தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, வைகை அணையில் தண்ணீர் திறப்பு காரணமாக விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிருதுமால் நதியில் நீர்வரத்து அதிகமாக உள்ளது. அருப்புக்கோட்டை, திருச்சுழியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடந்த சில நாட்களாகத் தொடர் கனமழை பெய்து வருவதாலும் கிருதுமால் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், இந்நதியைச் சுற்றியுள்ள சுமார் 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெள்ள நீரைக் கடந்துதான் வேலைகளுக்குச் சென்று வருகிறார்கள்.

விருதுநகர்

பள்ளி மாணவர்கள் 3 கி.மீ தூரம் ஊரைச் சுற்றி பள்ளிகளுக்குச் சென்று வருகிறார்கள். இந்த நிலையில், உலக்குடி அருகேயுள்ள திருமாணிக்கனேந்தல் கிராமத்தில் 75 வயதான பாலாயி என்ற மூதாட்டி வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவினால் உயிரிழந்தார். அவரின் உடலை உலக்குடியிலுள்ள மயானத்தில் அடக்கம் செய்திட கிராம மக்கள் இடுப்பளவு வெள்ள நீரில் தூக்கிச் சென்றனர்.

ஒவ்வொரு ஆண்டுப் பருவ மழையின் போதும் இதே பாதிப்பு ஏற்படுவதால், கிருதுமால் நதியைக் கடந்து செல்லும் வகையில் தரைப்பாலம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து திருமாணிக்கனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமியிடம் பேசினோம், ”எங்க கிராமத்துல 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிச்சுட்டு வர்றோம். கிருதுமால் நதிப் பகுதி வழியாத்தான் அடுத்த ஊரைத்தாண்டி போக முடியும்.

கயிறு கட்டி தூக்கி வரப்படும் மூதாட்டியின் உடல்

எங்களைப் போல சுத்துப்பகுதியில உள்ள கிராம மக்களும் இந்த நதியைத்தான் தாண்டிப் போகணும். மழைக்காலம் வந்தாலே எங்களுக்கு பயம் வருது. இந்த நதியில மழைத் தண்ணி, வெள்ளமாப் போகும். அடுத்த ஊருக்குப் போகுற மக்கள் எல்லாரும் ஒன்னு சேர்ந்து கயிறைக் கட்டி கடந்து போவோம். வைகை அணையில தண்ணி திறந்து விட்டா இழுவை அதிகமா இருக்கும். எளிதாக் கடந்து போக முடியாது.

ஒவ்வொரு தடவை மழை பெய்யும் போதும், இதே கஷ்டத்தைதான் அனுபவிச்சுட்டு வர்றோம். இந்த நிலைமையில மழை நேரத்துல ஊருல யாராவது எதிர்பாராத விதமா இறந்து போயிட்டா, அவங்களோட உடலை இதே நதியைக் கடந்து தூக்கிட்டு வந்து உலக்குடியில உள்ள மயானத்துல அடக்கம் செய்யணும்.

கயிறு கட்டி தூக்கி வரப்படும் மூதாட்டியின் உடல்

இந்த நதியை கடந்து போகுறதுக்காக ஒரு தரைப்பாலம் கட்டிக் கொடுத்துட்டா, சுத்திலும் உள்ள கிராம மக்கள் எல்லாருமே பயனையுவாங்க. பாலம் கட்டுறது சம்மந்தமா பலமுறை அரசு அதிகாரிங்கக்கிட்ட மனுக் கொடுத்துட்டோம். ஆனா, எந்த நடவடிக்கையுமே இல்ல. எல்லாரும் மழை பெய்யணும்னு சாமி கும்பிடுவாங்க. ஆனா, நாங்க மழை பெய்ய வேண்டாம்னு நினைச்சு சாமி கும்பிடுறோம்” என்றனர்.from மாவட்ட செய்திகள் https://ift.tt/3ErZd34