தமிழ்நாட்டில் தி.மு.க வளர்ச்சி அடைவதற்கு, நூலகங்களும் வாசிப்பு பழக்கமும் முக்கிய பங்கு வகித்திருக்கிறது. குறிப்பாக, பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, தற்போதைய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிகாலம் வரையிலும் தொன்றுதொட்டு புத்தகங்களுக்கு தனி முக்கியத்துவமும், மரியாதையும் அளிக்கப்பட்டு வருகிறது. தன்னை மரியாதை நிமித்தமக சந்திக்க வருபவர்கள், பூங்கொத்துகளுக்கு மாற்றாக, புத்தகங்களை மட்டுமே பரிசாக வழங்க வேண்டும் என அண்மையில் முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இது ஓரளவுக்கு கடைப்பிடிக்கப்பட்டும் வருகிறது.

முதல்வர் ஸ்டாலின்

இந்த நிலையில்தான், தமிழக முதலமைச்சரின் சொந்த மாவட்டமான திருவாரூரில் இருக்கும் ஒரு அரசு நூலகத்தின் பரிதாபகரமான நிலை, அந்த பகுதி புத்தக வாசிப்பாளர்களையும், சமூக ஆர்வலர்களையும் மிகுந்த வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது. தி.மு.க ஆட்சிக்காலத்தில், அதுவும், புத்தகங்களின் மீது உணர்வுப்பூர்வமான நேசம் கொண்ட தி.மு.க தலைவர் கருணாநிதி பிறந்த ஊரில் புத்தகங்களுக்கு இப்படி ஒரு அவலநிலையா என ஆதங்கப்படுகிறார்கள் அந்த பகுதி மக்கள்.

திருவாரூர் மாவட்டம் கொராடாச்சேரியில் செயல்பட்டு வரும் அரசு நூலகம் ஒன்றின் கட்டிட மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால், மழைநீரில் புத்தகங்கள் நனைந்து அழிந்து கொண்டிருப்பதாகவும், அரசு அதிகாரிகள் யாரும் அதைக் கண்டுகொள்ளவில்லை என்றும் அவர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

தி்ருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பேரூராட்சி வளாகத்துக்கு உட்பட்ட பகுதியில் தமிழக அரசின் கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. கொராடாச்சேரி, அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் இந்த நூலகத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில்தான், கடந்த சில ஆண்டுகளாக இந்த கட்டடம் படிபடியாக சேதமடைய தொடங்கியிருக்கிறது. குறிப்பாக, இந்த கட்டடத்தின் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கொண்டே வருகிறது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய பகுதி மக்கள், ``இந்த நூலக கட்டடத்தை சீரமைக்கணும், இல்லைனா, வேற புது கட்டடம் கட்டி அங்க நூலகத்தை கொண்டுப் போகணும்னு தொடர்ச்சியாக வலியுறுத்திக்கிட்டேதான் இருக்கோம். ஆனால் அரசு அதிகாரிகள் கேட்கவே இல்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் உடனடியா இதுக்கு விடிவுகாலம் பொறந்துடும்னு ரொம்ப நம்பிக்கையா இருந்தோம். இது தமிழக முதலமைச்சரோட சொந்த மாவட்டம். அதுமட்டுமல்லாமல். தி.மு.க-வைச் சேர்ந்த பூண்டி கலைவானன் தான் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். ஆனாலும் இந்த நூலக கட்டடம் சீரமைக்கப்படாமலே இருக்கு.

சிதிலமடைந்த நூலக கட்டடம்.

இங்க பல துறைகளை சேர்ந்த ஏராளமான அரிய புத்தகங்கள் எல்லாம் இருக்கு. எந்த நேரத்துல வேணும்னாலும் இந்த கட்டடம் இடிஞ்சி விழக்கூடிய நிலையில இருக்கு. தொடர்ச்சியா மழை பெஞ்சதுனால, மேற்கூரையில் இருக்குற விரிசல்கள் வழியா மழைநீர் உள்ளார வந்து புத்தகங்கள் நனைஞ்சி, அழிஞ்சிக்கிட்டு இருக்கு. புத்தகங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஒரு பக்கம்னா, நூலகத்துக்கு புத்தகங்கள் படிக்க வரக்கூடிய பொதுமக்கள், மாணவர்களோட உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை இருக்கு. மழை தண்ணீர், நூலகத்துக்குள்ளார வர்றதுனால, புத்தகங்களை படிக்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டுக்கிட்டு இருக்கோம். புது கட்டடம் கட்டினால் தான் இந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். இதுக்கு அதிகாரிகள் குறிப்பாக மாவட்ட நிர்வாகம், உடனடியாக நடவடிக்கை எடுக்கணும். அதோடு, மழையில் நனைஞ்சி சேதமான புத்தகங்களை ஈடு செய்யக்கூடிய வகையில் புதிய புத்தகங்களை வரவழைச்சி இங்க வைக்கணும். இதையெல்லாம் செஞ்சா இந்த நூலகம் புத்துயிர் பெறும்" என்றனர்.

இதே திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம், பெருந்தரக்குடி, விளமல் உள்ளிட்ட ஊர்களிலிருக்கும் நூலகங்களும் சிதிலமடைந்த இடிந்து விழும் நிலையில் இருக்கின்றன. இது குறித்து மாவட்ட நூலக அலுவலர் ஆண்டாளிடம்கேட்டோம். ``இதெல்லாம் 20 வருஷங்களுக்கு முன்பு கட்டப்பட்டகட்டடங்கள். புதிய கட்டடம் கட்ட போதுமான நிதியில்லை. தமிழக அரசின் உயர் அலுவலர்களின் கவனத்துக்கு இதை கொண்டு சென்றிருக்கிறோம்" என்றார்.

Also Read: திருவாரூர்: மரம் வளர்ப்பு, புத்தக வாசிப்பு, பாரம்பரியக் கலைகள் கற்றுத்தரும் குழந்தைகள் கற்றல் மையம்!from மாவட்ட செய்திகள் https://ift.tt/3DJKhwJ