கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் கனகராஜ் (வயது: 56). இவர், நேற்று முன் தினம் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலிருக்கும், வெங்ககல்பட்டி மேம்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக அதிவேகமாகச் சென்ற ஒரு வேனை தடுத்து நிறுத்த முயன்றார். ஆனால், அவர் தடுத்தும் நிற்காமல் வந்த அந்த வேன் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில், படுகாயமடைந்த கனகராஜ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அதையடுத்து, இந்த விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வேன் டிரைவரை கண்டறிய, மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

கனகராஜ்

மேலும், சாலையோரத்திலிருக்கும் வீடுகளில், கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், விபத்து ஏற்படுத்திய நேரத்தில் 13 வாகனங்கள் அந்த வழியாகச் சென்றது தெரியவந்தது. மேலும், விபத்தை ஏற்படுத்திய அந்த வேன் கரூரில் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணிபுரியும் ஆள்களைக் கிராமங்களிலிருந்து வேலைக்கு அழைத்து வரும் வேன் என்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். கரூர் மாவட்டம் தோகைமலை அருகிலிருக்கும் கீரனூரைச் சேர்ந்த சுரேஷ் என்ற இளைஞர் அந்த வேனை ஓட்டி சென்று, விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த வேன் குறித்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Also Read: `பாலியல் தொல்லையால சாகுற கடைசி பொண்ணு நானாக தான் இருக்கனும்’ -கரூர் பள்ளி மாணவியின் உருக்கமான கடிதம்

அதன் அடிப்படையில், போலீஸாரின் பல மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு அந்த வேன் தோகைமலை அடுத்த கழுகூர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அதையடுத்து, போலீஸார் அந்த வேனை பறிமுதல் செய்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தலைமறைவாக இருக்கும் வேன் டிரைவர் சுரேஷை வலைவீசித் தேடி வந்தனர். இந்த நிலையில், வேன் டிரைவர் சுரேஷ் நேற்று (24-ம் தேதி), திண்டுக்கல் ஜே.எம் - 1 நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

கனகராஜ் குடும்பத்துக்கு உதவி

கரூரில் வட்டார போக்குவரத்து அலுவலக, மோட்டார் வாகன ஆய்வாளர், வேன் மோதி உயிரிழந்த சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதையடுத்து, தமிழக அரசு, உயிரிழந்த வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கனகராஜ் குடும்பத்துக்கு, ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்தது. இதனைத்தொடர்ந்து, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கோயமுத்தூரிலிருக்கும் கனராஜின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னதோடு, தமிழக அரசு அறிவித்த ரூ. 50 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/32ldGiT