இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்தபோது பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனடிப்படையில் புதுச்சேரியிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தொற்றின் வேகம் குறையத் தொடங்கியது. அதையடுத்து படிப்படியாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், தற்போது வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த தளர்வுகளால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் புதுச்சேரியில் அதிகரித்திருக்கிறது.

புதுச்சேரி அரசு

புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்களே அதிகம். புதிய வகை கொரோனாவான ஒமிக்ரான் வைரஸ் தற்போதுவரை 29 நாடுகளுக்கு பரவியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதனால் அனைத்து மாநிலங்களையும் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ள மத்திய அரசு, கொரோனா விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைபிடிக்கும்படியும் கூறியிருக்கிறது.

அதேபோல கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் இரண்டு பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒமைக்ரான்

அதேபோல அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களுக்கும் ஒமிக்ரான் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒமிக்ரான் தொற்றுக்காக புதுச்சேரியில் அரசு மார்பக நோய் மருத்துவமனையில் வென்டிலேட்டர்களுடன் கூடிய 105 படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐ.சி.யூ.வில் 10 படுக்கைகளும், அதிநவீன ஆய்வகமும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஒரே நேரத்தில் நூறு பேருக்கு பரிசோதனை செய்து இரண்டு மணி நேரத்தில் முடிவுகளை தெரிவிக்க முடியும் என்று சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு

அதேபோல மாநிலத்தின் எல்லைப்பகுதிகளில் சுகாதாரத்துறை ஊழியர்கள் தீவிர கண்காணிப்பு செய்யவும் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து விகடனிடம் பேசிய சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ஸ்ரீராமுலு, “வெளிநாட்டில் இருந்து புதுச்சேரி வருபவர்கள் குறித்த விபரங்கள் குடியேற்றத்துறை எங்களுக்கு முன்பே வந்துவிடும். அதனடிப்படையில் அவர்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்துகிறோம்.

ஏற்கெனவே தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்திருக்கும் இரண்டு பேரை அவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். அதேபோல பெங்களூரு, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு பேருந்து மற்றும் ரயில் நிலையங்களிலேயே காய்ச்சல் உள்ளிட்ட சோதனைகளை மேற்கொள்வதற்கென தனியாக குழுக்களை அமைத்திருக்கிறோம்.

Also Read: `5 மணி நேரத்தில் பரிசோதனை முடிவுகள்!’ - புதிய வகை கொரோனாவை எதிர்கொள்ளத் தமிழகம் தயாரா?

மாநிலத்திற்குள் வருபவர்கள் தடுப்பூசி போட்டிருக்கிறார்களா ? காய்ச்சல் இருக்கிறதா என்று எல்லைகளில் ஆய்வு செய்வது குறித்து காவல்துறையுடன் கலந்து ஆலோசித்து வருகிறோம். அதேபோல அரசு மார்புநோய் மருத்துவமனையில் செயல்பட்டு வரும் கொரோனா பிரிவிலேயே ஒமிக்ரான் வைரஸ் தொற்றுக்கு அனைத்து வசதிகளுடன் தனி வார்டு அமைத்திருக்கிறோம். போதுமான மருந்துகள் கையிருப்புகள் இருக்கின்றன. எங்கள் மருத்துவர் குழுவும் தயார் நிலையில் இருக்கின்றனர்” என்றார்.from மாவட்ட செய்திகள் https://ift.tt/3Dp3X8e