புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொன்னையூர், கொன்னைக் கண்மாயில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய ராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழர்களின் காலத்தைச் சேர்ந்த வணிகக்குழுவினரின் 10 நினைவுத்தூண் கல்வெட்டுகளைப் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தினர் அடையாளம் கண்டிருக்கின்றனர். ஆய்வுக்கழகத் தலைவர் கரு.ராஜேந்திரன், நிறுவனர் மணிகண்டன் உறுப்பினர்கள் ராஜாங்கம், பீர் முகமது, கஸ்தூரி ரங்கன், கமலம் ஆகியோர் அடங்கிய குழுவினரால் தான், ஒரே இடத்தில் இந்த 10 நினைவுத் தூண் கல்வெட்டுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கல்வெட்டுகள்

இதுகுறித்து ஆய்வுக்குழு நிறுவனர் மணிகண்டன் கூறும்போது, "2016-ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் செல்லுகுடியில் ராஜேந்திர சோழனின் பெயர் தாங்கிய வணிகக் குழு கல்வெட்டினை நாங்கள் அடையாளப்படுத்தினோம். அதன் தொடர்ச்சியாக தற்போது வணிகக் குழு தொடர்புடைய நினைவுத் தூண் கல்வெட்டுகளைக் கண்டுபிடித்திருக்கிறோம். சமூகத்தின் உயர் நிலையிலிருந்தவர்களுக்கும், போர், வேட்டையாடுதல், பயிர்களைக் காக்கும் பொருட்டு விலங்குகளைத் துரத்துதல், உள்ளிட்ட நிகழ்வுகளில் மக்களைக் காக்கும் பொருட்டு, உயிர் நீத்த வீரர்களுக்கும் நடுகல், வீரக்கல், நினைவுத்தூண் நடும் பழக்கத்தைக் கடைப்பிடித்துள்ளனர்.

அந்த வகையில்தான், நினைவுத்தூண் கல்வெட்டுகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலப்பனையூர், வாழக்குறிச்சி, நெருஞ்சிக்குடி, செவலூர் ஆகிய ஊர்களில் சமீப காலங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழகத்தில் முதல்முறையாக தற்போது தான் 10 நினைவுத் தூண் கல்வெட்டுகளை ஒரே இடத்தில் கண்டுபிடித்து அடையாளப் படுத்தியிருக்கிறோம். கண்டுபிடிக்கப்பட்ட நினைவுத் தூண் கல்வெட்டுகளில் 9கல்வெட்டுகள் நன்றாக வாசிக்கும் நிலையில் உள்ளன. அவை, 5 முதல் 7 அடி உயரமும், அடியில் சதுர வடிவிலும், மேற்பகுதி எண் பட்டை வடிவத்துடனும் உள்ளன.

கல்வெட்டு

இவற்றில் ஒன்றிலிருந்து இரண்டு தொடர் பக்கங்களில் 30 செ.மீ அகலம் முதல் 70 செ.மீ வரையிலான நீளத்துடன் ஒவ்வொரு கல்வெட்டிலும் அளவு மாறுபட்டுக் காணப்படுகிறது. கொன்னையூர் நினைவுத் தூண் கல்வெட்டுகள் வணிகக் குழு தாவளத்திலிருந்தோர் உயிர் நீத்ததால் அவர்கள் நினைவாக நடப்பட்டவை என்பதைக் கல்வெட்டிலுள்ள செய்திகள் உறுதி செய்கின்றன. இக்கல்வெட்டுகள் 11ம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்டவை. ராஜேந்திர சோழனின் 10ம் ஆட்சி ஆண்டு முதல் முதலாம் குலோத்துங்க சோழனின் 8ம் ஆட்சி ஆண்டு வரையிலும் வெவ்வேறு காலகட்டங்களில் நடப்பட்டுள்ளன.

மூன்று கல்வெட்டுகளில் மட்டும் ஆட்சி யாண்டு குறித்த தகவல் இல்லை. இந்தக் கல்வெட்டுகளில் குன்றன் சா(த்தன்) என்ற பெயரில் இரண்டு பேருக்கும், மருதன் செட்டி, ஞ்சக ஞட்டி, கங்கை கொண்ட சோழ செட்டி முத்தங்க் கஞ்சாறன் எனும் மும்முடி சோழ சிதிலட்டி, (பூ)லாங்குள(த்)தான், சிறப்பன் எனும் பெயர்கள் கொண்டவர்களுக்கும் நினைவுத் தூண் வைக்கப்பட்டுள்ளன. இவை வணிகர்கள் மட்டுமின்றி வீரர்களின் நினைவாக நடப்பட்டிருப்பதை "ராஜேந்திர சோழ தேவர்க்கு யாண்டு இருபத்து ஒன்பதாவது படை"என்ற ஒரு கல்வெட்டு வெளிப்படுத்துகிறது.

கல்வெட்டுகள்

செட்டி, ஞட்டி ஆகிய சொற்கள் வணிகத் தொடர்பை உறுதி செய்கின்றன. மேலும், ராஜேந்திர சோழனின் பெயரோடு, கங்கை கொண்ட சோழ செட்டி, மும்முடி சோழ செட்டி, என்ற பெயர் சூட்டிக்கொண்டதன் மூலம் வணிகர்களோடு கொண்டிருந்த தொடர்பினை அறிய முடிகிறது. இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் இவ்வூர் சோழர் கால வணிகக் குழுவில் மிக முக்கிய பங்காற்றியிருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது. சோழர் வரலாற்றில் இந்தக் கல்வெட்டுகள் மிக முக்கிய இடம் பிடிக்கும்"என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3IvS2JA