திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஏழை, எளிய மக்களுக்கு மிகவும் குறைந்த கட்டணத்திலும், இலவசமாகவும் மருத்துவம் பார்த்து வந்த மனிதநேய மருத்துவர் அசோக்குமாரின் தீடீர் மரணச் செய்தி, இப்பகுதி மக்களை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது. இவரைப் பற்றிய செய்திகள், மக்களை நெகிழ்ச்சியிலும் வியப்பிலும் ஆழ்த்தக்கூடியவை.

மன்னார்குடி எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் மருத்துவமனை நடத்தி வந்தவர் டாக்டர் அசோக்குமார். அறுவை சிகிச்சை செய்வதில் மிகவும் நிபுணத்துவம் பெற்ற டாக்டர் அசோக்குமார், தனது மருத்துவமனையில் காய்ச்சல், இருமல், வயிற்றுவலி போன்ற பாதிப்புகளுக்கு பொது மருத்துவமும் பார்த்து வந்தார்.

டாக்டர் அசோக்குமார்

Also Read: பெண் குழந்தைகள் புகார் அளிக்க மாவட்டந்தோறும் வாட்ஸ்அப் எண்கள்; அமைச்சர் வெளியிட்ட தகவல்!

இவரது மருத்துவமனையில் ஏழை, எளிய மக்களின் கூட்டம் அலைமோதும். சுமார் 40 ஆண்டுகளாக இப்பகுதி மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த இவர், கடந்த ஆண்டு வரையிலுமே கூட 20 ரூபாய்தான் கட்டணம் வாங்கினார். இந்த ஆண்டு இவர் உயர்த்திய தொகை.. 10 ரூபாய்!

இந்தக் குறைந்த கட்டணத்தையும் கூட தர இயலாத நிலையில் உள்ளவர்களுக்கு இலவசமாகவும் மருத்துவம் பார்த்தார். மற்ற மருத்துவர்கள் செய்யத் தயங்கும் மிகவும் சவாலான அறுவை சிகிச்சைகளையும் கூட மிக லாகவமாகவம் சமார்த்தியமாகவும் செய்து முடித்த டாக்டர் அசோக்குமார், அதற்கும் மிகக் குறைந்த கட்டணமே வாங்கியதாக நெகிழ்ச்சியோடு நினைவுகூர்கிறார்கள் மக்கள்.

நாடோடியின மக்கள் போன்ற மிகவும் விளிம்பு நிலையில் உள்ள ஏராளமான பெண்களுக்கு இவரது மருத்துவமனையில் பிரசவம் நடைபெறுவதென்பது இயல்பான, வாடிக்கையான நிகழ்வாக இருந்தது.

தினமும் காலையிலிருந்து இரவு வரையிலும் நூற்றுக்கும் அதிமானவர்களுக்கு மருத்துவம் பார்த்தாலும் கூட, கொஞ்சமும் சலிப்படையமாட்டார் டாக்டர் அசோக்குமார். இன்முகத்துடனே நோயாளிகளை அணுகுவார்.

ஒரு முறை டாக்டர் அசோக்குமாரது மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மிகவும் ஏழ்மையான நோயாளிக்கு அவசரமாக ரத்தம் தேவைப்பட்டிருக்கிறது. தனது ரத்தம் ஒத்துப்போனதால், உடனடியாக தன் ரத்தத்தையே அந்த நோயாளிக்கு செலுத்தி அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்ததாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.

டாக்டர் அசோக்குமார்

மன்னார்குடி மக்கள் இவரை `மனிதநேய மருத்துவர்' என்றே பாசத்தோடு அழைத்து வந்தார்கள். இதற்கு காரணம், குறைந்த கட்டணம் மற்றும் இலவசமாக மருத்துவம் அளித்ததால் மட்டுமல்ல... இப்பகுதியில் உள்ள ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்காகவும் நிறைய உதவிகள் செய்தவர் டாக்டர். மேலும் யார் என்ன உதவி கேட்டு வந்தாலும் அள்ளி அள்ளிக் கொடுத்தவர். ஏழை, எளிய மக்களுக்காக பல முறை இலவச கண் சிகிச்சை முகாம்களை நடத்தியுள்ளார்.

மன்னார்குடி மக்களின் இதயத்தில் நிறைந்திருந்த டாக்டர் அசோக்குமார், நேற்று காலை தீடீர் மாரடைப்பால் மரணம் அடைந்த துயர செய்தி இப்பகுதி மக்களை நிலைகுலையச் செய்துள்ளது. மருத்துவமனை ஊழியர்களும் கண்ணீரில் கதறுகிறார்கள்.

Also Read: கிராம மக்களிடம் ஒப்படைக்கப்பட்ட கான்கிரீட் வீடுகள்; `கஜா' துயர்துடைத்த விகடன் வாசகர்கள்!

இவரது மனைவியும் மிகுந்த ஈகை குணம் கொண்டவர் என்பதால்தான், டாக்டர் அசோக்குமாரால் தனது மனிதநேய மருத்துவ சேவையை எந்தவித தங்கு தடையும் இன்றி தனது இறுதி மூச்சு வரை தொடர முடிந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் அசோக்குமாரின் வாழ்க்கையும் மருத்துவ சேவையும் இளம் தலைமுறை மருத்துவர்கள் பின்பற்ற வேண்டிய பாடம்.from மாவட்ட செய்திகள் https://ift.tt/3nOap3W