தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக, மாவட்டம் முழுவதும் 45 கூரை வீடுகளும், 14 ஓட்டு வீடுகளும் இடிந்து சேதமடைந்திருக்கின்றன. இன்னும் மழை நீடிக்கும் என்று கூறப்படும் நிலையில், மாவட்டத்தில் இரண்டு இடங்களில் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் ஐந்து வயது சிறுவன், 85 வயது மூதாட்டி என இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இடிந்து விழுந்த வீடு

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே சின்னமுத்தாண்டிப் பட்டியைச் சேர்ந்தவர் சலீம் (44). டீ கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் மனைவி ஷகிலாபானு (40). இந்த தம்பதிக்கு ஒரு மகள், ஒரு மகன். இருவரும் குழந்தைகள். இந்த நிலையில், தொடர் மழை காரணமாக, சலீம் வீட்டுக்கு எதிரே சில தினங்களாக மழை நீர் தேங்கிக் காணப்பட்டு வந்திருக்கிறது.

அதனால், வீட்டின் மண் சுவர் மழையால் ஊறி இருந்திருக்கிறது. இந்த நிலையில், நேற்றிரவு வீட்டின் முன் பக்கச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது, சுவர் ஓரத்தில் படுத்திருந்த சலீமின் மகன் அசாருதீன் மேல் சுவர் விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்து விட்டார். இடிபாடுகளின் சிக்கிக் கிடந்த சலீமை அக்கம் பக்கத்தினர் சடலமாக மீட்டனர். மகன் இறந்து விட்டான் என்பதையறிந்து சலீமும், அவர் மனைவியும் கதறி அழுதார்கள்.

மழை நீர்

பால்வாடியில் படித்துக் கொண்டிருந்த அசாரூதீன் சமீபத்தில் தான் அருகிலிருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு சேர்ந்திருந்தான். ``நேற்று தான் முதன் முதலாகப் பள்ளிக்குச் சென்றுவிட்டு வந்தான். எங்கிட்ட அம்மா நான் படிச்சு நல்ல வேலைக்கு போன பிறகு நம்ம கஷ்டம் தீர்ந்திரும் கவல பாடாதம்மானு... ஸ்கூல் முடிஞ்சு வந்த பிறகு சொன்னான். ஆனா ஒரு நாள்ல அவன் படிப்பும், ஆயுசும் முடிஞ்சு போயிருச்சே!" என்று கதறிய சஷகிலாபானுவை தேற்ற முடியாமல் தவித்தனர் அவர் உறவினர்கள்.

இதே போல, பேராவூரணி அருகே பூங்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த வைத்தி என்பவரின் மனைவி சிவபாக்கியம் (85), தன் இளைய மகன் ரவிச்சந்திரனின் மாடி வீட்டு அருகே, தனியாகக் குடிசை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், தொடர் மழையில் வீட்டின் மண் சுவர் இடிந்து, சிவபாக்கியம் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Also Read: தஞ்சாவூர்: `5,000 வாழைல ஒன்னு கூட மிஞ்சல!' - திடீர் மழை பாதிப்பால் கலங்கும் விவசாயிfrom மாவட்ட செய்திகள் https://ift.tt/3FSlmb7