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அருள்சாமி தன் மனைவி சவரியம்மாளிடம், ``கொடுக்கல் வாங்கலில் நாணயமாக இருந்து வந்தோம்.

இப்ப இருக்குற பொருளாதார சிக்கலில் அதனை கடைபிடிக்க முடியவில்லை” என கலங்கியபடி கூறியிருக்கிறார். எல்லாம் சரியாகிடும் என சவரியம்மாள் கணவரை தேற்றியிருக்கிறார். ஆனால் அவர் சோர்வாகவே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் ஆரோக்கிய செபஸட்டின் வியாபாரத்திற்கு வெளியில் சென்று விட்டார். இதையடுத்து கணவன், மனைவி இருவரும் விஷம் குடித்து விட்டனர். நீண்ட நேரம் வீட்டுக்குள் இருந்து யாரும் வராததால் அக்கம் பக்கதில் உள்ளவர்கள் ஏதேச்சையாக பார்க்க கணவன், மனைவி இருவரும் வாயில் நுரை வழிந்த நிலையில் சரிந்து கிடந்துள்ளனர்.

Also Read: தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் தற்கொலை!

அதிர்ச்சியடைந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு பட்டுக்கோட்டை அரசுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருவரையும் பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டார்கள் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து பெற்றோர் இறப்பிற்கு காரணமான நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆரோக்கிய செபஸட்டின் சேதுபாவாசத்திரம் போலீஸில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து அவர்களது உறவினர்கள் தரப்பில் பேசினோம், ``கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் ரொம்பவே அன்பாக இருப்பார்கள். கொரோனாவிற்கு முன்பு வரை வியாபாரம் நல்ல நிலையில் இருந்தது. அதன் பிறகு வந்தும் வியாபாரம் செய்து வந்தனர். வீடு கட்ட நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனுக்கு தவணை செலுத்த முடியவில்லை. இதனால் நிதி நிறுவன ஊழியர்கள் தகாத முறையில் பேசியதாக தெரிகிறது. இதில் மன முடைந்த இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக” கண்கள் கலங்க தெரிவித்தனர்.from மாவட்ட செய்திகள் https://ift.tt/3ohXXcT