கரூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஜோதிமணி, தன் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கி வருகிறார். அந்த வகையில், கரூர் நாடாளுமன்றத் தொகுதியிலிருக்கும் மாற்றுத்திறனாளி மக்களுக்குத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். அதற்காக, கடந்த ஜனவரி மாதம் 21-ம் தேதி, கடந்த அக்டோபர் மாதம் 9-ம் தேதி, அதே மாதம் 22-ம் தேதி எனப் பல தேதிகளில், மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான உபகரணங்களை வழங்கும் முகாமை நடத்த வலியுறுத்தி, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரிடம் அனுமதி கோரியதாகச் சொல்லப்படுகிறது.

'அலிம்கோ' என்ற நிறுவனம் மூலம் உபகரணங்களை வழங்க, இந்த முகாமை நடத்த ஜோதிமணி வலியுறுத்தியிருக்கிறார். ஆனால், கரூர் மாவட்ட ஆட்சியர், ``கொரோனா பிரச்னை இருந்ததால், இந்த முகாமை நடத்தவில்லை. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக, பல்வேறு சேவைகளை ஒரே நேரத்தில் வழங்கும்விதமாக ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளி முகாம்களை நடத்துமாறு, அமைச்சர் அறிவுறுத்தியிருக்கிறார்.

பிரபுசங்கர்

அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மூலமாகவே மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. எனவே, தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, கரூர் மாவட்டத்திலிருக்கும் அனைத்து வட்டங்களிலும் இந்த ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகள் நல முகாம்கள் நடத்தப்படும். இதுபற்றிய தகவல் உங்களுக்கு உரிய நேரத்தில் தரப்படும். மேற்கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் தேவைப்பட்டால், தாங்கள் கோரியது போல் அலிம்கோ நிறுவனத்தின் தேர்வு முகாம்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று ஆட்சியர் பதில் கடிதம் அனுப்பியிருக்கிறார்.

ஆட்சியரின் பதிலால் கோபமடைந்த ஜோதிமணி, தலைமைச் செயலாளர் இறையன்புக்கு புகார் கடிதம் அனுப்பிவிட்டு, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது தொடர்பாக ஜோதிமணி இறையன்புக்கு அனுப்பியிருக்கும் கடிதத்தில்,

"நான் கரூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது, இந்த தொகுதியிலிருக்கும் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் என்னிடம் முன்வைத்த கோரிக்கையின்படி, மத்திய அரசின் சமூக நீதி அமைச்சகத்தின் மூலம், அலிம்கோ நிறுவனத்தின் மூலமாக விலையில்லா உதவி உபகரணங்கள் வழங்க முயற்சி எடுத்தேன். தனியார் நிறுவனங்களும் இதில் நிதியுதவி செய்கிறார்கள். எல்லா மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவிகள் கிடைக்க வேண்டும் என்பதை லட்சியமாக வைத்திருக்கிறேன். என் நீண்ட முயற்சிக்குப் பிறகு, கடந்த 23.12.2020 அன்று அலிம்கோ நிறுவனத்தின் மூலம் மாற்றுத்திறனாளி மக்களுக்கான தேர்வு முகாம்கள் நடத்த ஒப்புதல் பெறப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம், 16,17,18 ஆகிய தேதிகளில், கரூர் தொகுதியில் வரும் மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் முகாம்கள் நடத்தப்பட்டன. அதில், 640 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

போராட்டத்தில் ஈடுபடும் ஜோதிமணி

கொரோனா காரணமாகக் கரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களில் முகாம்கள் நிறுத்தப்பட்டன. பிறகு, கொரோனா தொற்றிலிருந்து இயல்பு நிலை திரும்பியபிறகு, கரூர் மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம் மூலமும், தொலைபேசி மூலமும் முகாம் நடத்த ஏற்பாடு செய்ய வலியுறுத்தி கோரிக்கை வைத்தேன். பலமுறை வலியுறுத்தினேன். தொடர்ந்து கடிதம் எழுதினேன். ஆனால், உடனடியாக முகாம் நடத்துவதற்குப் பதிலாக, தமிழக அரசின் பெயரைக் குறிப்பிட்டு, என் கடிதத்துக்கு அவர் அனுப்பிய பதில் கடிதத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.

Also Read: கரூர்: போக்குவரத்து ஆய்வாளர் உயிரிழப்பு; நேரில் சென்று நிவாரண தொகை வழங்கிய அமைச்சர்

அந்த கடிதத்தில், `அமைச்சர், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரே நேரத்தில் உபகரணங்கள் வழங்க, ஒருங்கிணைந்த முகாமை நடத்த வலியுறுத்தியிருக்கிறார். தமிழ்நாடு அரசின் திட்டம் மூலம், உபகரணங்கள் வழங்கும் முகாமும் நடத்தப்படும். அப்போது, உங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்படும்' என்று ஆட்சியர் குறிப்பிட்டிருந்தார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக, மிகவும் சிரமப்பட்டு இந்த திட்டத்தைப் பெற்றுச் செயல்படுத்த முயற்சி செய்து வருகிறேன். மத்திய அரசின் இந்த திட்டம் மற்ற தொகுதிகளில் செயல்படுத்தப்படும்போது, கரூர் மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்த முடியாது என்கிற கொள்கை முடிவை, ஒரு மாவட்ட ஆட்சித்தலைவர் எப்படி எடுக்க முடியும்?. தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றபோது, ரூ. 5 லட்சம் கோடி கடன் இருந்தது. இருந்தாலும், இத்தகைய நெருக்கடியிலும், தமிழக மக்களுக்குத் தமிழக முதல்வர் ஓயாமல் உழைத்து வருகிறார்.

போராட்டத்தில் ஈடுபடும் ஜோதிமணி

கடும் நிதிச்சுமை இருப்பதால், நிவாரண பணிக்கு நிதி வழங்குங்கள் என்று அவர் கோரிக்கை வைக்கிறார். இந்த நிலையில், மத்திய அரசின் நிதியில் கிடைக்கும் உபகரணங்களை வேண்டாம் என்று மறுத்துவிட்டு, மாநில அரசின் நிதியிலேயே திட்டத்தை செயல்படுத்திக்கொள்கிறோம் என்று மாவட்ட ஆட்சியர் பொறுப்பற்ற முறையில் செயல்படுவது, முதல்வரின் தூய்மையான நோக்கத்துக்கு, வேண்டுகோளுக்குக் களங்கம் ஏற்படுத்தி விடாதா?. மாவட்ட ஆட்சியரின் இந்த அதிகாரப்பூர்வ கடிதத்தின் மூலம், கரூர் மாவட்டத்தில் இனிமேல் மத்திய அரசின் திட்டங்கள், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் உட்பட அனைத்தையும் தமிழக அரசின் நிதியிலேயே செயல்படுத்தப்படும். தேவைப்பட்டால் மட்டுமே மத்திய அரசின் நிதி பெற்றுக்கொள்ளப்படும் என்ற கொள்கை முடிவு கரூர் மாவட்ட ஆட்சியரால் எடுக்கப்பட்டிருக்கிறதா?.

இது, லட்சக்கணக்கான மக்களால், நம்பிக்கையோடு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை, தன் பணியைச் செய்யவிடாமல் தடுப்பது அல்லவா?. கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மணப்பாறை, வேடச்சந்தூர், விராலிமலை ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய, திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இந்த திட்டத்தை முறையாகச் செயல்படுத்தும்போது, கரூர் மாவட்ட ஆட்சியர் மட்டும் ஏன் மறுக்க வேண்டும்?. தற்போதைய ஆட்சித்தலைவர் மீது, மேசையிலிருந்து குறைந்தபட்சம் 1 - 2 சதவிகிதம் வரை கட்டாய வசூல் முடிந்த பிறகுதான், கோப்புகள் நகரும் என்று பரவலாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. அரசு முறையான விசாரணைக்கு உத்தரவிட்டால், உண்மை வெளிப்படும்.

போராட்டத்தில் ஈடுபடும் ஜோதிமணி

இந்த முகாமை நடத்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். மிகுந்த பொறுப்பும், மக்கள் நலனில் ஆழ்ந்த அக்கறையும் கொண்டிருக்கும் இந்த அரசு, பொறுப்பற்று, முறைகேடாகச் செயல்படும் கரூர் மாவட்ட ஆட்சியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஜோதிமணி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட போது, காங்கிரஸின் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த எம்.பி ஒருவர், ஜோதிமணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி செய்யவிடாமல் தடுக்கிறார் என்று போராட்டத்தில் குதித்தது, சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read: `நாடாளுமன்ற செயல்பாடுகளில் பணியாற்ற வாய்ப்பு!' - இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜோதிமணிfrom மாவட்ட செய்திகள் https://ift.tt/3HPBMCP